தமிழ் மக்களின் உயிர் ஆடு மாடுகளைவிடக் கேவலமானதா? சுரேஷ் க.பிரேமச்சந்திரன் கேள்வி - Yarl Voice தமிழ் மக்களின் உயிர் ஆடு மாடுகளைவிடக் கேவலமானதா? சுரேஷ் க.பிரேமச்சந்திரன் கேள்வி - Yarl Voice

தமிழ் மக்களின் உயிர் ஆடு மாடுகளைவிடக் கேவலமானதா? சுரேஷ் க.பிரேமச்சந்திரன் கேள்விசர்வதேச சமூகத்தின் அழுத்தத்திலிருந்து விடுபடும் நோக்கில் அல்லது அதனை சமாளிக்கும் விதத்தில் இலங்கை அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு மரணச்சான்றிதழ் அல்லது எங்குதேடியும் கிடைக்கவில்லை என்றும் சான்றிதழை வழங்கி ஒரே கட்டமாக ஒரு இலட்சம் ரூபாய் நட்டயீட்டை வழங்குவதற்கு செவ்வாய்க்கிழமை (15.03.2022) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுத்துள்ளது. 

இது குறித்து தனது அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவித்து விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ்.க.பிரேமச்சந்திரன் மேற்கண்ட கேள்வியை எழுப்பியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழுமையான விபரம் வருமாறு.

கடந்த செவ்வாய்க்கிழமை (15.03.2022) அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு மரணச் சான்றிதழ் அல்லது எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை என்னும் சான்றிதழ் வழங்கப்படுவதுடன், நட்டயீடாக ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என அமைச்சரவை முடிவுசெய்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் திருவிழாக்களிலோ பொதுநிகழ்ச்சிகளிலோ அல்லது வழிதெரியாமல் தடுமாறி தொலைந்து போனவர்கள் அல்லர். 

இராணுவத்தினரினதும் பொலிசாரினதும் வேண்டுகோளுக்கிணங்க சரணடைந்தவர்களும் இராணுவச் சுற்றிவளைப்புகளின்போது பலபேர் முன்னிலையில் கைது செய்யப்பட்டவர்களும் இராணுவத்தினரின் கோரிக்கைக்கிணங்க உறவினர்களால் கையளிக்கப்பட்டவர்களும் இதில் அடங்குவர். ஆகவே, இவர்கள் எவ்வாறு காணாமல் போகமுடியும் என்பது முதலாவது கேள்வி.

அரச படைகளிடமும், பொலிசாரிடமும் புலனாய்வுப் பிரிவினரிடமும் ஒப்படைக்கப்பட்ட பிறகு எவ்வாறு காணாமல் போகமுடியும்? இவர்கள் படைத்தரப்பினரால் கொலை செய்யப்பட்டார்களா என்ற அச்சம் அவர்களின் உறவினர்கள் மத்தியில் நிறையவே இருக்கின்றது. ஆகவேதான் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேச விசாரணை ஒன்றைக் கோரிநிற்கின்றார்கள்.

 ஆனால் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் மற்றும் மனித உரிமைகள் அமைப்புகளின் அழுத்தம் காரணமாக மரணச் சான்றிதழ் ஒன்றைக் கொடுத்து இந்த விவகாரத்தை முடித்துவிடலாம் என்று அரசாங்கம் யோசிக்கின்றது. இதனை பாதிக்கப்பட்ட மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவது கிடையாது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் சுமார் பத்து வருடங்களுக்கும் முன்னர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவுக்கு இன்றுவரை நீதிவழங்கப்படவில்லை. இந்நிலையில் அரசாங்கத்தின் இத்த அறிவிப்பினால் எமது மக்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக, அரசாங்கம் ஒரு பிழையான அணுகுமுறையினூடாக இந்தப் பிரச்சினைக்கு முடிவைக்காண முனைகிறது. அரசாங்கத்தைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது எமது நோக்கமல்ல. 

ஜனநாயகரீதியாக மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கம் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றிப் பொறுப்புக்கூறுவது இன்றியமையாதது.

 அதிலிருந்து அவர்கள் தப்பித்துக்கொள்வதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆகவே, இலங்கை அரசாங்கத்தின் கபடத்தனமான நடவடிக்கைகளைக் கருத்தில் எடுத்துக்கொண்டு இதுதொடர்பான ஒரு சர்வதேச விசாரணையை சர்வதேச சமூகம் நடத்தியாக வேண்டும். அதன் மூலம் மாத்திரமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்க முடியும்.

 இலங்கையில் ஆடு, மாடுகளுக்கான விலையே இலட்சக்கணக்கில் இருக்கின்றபொழுது ஒரு மனித உயிருக்கு ஒருஇலட்சம் ரூபாய் நட்டயீடு என்பதிலிருந்து சிங்கள ஆளும் வர்க்கத்தினர் தமிழ் மக்களை எவ்வளவுதூரம் ஒருகிள்ளுக்கீரைபோல எடைபோடுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. 

சர்வதேச விசாரணை ஒன்று நடக்கும் பட்சத்தில் சர்வதேச நியமங்களக்கு அமைய பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதியும் கணிசமான அளவு நட்டஈடும் கிடைக்க வாய்ப்பிருக்கின்றது. ஆகவே இலங்கை அமைச்சரவையின் இந்தத் தீர்மானம் என்பது வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுவதாகவே அமையும்.

இலங்கைத்தீவின் சமபங்காளிகளான தமிழ் மக்களின் உயிர்களையே மதிக்கத் தெரியாத இலங்கை அரசாங்கத்திடமிருந்து தமிழ் மக்கள் அச்சமின்றியும் கௌரவத்துடனும் வாழ்வதற்கான நிரந்தர அரசியல் தீர்வு ஒரு மூன்றாந்தரப்பின் தலையீடின்றி சாத்தியமற்றது என்பது தெளிவாகின்றது. 

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கையிலேயே இந்தத் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் மேற்கொள்கிறது என்றால் கூட்டத்தொடர் முடிந்தவுடன் எப்படி நடந்துகொள்ளும் என்பதை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் நினைத்துப் பார்க்கவேண்டும்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அமைச்சரவை தீர்மானம் என்பது குப்பைகூடைக்குள் போடுவதற்கே தகுதியானது. அரசாங்கத்தின் இந்த மோசமான நடவடிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம், சர்வதேச மனித உரிமை அமைப்புகள், ஜனநாயக முற்போக்கு சக்திகள் அனைவரும் இணைந்து கண்டிப்பதுடன் சர்வதேச விசாரணைக்கு இலங்கையை உட்படுத்த வேண்டும் என்று கோருகிறோம்.20


சுரேஷ் க.பிரேமச்சந்திரன்
தலைவர்
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

0/Post a Comment/Comments

Previous Post Next Post