ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் மேலும் பிளவு!! கட்சி தீர்மானத்தை மீறும் உறுப்பினர்கள்..! - Yarl Voice ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் மேலும் பிளவு!! கட்சி தீர்மானத்தை மீறும் உறுப்பினர்கள்..! - Yarl Voice

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் மேலும் பிளவு!! கட்சி தீர்மானத்தை மீறும் உறுப்பினர்கள்..!ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பில், எந்தவொரு உறுப்பினருக்கும் வாக்களிப்பதில்லை என்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தீர்மானத்தை மீறி வாக்களிப்பில் பங்கேற்கவுள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் வாக்கினால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தாம் இந்த தெரிவின்போது வாக்களிக்கவுள்ளதாக அவர் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

முன்பதாக ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரும் உரிய திட்டங்களை முன்வைக்காமை காரணமாக, ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பில் தமது கட்சி வாக்களிக்காது என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான ஆதரவு வழங்குவது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உத்தியோகப்பூர்வ தீர்மானம் இன்றையதினம் அறிவிக்கப்படும் என அதன் தலைவர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் அங்கத்துவ கட்சி என்ற வகையில் இதுவரையில் எதிர்கட்சி வேட்பாளரான சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூடி கலந்துரையாடியதன் பின்னர் இன்றைய தினம் இறுதி முடிவை அறிவிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி பதவிக்கான போட்டி விடயத்தில் பொது எதிர்கட்சி என்ற அடிப்படையில், தங்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தி எடுக்கின்ற ஒருமித்த முடிவுடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்திருக்கும்; என அதன் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் கட்சி உறுப்பினர்கள் கலந்துரையாடி எதிர்வரும் 19 ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், தமிழ் முற்போக்கு கூட்டணி எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post