கடன் இலங்கையை சர்வதேசத்திடம் அடகு வைக்கவும் பிச்சையெடுக்கவும் வைத்துள்ளது - சுரேஷ் பிரேமச்சந்திரன் - Yarl Voice கடன் இலங்கையை சர்வதேசத்திடம் அடகு வைக்கவும் பிச்சையெடுக்கவும் வைத்துள்ளது - சுரேஷ் பிரேமச்சந்திரன் - Yarl Voice

கடன் இலங்கையை சர்வதேசத்திடம் அடகு வைக்கவும் பிச்சையெடுக்கவும் வைத்துள்ளது - சுரேஷ் பிரேமச்சந்திரன்சிங்கள-பௌத்த மேலாதிக்கவாதத்தின் மூலம் ஆட்சியைத் கைபப்ற்றி தக்க வைத்துக்கொள்ளவதற்காக இலங்கையின் ஆட்சியாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாகவே இன்று மக்களின் ஆணையை மீறி சர்வதேசத்திடம் அடகு வைப்பதற்கும் பிச்சையெடுப்பதற்கும் இலங்கையைத் தள்ளியுள்ளது என்று இலங்கையின் இன்றைய பொருளாதார நிலைகுறித்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிறேமச்சந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.
நாட்டின் இன்றைய பொருளாதார நிலைகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் மிகமோசமாக வீழ்ச்சியடைந்திருக்கிறது என்பதை நாட்டு மக்களும் சர்வதேச சமூகமும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.
ஆளுந்தரப்பு அமைச்சர்களே மக்களை அச்சுறுத்தும் வகையிலும் எச்சரிக்கும் வகையிலும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி குறித்து பேச ஆரம்பித்திருக்கிறார்கள். எதிரணியிலிருக்கக்கூடியவர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு புதிய தேர்தலுக்குப் போகுமாறு வலியுறுத்துகின்றார்கள்.
ஆனால் அரசாங்கம் பொருளாதார வீழ்ச்சிக்கு கொவிட்19 நோய்த்தொற்றுதான் காரணம் என்று ஒரே மந்திரத்தையே உச்சாடனம் செய்கிறது.
ஆனால் உண்மையான காரணம் அதுமாத்திரம்தானா? இந்த நாட்டில் கடந்த முப்பது ஆண்டுகால அழிவு யுத்தத்திற்கு இவர்கள் செலவிட்ட ஆயிரக்கணக்கான பில்லியன் டொலர்கள் பொருளாதார வளர்ச்சிக்காகப் பாவிக்கப்பட்டிருந்தால் இந்த நாடு சொர்க்கபுரியாக மாறியிருக்கும். இதற்கு மாறாக இனவாதமும் மேலாதிக்க சிந்தனையும் பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சினைக்கு அழிவு யுத்தத்தையே அரசாங்கம் தீர்வாகக் கொண்டிருந்தது. இலங்கை அரசு தமிழ் மக்கள் மேல் கட்டவிழித்துவிட்ட யுத்தத்தால் அவர்கள் சாதாரணமாகப் பாதிக்கப்படவில்லை.
பலபத்தாண்டுகளாக அவர்கள் அறிவிக்கப்படாத பொருளாதாரத் தடையின்கீழ் வாழ்ந்துவந்தார்கள்.
இதன் உச்சகட்டமாக இறுதி யுத்த காலப்பகுதியில் தாலிக்கொடியை விற்று பால்மா வாங்கியதும், பொது இடங்களில் கஞ்சித்தொட்டியை வைத்து மக்களுக்குக் கஞ்சி ஊற்றியதும், சிறிய சத்திரசிகிச்சை மூலம் குணப்படுத்த வேண்டிய காயங்களை மருந்தின்றியும் உரிய மருத்துவமனைகளின்றியும் அங்கங்களை அறுத்தெறிந்ததும் நாங்கள் அனுபவித்த சொல்லொணா துன்பங்கள். இன்று அதே நிலை ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் வந்துவிடுமோ என்று நாம் கவலையடைகின்றோம்.
