ஜனாதிபதி தெரிவில் யாரையும் ஆதரிக்க போவதில்லை!!! முன்னணி அறிவிப்பு - Yarl Voice ஜனாதிபதி தெரிவில் யாரையும் ஆதரிக்க போவதில்லை!!! முன்னணி அறிவிப்பு - Yarl Voice

ஜனாதிபதி தெரிவில் யாரையும் ஆதரிக்க போவதில்லை!!! முன்னணி அறிவிப்பு



சனாதிபதித் தெரிவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாரையும் ஆதரிக்கப்போவதில்லை.
தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதற்கு சஜித் பிறேமதாசாவோ அனுரகுமார திசாநாயக்கவோ தயாராக இல்லை. 
ரணில் விக்கிரமசிங்க அவர்களை நாம் அடியோடு நிராகரிக்கின்றோம்.இவ்வாறு தெரிவித்துள்ளது முன்னணி.

சமஸ்டிக் கோரிக்கையை ஏற்கத் தயாரில்லை. சனாதிபதி தெரிவில் யாருக்கும் வாக்களிக்கப்போவதில்லை -  கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.-

தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளை ஏற்றுக்கொள்ள சஜித்பிறேமதாசாவோ அனுரவோ ரணிலோ தயாராக இல்லை.
சனாதிபதி தெரிவில் யாருக்கும் வாக்களிக்கப்போவதில்லை.

பாராளுமன்றத்தில் வருகின்ற புதன்கிழமை நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதி தெரிவு தொடர்பாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழு கூடி எமது நிலைப்பாடுகள் தொடர்பாக ஆழமாக ஆராய்ந்தோம். இதனடிப்படையில்- நேற்றும் நேற்று முன்தினமும் சனாதிபதி தெரிவில் எமது ஆதரவைக் கோரிநிற்கும் தரப்புக்களுடன் சந்திப்புகள் இடம்பெற்றன. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்  ஹரணி அமரசூரிய மற்றும் அவ்வமைப்பைச் சேர்ந்த சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார ஆகியோரோடு சந்திப்புக்கள் இடம்பெற்றிருந்தன.  
ஜனாதிபதி தெரிவுக்காக தம்மை முன்மொழிந்து இருப்பவர்கள், தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் தீர்வு விடயங்களை முன்னெடுக்க தயாரில்லாதவர்களாகவே உள்ளனர்.
அந்த வகையிலேயே- புதன்கிழமை நடைபெறவிருக்கின்ற வாக்கெடுப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, யாருக்கும் ஆதரவு தெரிவக்கப்போவதில்லை என்கின்ற முடிவிற்கு எமது மத்திய குழு ஏகமனதாக வந்திருக்கின்றோம்.
இந்த ஜனாதிபதி தெரிவிற்கு பெயர் முன்மொழிந்து இருப்பவர்களில் ரணில் விக்கிரமசிங்க அவர்களுடைய பெயரை நாங்கள் முதலிலேயே நிராகரித்து விட்டோம். குறித்த இந்த நிராகரிப்பும் எமது மத்திய குழுவால் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவாகும். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக இன்றைக்கு இந்த நாட்டில் இருக்கக்கூடிய  குழப்பங்களுக்கு கோட்டபாய ராஜபக்ச எந்த அளவிற்கு காரணமாக இருக்கின்றாரோ, அதனுடைய தொடர்ச்சியாக ரணில் விக்ரமசிங்க செயற்பட்டு வருகின்றார். இதன் காரணத்தினாலே அவரை ஏற்க முடியாது என்ற முடிவிற்கு வந்திருந்தோம்.
இன்றைக்கு ராஜபக்ச தரப்பினை அகற்றி ஒரு அடிப்படை மாற்றத்திற்காக போராடிக் கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்திலே, ரணில் விக்ரமசிங்க அதற்கு ஒரு முட்டுக்கட்டையாக இருக்கின்றார் என்ற விடயமும் மிகத்தெளிவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனவே - அவரை ஆதரிக்க முடியாது என்றும் - தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், கடந்த 2015ஆம் ஆண்டு- மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து நடைபெற்ற அவரது ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களுடைய இனப் பிரச்சனைக்கான தீர்வு என்ற விடயத்தில், ஒற்றையாட்சிக்கு உட்பட்ட ஒரு இடைக்கால அறிக்கை ஒன்றையே தயாரித்து இருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சி அதற்கு மட்டும் தான் ஆதரவு தரலாம் என்ற விடயத்தையும் - சமஸ்டியையும் தமிழ் மக்களுடைய சுயநிர்ணயத்தையும் நிராகரித்து அவர்களுடைய செயற்பாடுகள் இன்னமும் அதிலிருந்து விடுபடாமல் இருக்கின்ற  நிலையில், அவரை ஏற்க முடியாது என்ற முடிவையும் நாங்கள் எடுத்து இருக்கிறோம்.
திரு.ரணில் விக்ரமசிங்க அவர்கள் பாராளுமன்றத்தில் தெரிவுசெய்யப்பட்ட முதற்கிழமையே என்னை சந்திக் வேண்டும் என்று கேட்டதால் சந்திப்பொன்று நடைபெற்றிருந்தது. என்னோடு இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலே தீர்வு என்கின்ற விடயத்தில் - நாங்கள் தமிழ் தேசம் அங்கிகரிக்கப்படவேண்டும் என்கின்ற சமஸ்டி அடிப்படையிலான தீர்வினை கேட்டபொழுது, அதை உதாசீனம் செய்கின்ற வகையில் -  'நடைமுறைக்கு சாத்தியமான விடயங்களில் தான் நாங்கள் அரசியலில் ஈடுபட வேண்டும்' என்ற தொனிப்பொருளில் அவருடைய பதில் இருந்தது.
இரண்டாவது விடயம்-  இந்த கோத்தபாயவினுடைய  அரசாங்கத்தை எவ்வளவுக்கு உடனடியாக வெளியேற்ற முடியுமோ, அதற்காக நாங்கள் செயற்பட வேண்டும் என்ற என்னுடைய கருத்தை கூறிய போது- 'அந்த விடயத்தில் அவசரப்பட வேண்டிய தேவை இல்லை' என்ற கருத்தையும் அன்றைக்கே பகிர்ந்து கொண்டிருந்தார்.
இன்றைக்கு அவர் நடந்து கொள்ளும் விதத்தில் இருந்து அவர் அன்று தெரிவித்த கருத்திலிருந்து எந்தவிதத்திலும் இன்னமும் விலகிச் செல்லவில்லை என்பது நிரூபணமாகியிருக்கிறது.  

