புதிய ஜனாதிபதி தெரிவு வாக்கெடுப்பில் முஸ்லிம் எம்பிக்கள் எந்த வேட்பாளரையும் நிபந்தனையின்றி ஆதரிக்கக் கூடாது...!!!! - Yarl Voice புதிய ஜனாதிபதி தெரிவு வாக்கெடுப்பில் முஸ்லிம் எம்பிக்கள் எந்த வேட்பாளரையும் நிபந்தனையின்றி ஆதரிக்கக் கூடாது...!!!! - Yarl Voice

புதிய ஜனாதிபதி தெரிவு வாக்கெடுப்பில் முஸ்லிம் எம்பிக்கள் எந்த வேட்பாளரையும் நிபந்தனையின்றி ஆதரிக்கக் கூடாது...!!!!



புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள வாக்கெடுப்பில் முஸ்லிம் கட்சிகளின் தலைமைகளும் எம்பிக்களும் எந்த வேட்பாளரையும் நிபந்தனையின்றி ஆதரிக்கக் கூடாது என்று கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணி வலியுறுத்தியுள்ளது.

சமூகம் சார்ந்த அபிலாஷைகளையும் பிரச்சினைகளையும் முன்வைத்து, அவற்றுக்கு தீர்வு தரக்கூடிய வேட்பாளரையே ஆதரிக்க வேண்டும் எனவும் கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக முன்னணியின் செயலாளர் செயிட் ஆஷிப் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

நாடு எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் போராட்டம் காரணமாக கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு நாடாளுமன்றத்தினால் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

எனினும் இத்தேர்தலில் தாம் யாரை எந்த நிபந்தனையுடன் ஆதரிக்கப் போகிறோம் என்பது பற்றி நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற முஸ்லிம் கட்சிகள் சமூகத்திற்கு எவ்விதமான தெளிவுபடுத்தல்களையும் இதுவரை முன்வைக்கவில்லை. குறைந்தபட்சம் தமது கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர்பீட உறுப்பினர்களுடனாவது இவ்விடயம் தொடர்பில் கூடி ஆராய்ந்ததாக தெரியவில்லை.

இவர்கள் தாம் சார்ந்திருக்கின்ற அரசியல் கூட்டணிகளின் தீர்மானங்களுடன் ஒத்துப்போகின்ற நிலைப்பாட்டிலேயே இருந்து வருகின்றனர். கடந்த காலங்களில் தமது கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாடுகளையே தமது கட்சிகளின் தீர்மானங்களாக எடுத்ததைப் போன்றே ஜனாதிபதி தெரிவிலும் செயற்பட தயாராகி வருவதை அவதானிக்க முடிகிறது. தேசிய அரசியல் விவகாரங்களில் கட்சி மட்டத்திலும் சமூக மட்டத்திலும் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு இத்தலைமைகள் முன்வராமல் பின்னடிப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் அங்கம் வகிப்பதால் அவர்கள் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க தீர்மானித்திருக்கின்றனர். இந்நிலையில் இவர்களது கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் யாரை ஆதரிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவளித்தது போன்று தலைமைகள் ஒரு புறமும் எம்.பி.க்கள் இன்னொரு புறமும் நின்று வாக்களிக்கப் போகின்றனரா என்றும் சந்தேகிக்க வேண்டியுள்ளது.

விமல் வீரவன்ச மற்றும் உதய கம்பன்பில போன்றோரின் சுயாதீன கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, அக்கூட்டணியின் தீர்மானத்திற்கமைவாக செயற்படுவார் என அறிய முடிகிறது. எப்போதும் போன்றே இந்த விடயத்திலும் இவரிடம் சமூக ரீதியான பார்வை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆக, முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களோ அக்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களோ சமூகப் பிரச்சினைகளை முன்வைத்து, அவற்றுக்கு தீர்வு தருகின்ற வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பில் கிஞ்சித்தும் சிந்திக்கவில்லை என்பது தெட்டத்தெளிவாக தெரிகிறது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை சிறுபான்மையினருக்கு பாதுகாப்பானது என்பதால், ஜனாதிபதி முறை ஒழிக்கப்படக் கூடாது என கடந்த காலங்களில் குரல் எழுப்பி வந்த முஸ்லிம் கட்சிகள், ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடைபெறும்போதுதான் அதில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுடன் பேரம் பேசி சிறுபான்மையினரின் சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று அதனை நியாயபடுத்தி வந்தனர். 