இலங்கையின் சமகால பொருளாதார வீழ்ச்சியென்பது வெறும் கொவிட் 19இனால் மட்டும் ஏற்பட்டது அல்ல.
இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து உள்நாட்டில் ஆதிக்க சக்திகள் ஏற்படுத்திக்கொண்ட இனவாதங்களும் ஒடுக்குமுறைகளும் சமச்சீரற்ற பொருளாதார முன்னெடுப்புகளும் இதை வறிய நாடு என்ற பட்டியலுக்குள்ளேயே வைத்துக்கொண்டிருந்தது.
யுத்தம் முடிவடைந்ததற்குப் பின்னரும் இன்றுவரையில் பாதுகாப்பு செலவீனம் என்பது யுத்தகாலத்திலும் பார்க்க அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இதைப்பற்றி பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பியபோது யுத்தத்திற்காக வாங்கிய கடன்களை அடைக்க வேண்டியிருக்கிறது என்றும் அதற்காகவே பாதுகாப்புச் செலவீனம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டது. யுத்தம் முடிந்து பன்னிரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் யுத்தத்திற்காக வாங்கிய கடன்கள் அடைக்கப்பட்டுவிட்டதா என்ற கேள்வியும் எழுகின்றது.
இலங்கை போன்ற சிறிய நாட்டில், ஏறத்தாழ மூன்று இலட்சம் இராணுவமும், இதனைவிடவும் கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் ஆளணியும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. ஆளும் தரப்போ எதிர்தரப்போ இத்தகைய செலவீனங்கள் குறைக்கப்பட வேண்டும் என்று எப்பொழுதாவது பேசியிருக்கின்றார்களா?
உலகநாடுகள் அனைத்திலும் கடன் பெறுவதற்கான முயற்சிகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. கடன் வாங்கி, வாங்கிய கடனை கட்டுவதும் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டிவதற்காகக் கடன் வாங்குவதுமாகத்தான் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடு இருக்கின்றது. சர்வதேச நாணய நிதியத்தை அணுகுவதா வேண்டாமா என்ற பட்டிமன்றமும் நடைபெற்றுவருகின்றது.
இப்பொழுது பங்களாதேஷ், இந்தியா, சீனா தொடக்கம் உலக நாடுகள் முழுவதிலும் பிச்சைப் பாத்திரம் ஏந்தி அலைகிறார்கள். புத்த பகவான் பிக்குகள் பிச்சைப் பாத்திரம் ஏந்தியே மக்களிடமிருந்து உணவைப் பெறவேண்டும் என்று போதித்துள்ளார். இன்று பௌத்த மேலாதிக்கத்தில் திளைத்திருக்கும் இலங்கை அரசாங்கம் ஒட்டு மொத்த மக்களையும் பிச்சைப்பாத்திரம் ஏந்த வைத்துள்ளது.
இன்று எல்லா வகையிலும் தோல்வியுற்ற ஒரு அரசாங்கமாக மாத்திரமல்லாமல், நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான எத்தகைய வழியுமின்றி தவிக்கும் வீழ்ச்சியடைந்த ஒரு அரசாங்கமாகவும் இன்றைய அரசாங்கம் மாறியிருக்கிறது. கடந்த ரணில்-மைத்திரி ஆட்சிக்காலத்தில் 'உங்களால் நாட்டை ஆட்சி செய்ய முடியாவிட்டால் ஆட்சியை எங்களிடம் ஒப்படையுங்கள் நாங்கள் நாட்டை பொருளாதார ரீதியில் வளப்படுத்துகிறோம்' என்று சவால் விடடிருந்தார்கள்.
