இலங்கையின் தலையெழுத்தை முன்னாள் பிரதமர் ரணிலால் மாத்திரமே மாற்ற முடியும் - ஐ.தே.க - Yarl Voice இலங்கையின் தலையெழுத்தை முன்னாள் பிரதமர் ரணிலால் மாத்திரமே மாற்ற முடியும் - ஐ.தே.க - Yarl Voice

இலங்கையின் தலையெழுத்தை முன்னாள் பிரதமர் ரணிலால் மாத்திரமே மாற்ற முடியும் - ஐ.தே.கதற்போதைய விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் சிறுவர்களின் நல்வாழ்வில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

வறுமையில் வாடும் குடும்பங்கள் தமது பிள்ளைகளுக்கு உணவளிக்க முடியாமல் தவிப்பதால் எதிர்காலத்தில் ஊட்டச்சத்துக் குறைபாட்டை எதிர்கொள்ள அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும் எனவும் அக்கட்சி அறிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான வஜிர யாப்பா அபேவர்தன, ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான முன்னைய ஆட்சிக்காலத்தில் நாடு அரிசியில் தன்னிறைவு பெற்றிருந்தது என்றார்.

எவ்வாறாயினும், தற்போது இந்தியா மற்றும் பல நாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெரிய வெங்காயம், எலுமிச்சை , தக்காளி, குடை மிளகாய் , கரட், போஞ்சி , கத்தரி, பூசணி, பாகற்காய், வெண்டைக்காய் மற்றும் கீரைகள் போன்றவற்றின் விலைகள் அதிவேகமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பொது மக்களுக்கு ஆரோக்கியமான உணவை கொள்வனவு செய்ய முடியாது எனவும், தற்போதைய அரசாங்கம் குறுகிய காலத்துக்குள் மக்களை நாட்டை விட்டு விரட்டியடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமது அரசாங்கம் அர்த்தமுள்ள அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் போது அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை நிர்வகிக்கக்கூடிய மட்டத்தில் வைத்திருந்ததாகவும் அவர் வலியுறுத்தினார்.

தற்போதைய நிர்வாகத்தின் திறமையின்மையினால் இரண்டு வருடங்களில் நாடு பாரிய அழிவை நோக்கிச் சென்றுள்ளது.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த வேளை தோல்வியடைந்த பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாடு அனைத்துத் துறைகளிலும் பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும், எனவே உண்மையில் நாட்டை வழிநடத்தி இலங்கையை வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்ற யாரால் முடியும் என்பதை பொதுமக்கள் அடையாளம் காண வேண்டும்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் மாத்திரமே நாட்டின் தலையெழுத்தை மாற்ற முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

கட்சி வேறுபாடுகள் இன்றி அனைத்துப் பிரிவினரும் பொதுவான வேலைத்திட்டத்தின் கீழ் அணி திரண்டு இலங்கையில் நிலையான அபிவிருத்தியை உறுதிப்படுத்துவார்கள் என தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post