- Yarl Voice - Yarl Voice



நுவரெலிய மாவட்ட பிரதேச செயலகங்கள் தொடர்பாகவும் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி தொடர்பாகவும் முழு இலங்கைக்கும் தெரியப்படுத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மயில்வாகனம் திலகராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
நுவரெலியா மாவட்டத்தில் இருந்திருக்கக் கூடிய அதிகாரம் சார்ந்த பிரச்சினை குறித்து வடக்கிலிருந்து தெற்கு வரை கையெழுத்து இயக்கத்தை நாம் சுதந்திர தினமான இன்று ஆரம்பித்துள்ளோம்.

மலையக அரசியல் அரங்கம் அரசியல் உரையாடல்களை ஏற்படுத்தி ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கும் வாய்ப்பை வழங்கல், மாவட்ட எல்லைகளைக் கடந்த மலையக அரசியல், அடுத்த தலைமுறைக்கான அரசியல் பாலம் என்ற நான்கு நோக்கங்களைக் கொண்டு செயற்படுகின்றது.

மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு பின்னர் வழங்கப்பட்டாலும் அரசியல் அதிகாரமோ நிர்வாக அதிகாரமோ மறுக்கப்பட்ட நிலையிலேயே உள்ளார்கள்.அவற்றை நிவர்த்திக்க பிரதேச செயலகங்களின் சேவைகளை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் அங்கே மிக குறைந்த அளவில் இருக்கக்கூடிய பிரதேச செயலகங்களில் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும். சுமார் எழு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை வாழும் இடத்தில் ஐந்து பிரதேச செயலகங்கள் மாத்திரமே உள்ளது. யாழ்ப்பாணத்தில் ஊர்காவற்றுறைக்கு ஒரு தனியான பிரதேச செயலகம் இருக்கின்றது. அம்பகமுவவில் இரண்டு லட்சம் மக்களை கொண்டவர்களுக்கு ஒரு பிரதேச செயலகம் காணப்படுகின்றது.

நான் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட காலத்தில் 2016ஆம் ஆண்டு சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் முன்வைத்தபோதுபோது அப்போதைய அமைச்சர் வஜிர அபேவர்த்தன அதனை ஏற்று ஐந்து புதிய பிரதேச செயலகங்களை உருவாக்க சம்மதித்தார்.

2018ஆம் ஆண்டு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு 2019 அக்டோபர் 29ஆம் திகதி பிரதேச செயலக அதிகரிப்பு செய்யப்பட்டு நாட்டிலே அரச வர்த்தமானி வெளியிடப்பட்டது. நுவரெலியாவில் 5 பிரதேச செயலகமும் காலி மாவட்டத்திற்கு 3 பிரதேச செயலகமும் இரத்தினபுரியில் ஒரு பிரதேச செயலகம் என முழுமையான பிரதேச செயலகத்திற்காக வர்த்தமானி வெளியீடு செய்யப்பட்டாலும் கூட மிகவும் பாரபட்சமான முறையில் காலியிலே திறக்கப்பட்டு மூன்று பிரதேச செயலகங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. ஆனால் அது மறுக்கப்பட்டு நுவரெலியா மாவட்டத்தில் வெறுமனே இரண்டு உப பிரதேச செயலகங்கள் மாத்திரம் இந்த அரசு திறந்து வைத்துள்ளது. 

அதனை திறந்துவைக்கின்ற முகவர்களாக மலையக தலைவர்கள் இராஜங்க அமைச்சர் என்று சொல்வோர் செய்வது மிகுந்த வேதனைக்குரியது. இந்த பிரச்சினையை நாம் பல மட்டங்களிலும் கொண்டு சென்றோம். நுவரெலியா மாவட்டம் முழுவதும் சென்று கையெழுத்து சேகரித்து மாவட்ட செயலாளர் ஊடாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு வழங்கியிருந்தோம்.
மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்திருந்தோம்.

இந்த விடயம் தனியே மலையக தமிழ் மக்களுக்கோ நுவரெலிய மாவட்ட மக்களுக்கு மட்டுமல்ல இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட அரசாணையை அரசே மறுக்கின்ற ஒரு பாரதூரமான செயற்பாடு என்பதை முழு உலகுக்கும் வழிப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

அதனை நாங்கள் அடுத்த கட்டத்தை கொண்டு செல்வதற்காக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிலே முன்வைக்கப்பட்ட இந்த பிரச்சினையில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர்,உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர்,மாவட்ட செயலாளர் ஆகியோருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளோம்.

ஜனநாயக மறுப்பை நாடு முழுவதும் உள்ள சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் இன மத பிரதேச வேறுபாடு கடந்து சமூகத்தைக் ஏற்பட்டுள்ள அநீதியை தட்டிக் கேட்க வேண்டும்.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிடம் இதனை வலியுறுத்த இந்த கையெழுத்து இயக்கத்தை 74-வது சுதந்திர தினத்தில் வடக்கில் ஆரம்பித்துள்ளோம். எதிர்வரும் 16ஆம் திகதி தெற்கின் மாத்தறையிலே நிறைவுசெய்ய நாங்க முயற்சிக்கின்றோம். இதனூடாக ஒரு தேசிய கவனத்தை பெற்று நுவரெலிய மாவட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி முழு இலங்கைக்கும் தெரிய வேண்டும் என நாம் பகிரங்கமாக வேண்டிக் கொள்கிறோம்.

இந்த விடயம் என்பது மலையகத்தின் அதிகாரப் பகிர்வு சார்ந்த பிரச்சனை. ஏற்கனவே நுவரெலிய மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து பிரச்சினை தொடர்பாக பல தரப்பிலிருந்து ஆதரவு குரல் வந்த போதும் கூட வடக்கிலிருந்து ஒரு ஆதரவு குரல் வரவில்லை என்பதை தூக்கத்தோடு பதிவு செய்கின்றோம். இந்த பிரச்சினையை புரிந்து கொண்டு நீதிக்கான போராட்டத்தில் வடக்கில் அரசியல் கட்சிகள் சிவில் அமைப்புக்கள் தமிழ் ஆர்வலர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post