புதிய அமைச்சரவை நாளை நியமனம்! பிரதமராகிறார் தினேஷ்!! - Yarl Voice புதிய அமைச்சரவை நாளை நியமனம்! பிரதமராகிறார் தினேஷ்!! - Yarl Voice

புதிய அமைச்சரவை நாளை நியமனம்! பிரதமராகிறார் தினேஷ்!!



 அமைச்சரவை நாளை நியமனம்! பிரதமராகிறார் தினேஷ் குணவர்தன
🔴 நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்துமாறு யோசனை 
🔴தம்மிக்க பெரேரா இராஜினாமா 
🔴ரணிலின் இடத்துக்கு நால்வரில் ஒருவர்
🔴ஜனாதிபதி விரைவில் டில்லி பயணம் 

அரச பொறிமுறை மற்றும் நாடாளுமன்ற செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுக்கும் வகையில் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடைக்கால அமைச்சரவை நாளை (22) நியமிக்கப்படவுள்ளது.   

பிரதமர் அலுவலகத்தில் முற்பகல் 9 மணிக்கு, ஜனாதிபதி முன்னிலையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர்.  

பிரதமராக, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், சபை முதல்வருமான தினேஷ் குணவர்தன நியமிக்கப்படவுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. 

சர்வக்கட்சி அரசொன்றை ஸ்தாபிப்பதே ஜனாதிபதியின் எதிர்ப்பார்ப்பாக உள்ளதால், சர்வக்கட்சி அரசு அமைந்த பின்னரே முழுமையான அமைச்சரவை நியமிக்கப்படும் எனவும், அனைத்து கட்சிகளும் அரச பங்காளிகளானால் பிரதமர் பதவியில்கூட மாற்றம் வரலாம் எனவும் தெரியவருகின்றது.  

இலங்கையில் பிரதமர் அமைச்சு பதவிகளை வகித்தவர்கள் விபரம், 

✍️டி.எஸ். சேனாநாயக்க - (ஐ.தே.க.)
✍️டட்லி சேனாநாயக்க - (ஐ.தே.க.)
✍️சேர். ஜோன் கொத்தலாவ - (ஐ.தே.க.)
✍️எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க - (சு.க)
✍️கலாநிதி டபிள்யூ. தஹநாயக்க - (சு.க)
✍️ சிறிமாவோ பண்டாரநாயக்க (சு.க)
✍️ஜே. ஆர். ஜயவர்தன - (ஐ.தே.க.)
✍️ஆர். பிரேமதாச - (ஐ.தே.க.)
✍️டி.பி. விஜயதுங்க - (ஐ.தே.க.)
✍️ரணில் விக்கிரமசிங்க - (ஐ.தே.க.)
✍️சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க - (சு.க.)
✍️ரத்னசிறி விக்கிரமநாயக்க - (சு.க.)
✍️ மஹிந்த ராஜபக்‍ஷ - (சு.க.)
✍️ தி.மு. ஜயரத்ன - (சு.க.)
✍️ தினேஷ் குணவர்தன?

🔴தம்மிக்க பெரேரா இராஜினாமா 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் எம்.பியான தம்மிக்க பெரேரா, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார். 

பஸில் ராஜபக்ச பதவி விலகிய பின்னர், நாடாளுமன்றம் வந்த தம்மிக்க பெரேராவுக்கு, அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவியும் வழங்கப்பட்டது.  

அமைச்சு பதவியை ஏற்ற பின்னர், நிதி அமைச்சராக செயற்பட்ட அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கடுமையாக விமர்சித்தார். நிதி அமைச்சு பதவியில் இருந்து அவர் நீக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

ஜுலை 9 ஆம் திகதி அமைச்சு பதவியை தம்மிக்க பெரேரா, இராஜினாமா செய்தார். 

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில், எம்.பி. பதவியையும் துறப்பதற்கு திட்டமிட்டுள்ளார். 

🔴நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தம் 

நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்துவதற்கான யோசனை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று கட்சி தலைவர்கள் கூட்டமொன்று நடைபெற்றது. 

இதன்போது 48 மணிநேரத்துக்கு நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்துவதற்கு கட்சி தலைவர்களிடம் ஜனாதிபதி அனுமதி கோரியுள்ளார். இதற்கு கட்சி தலைவர்களும் பச்சைக்கொடி காட்டியுள்ளனர். எனினும், சபாநாயகர் தலைமையில் நடைபெறும் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும். 

நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டால் அனைத்து நாடாளுமன்ற குழுக்களும் செயலிழக்கும். அதன் பின்னர் புதிதாகவே நியமனம் இடம்பெறும். 

இவ்விடயம் உட்பட நாடாளுமன்ற அமர்வை ஆரம்பிக்கும்போது இடம்பெறும் கொள்கை விளக்க உரை என்பவற்றை கருத்தியே ஜனாதிபதி இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.

🔴ரணிலின் இடத்துக்கு யார்?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜனாதிபதியாகிவிட்டதால், அக்கட்சிக்குரிய தேசியப்பட்டியல் ஆசனம் மூலம் யார் நாடாளுமன்றம் வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, தவிசாளர் வஜீர அபேவர்தன, பொதுச்செயலாளர் ரங்கே பண்டார, சாகல காரியவசம் ஆகிய நால்வரில் ஒருவரே நியமிக்கப்படவுள்ளனர். 

அதேவேளை, ஜனாதிபதியின் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா செல்லவுள்ளார் என தெரியவருகின்றது. ஜனாதிபதியை நேரில் சந்தித்து இதற்கான அழைப்பை இலங்கை தூதுவர் விடுக்கவுள்ளார்.  

ஆர்.சனத்

0/Post a Comment/Comments

Previous Post Next Post