ஆனால் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சமூக ரீதியான எந்தப் பேரம் பேசலுமில்லாமல் தமது சுய அரசியல் இலாபத்தை மாத்திரம் கருத்தில் கொண்டு, வலிந்து ஒரு வேட்பாளரை ஆதரிக்க தீர்மானம் மேற்கொண்டிருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

இந்த நாட்டில் முஸ்லிம் சமூகத்தினருக்கு எவ்வித பிரச்சினையுமில்லை, அவர்களுக்கென எந்த அபிலாஷையும் கிடையாது, அவசரமாக நிறைவேற்றப்பட வேண்டிய தேவை எதுவும் அவர்களுக்கு கிடையாது என்பது போல் முஸ்லிம் தலைமைகளின் மௌனம் காணப்படுகிறது. ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் பேரால் அநியாயமாக கைது செய்யப்பட்டு, இன்றுவரை சிறைப் பிடிக்கப்பட்டிருக்கின்ற முஸ்லிம் இளைஞர்கள், புத்திஜீவிகள் இன்னும் எவ்வளவு காலம் கிடந்தால்தான் எமக்கென்ன என்ற எண்ணத்தில் இத்தலைமைகள் இருக்கின்றனர்.

 முஸ்லிம்களுக்கு காணிப்பிரச்சினையா, நிர்வாகப் பிரச்சினையா, இனவாத நெருக்குவாரங்களா, முஸ்லிம் தனியார் சட்டமா, காதி நீதிமன்றமா, தம்புள்ளை, ஜெய்லானி பள்ளிவாசல்கள் மீதான அழுத்தமா, மூடப்பட்டிருக்கின்ற பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மீளத்திரக்கப்பட வேண்டுமா, ஒலுவில் துறைமுகப் பிரச்சினையா, எதைப்பற்றியும் நாங்கள் அலட்டிக்கொள்ள மாட்டோம் என்பது போல் நம் தலைமைகள் செயற்படுகின்றனர்.

தமிழ் கட்சிகள் தமது ஆதரவு யாருக்கு என்று இன்னும் வெளிப்படுத்தாமல், தமிழ் சமூகத்தின் அபிலாஷைகள் மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு தரக்கூடிய வேட்பாளரையே தாம் ஆதரிப்போம் என்று அக்கட்சிகளின் தலைவர்கள் ஊடகங்களில் தெரிவித்திருப்பதை முஸ்லிம் கட்சிகள் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும்.

ஆகையினால், இந்த விடயத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு இன்னொரு வரலாற்றுத் துரோகத்தை செய்து விடாமல், ஜனாதிபதி வேட்பாளர்களிடம் சமூகப் பிரச்சினைகளை முன்வைத்து, அவற்றுக்கு தீர்வு தரக்கூடிய வேட்பாளரையே முஸ்லிம் கட்சிகள் ஆதரிக்க முன்வர வேண்டும். 

தமது சுயநலன்களுக்காக நிபந்தனை எதுவுமின்றி எவரையும் ஆதரிக்கும் எண்ணத்தைக் முஸ்லிம் தலைமைகளும் எம்.பி.க்களும் கைவிட வேண்டும். 

சிவில் சமூக அமைப்புகள் மற்றும் புத்திஜீவிகள் இவ்விடயத்தில் தொடர்ந்தும் மௌனம் காக்காமல், அழுத்தம் கொடுக்க முன்வர வேண்டும்- என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post