மருந்துகளின் விலையை அதிகரிக்கக் கோரிக்கை - Yarl Voice மருந்துகளின் விலையை அதிகரிக்கக் கோரிக்கை - Yarl Voice

மருந்துகளின் விலையை அதிகரிக்கக் கோரிக்கை



மருந்து இறக்குமதிக்கான கடன் கடிதங்களைத் திறக்க டொலர்களை விடுவிக்க முடியாவிட்டால் கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு அல்லது மருந்துகளின் விலையை 15 வீதத்தால் அதிகரிக்குமாறு மருந்து இறக்குமதியாளர்களின் கைத்தொழில் சபை சுகாதார அமைச்சிடம் கோரியுள்ளது.

மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான கடன் கடிதங்களை வழங்க தங்களிடம் டொலர் இல்லை என்று வணிக வங்கிகள் கூறுவதால் இறக்குமதியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இது தொடர்பான கோரிக்கையை கைத்தொழில் சபை அமைச்சிடம் விடுத்துள்ளது.

ஓகஸ்ட் 2021 இல், தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை மற்றும் மருந்து வழங்கல் மற்றும் உற்பத்தி இராஜாங்க அமைச்சு மருந்துகளின் விலையை ஒன்பது சதவீதம் உயர்த்த ஒப்புதல் அளித்தன. அப்போது அமெரிக்க டொலர் 176 ரூபாவாக விற்பனை செய்யப் பட்ட நிலையில் தற்போது 230 ரூபாவை தாண்டியுள்ள தாக மருந்து இறக்குமதியாளர்கள் சபை தெரிவித்துள்ளது. 

மூலப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக இலங்கையில் பரசிட்டமோல் மாத்திரைகளின் உற்பத்தியும் தடைப்பட்டுள்ளது. ஒரு பரசிட்டமோல் மாத்திரையின் கட்டுப்பாட்டு விலை ஒரு ரூபா ஐம்பத்தொன்பது சதமாகும். மூலப்பொருளின் விலை உயர்வினால் அந்தக் கட்டுப்பாட்டு விலையில் பரசிட்டமோலை உற்பத்தி செய்ய முடியாது என அந்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

சுகாதார அமைச்சு நிதி அமைச்சு மற்றும் அரச மருந்து  வழங்கல் இராஜாங்க அமைச்சுடனும் கலந்துரையாடிய போதிலும், இதுவரை தீர்வு காணப்படவில்லை என இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post