ஜனாதிபதி கூட்டமைப்பு சந்திப்புக்கான திகதி உறுதி செய்யப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தையின் நிகழ்ச்சி நிரலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெளிவுபடுத்த வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்தார்.
யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.
கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் மஹிந்த தலைமையிலான அரசாங்கத்துக்கும் இடையில் 17 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற நிலையில் அவ்விதமான காத்திரமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியவில்லை.
இவ்வாறான நிலையில் நாட்டின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை சந்திக்கப் போவதாக ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்தார்.
ஏற்கனவே இடம்பெற்ற17 சுற்று பேச்சுவார்த்தைகளில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் குறித்த பேச்சு வார்த்தையின் மூலம் கிடைக்காமையால் மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் இன்றி இனிமேல் அரசாங்கத்துடன் பேச மாட்டோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்தமையை நினைவு படுத்துகிறேன்.
ஜனாதிபதிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெறுவது பேச்சுவார்த்தையா அல்லது கலந்துரையாடலா என்பது தொடர்பில் அங்கத்துவ கட்சிகளுக்கிடையே குழப்பம் இருக்கிறது.
ஒரு நாட்டின் தலைவருடன் பேச்சுவார்த்தை இடம்பெறும் போது அதில் என்னென்ன விடயங்கள் பேசப்போகிறோம் என ஏற்கனவே நிகழ்ச்சி நிரல் ஒன்று தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டிருக்கும் அவ்வாறு ஏதாவது அனுப்பப்பட்டதா?
சிங்கள பெரும்பான்மை வாக்குகளால் ஆட்சிக்கு வந்தவன் என தெரிவித்து வரும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு தாங்களாகவே முன் வந்து பேச்சு வார்த்தைக்கு செல்கிறார்களா அல்லது ஜனாதிபதி அழைத்தாரா என தெளிவுபடுத்த வேண்டும்.
தமிழ்த தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியான ரெலோ ஜனாதிபதியுடனான சந்திப்பை தாம் புறக்கணிப்பதாக அதற்கான வலுவான காரணங்களை முன்வைத்து எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஜனாதிபதியுடன் சந்திப்பை உறுதி செய்யும் வகையில் கருத்து தெரிவித்ததை ஊடகங்கள் ஊடாக பார்த்தேன்.
அதில் அவர் குறிப்பிடுகிறார் காணி அபகரிப்பு தொடர்பில் பேசப்போகிறோம் என பேசுவது பிரச்சன அல்ல இவர்கள் கேட்கப்போகும் விடையங்களை ஜனாதிபதி ஏற்கெனவே அறிந்து உள்ளாரா அது தொடர்பில் பேசுவதற்கு தயாராக உள்ளாரா என்பதை பேச்சுவார்த்தைக்கு செல்வோர் அறிய வேண்டும்.
ஏனெனில் 17 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்த நிலையில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுதந்திரக் கட்சியுடன் பேச்சுக்களை நடத்தியதாக தெரிவித்திருந்தார்.
அவ்வாறே எதிர்வரும் வாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்குமா இடையில் இடம்பெறும் பேச்சு மொட்டு கட்சியுடனான பேச்சாகக் கூறப்படலாம்.
இம்மாதம் உலக வங்கியின் அதிகாரிகள் இலங்கைக்கு வரும் நிலையில் வரிச் சலுகைகளைப் பெற்றுக்கொள்ளும் முகமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஜனாதிபதியை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளாரா என்ற சந்தேகம் வலுவாக உள்ளது.
ஏனெனில் நாட்டில் பாரிய பொருளாதார தாக்கம் உணரப்பட்டு வருகின்ற நிலையில் உலக வங்கியின் நிதியை பெற்றுக் கொள்வதற்காக உலக வங்கி அதிகாரிகள் இலங்கையின் அரசியல் ஸ்திரத்தன்மை தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகளை எதிர்பார்ப்பார்கள்.
இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தை இலங்கை அரசு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்காக கூட்டமைப்புடன் இணைந்து நல்லெண்ண சமிக்கை ஒன்றை தாம் விரும்புவதாக உலக வங்கிக்கு எடுத்துக் காட்ட முயல்கிறார்கள்.
தமிழ் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டுவரும் நிலையில் அதற்கான பொறுப்புக்கூறலில் இருக்கும் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்கு செல்லும் முன்னர் தமிழ் மக்களுக்கு ஏதாவது பிரயோசனம் கிடைக்குமா என்பதை சக தமிழ் கட்சிகள் கலந்துரையாட வேண்டும்.
அதுமட்டுமில்லாது 17 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்த நிலையில் சம்பந்தர் கூறிய மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் ஏன் ஜனாதிபதியுடன் இடம்பெறும் பேச்சுவார்த்தையில் ஏற்படுத்தப்படவில்லை.
தேர்தல் காலங்களில் மட்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் மக்களின் வாக்குகளைப் பெற்ற பின்னர் தமிழரசு கட்சி தாமாக பல முடிவுகளை எடுக்கிறார்கள்.
ஆகவே ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈடுபடுவதற்கு முன்னர் பேச்சுவார்த்தை ஆனால் தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை பயக்குமா என்பதை உறுதி செய்து பேச்சுவார்த்தைக்கு செல்ல வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்
Post a Comment