இன்று அவர்களே மக்கள் ஆதரவுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்துள்ளனர். இவர்களால் நாட்டை சோமாலியாவைவிட மோசமான நிலைக்குத் தள்ளியதைத் தவிர வேறு எதைச் சாதிக்க முடிந்தது? இந்த நாட்டை வளப்படுத்த வேண்டும், பொருளாதார ரீதியாக முன்னேற்ற வேண்டும் என்று கருதினால் பல்வேறுபட்ட மாற்றங்களைச் செய்வதற்கு இலங்கை அரசும், எதிர்ணியினரும் தயாராக இருக்க வேண்டும்.
முதலாவதாக இது சிங்கள பௌத்த நாடு என்ற மேலாதிக்க சிந்தனையை விடுத்து, அனைத்து மக்களும் சமத்துவமாக வாழ்வ்தற்கான அடிப்படைகளை உருவாக்க வேண்டு;ம்.
இரண்டாவதாக இனங்களிடையேயும், மதங்களிடையேயும், உழைக்கும் வர்க்கத்தினரிடையேயும் மோதல்களை உருவாக்கி அவற்றினூடாக வாக்குகளைக் கபளீகரம் செய்யும் நிலைவரங்களைக் கைவிட வேண்டும். இந்த நாட்டில் இருக்கக்கூடிய தேசிய இனங்கள் தங்கள் அபிவிருத்திகளைத் தாமே செய்யக்கூடிய வகையில் அவர்களுக்கான அதிகாரங்களை வழங்க வேண்டும்.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் தடையாக இருக்கக்கூடிய முப்படைகளின் அதிகரிப்பை நிறுத்துவதுடன் அவற்றை இயன்றவரை எவ்வாறு குறைக்கலாம் என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும். இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கைகளை நாட்டு நலனுக்கேற்பவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றவகையிலும் உருவாக்கிக் கொள்ள வேண்டுமே தவிர, தரகுப் பணம் வருகிறதே என்பதற்காக நாட்டை வல்லரசுகளிடம் விற்றுவிடக்கூடாது. ஆகவே இலங்கையின் பொருளாதாரத்தைத் திட்டமிடுபவர்கள் யாராக இருந்தாலும், மேற்கண்ட விடயங்கள் அனைத்தும் கவனத்தில் எடுக்கப்பட்டு திட்டங்கள் தயாரிக்கப்படாவிட்டால், உலக நாடுகளிடம் பிச்சை எடுப்பதென்பது தவிர்க்க முடியாததாகிவிடும்.
ஆட்சி மாறவேண்டும், பொருளாதாரம் வளம்பெற வேண்டும் என்பதிலும் நாங்கள் ஒருமித்த கருத்துள்ளவர்களாகவே இருக்கின்றோம். வரப்போகின்றவர்கள் எவ்வாறு இதனை மாற்றியமைக்கப்போகின்றார்கள் என்பதுதான் கேள்வி. வெறுமனே ஆட்சி மாற்றம் மட்டும் பிரச்சினைக்குத் தீர்வாகாது. இந்த நாட்டு மக்கள் பசி, பட்டினி, பஞ்சம் ஆகியவற்றிலிருந்து காப்பாற்றப்படவேண்டும். அதற்கு இன, மத, மொழி வேறுபாடின்றி நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். சகல தொழிற்சங்கங்களும் ஒன்றிணைய வேண்டும்.
நாட்டில் இன்று எரிவாயு தட்டுப்பாடு, எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு, அடுத்துவரும் வாரங்களில் எரிபொருள் இறக்குமதி பாதிக்கப்படக்கூடிய சூழல், அதனால் ஏற்படக்கூடிய மின்சார வினியோகத் தடை, தற்போது சமையல் எரிவாயுவிற்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் மண்ணெண்ணெய்க்கும் வரப்போகும் தட்டுப்பாடு, போன்றவற்றால் அரச ஊழியர்களும் தனியார்துறை ஊழியர்களும் உரிய நேரத்திற்குப் பணிக்கு வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்படப்போகின்றது.

இந்த அபாயங்களைப் புரிந்துகொண்டு சகல அரசியல் கட்சிகளும் செயற்படவேண்டும் என தெரிவித்தார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post