எனவே - இந்தக் காரணங்களின் அடிப்படையில் தான், இதற்குப் பிறகு ரணில் விக்கிரமசிங்க அவர்கள் எங்களை சந்திக்க முன்வந்த நேரத்திலும் கூட, நாங்கள் அதனை பலதடவை நிராகரித்து இருந்தோம். எங்களைப் பொறுத்தமட்டில் இவ்வாறானதொரு தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதே ஒரு பயனற்ற செயற்பாடு என்றே நாங்கள் கருதுகின்றோம்.
இதேபோன்றே- திரு.ரணில் விக்ரமசிங்க அவர்களை நாங்கள் என்ன காரணத்திற்காக நிராகரிக்கின்றோமோ, அதேநிலைப்பாட்டில் தான் சஜித் பிரேமதாசா அவர்களும் தனது கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.  அதிகாரப் பகிர்வு தொடர்பில் அவர் எங்களோடு பேசிய பொழுது, இந்தியாவில் உள்ள பஞ்சாயத்து முறையில் பிரச்சனைகள் தீர்க்கப்படும் முறையைக் கூறி - அதைப் போலவே தமிழ் மக்களுடைய பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்ற கோணத்தில் அவர் தன்னுடைய கருத்தை தெரிவித்திருந்தார். தமிழ் மக்களுடைய இனப்பிரச்சனை சார்ந்த விடயத்திற்கும் பஞ்சாயத்து முறைக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பது சஜித் பிரேமதாஸ அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை போலும்.
இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில், எந்த சம்பந்தமே இல்லாத பஞ்சாயத்து முறைபற்றிக் கூறுவதென்பது, தமிழ் மக்கள் சார்ந்த பிரச்சனையில் அவர் எந்தளவு தூரம் விளக்கத்தை பெற்றிருக்கிறார் என்பது, கேள்விக்குறியாகவே உள்ளது.
அவர் நேற்றுக் காலை தொலைபேசியின் ஊடாக என்னை தொடர்பு கொண்ட பொழுது, 'எனக்கு தனிப்பட்ட ரீதியில் நம்பிக்கை இருந்தது, நீங்கள் ஏனைய அரசியல்வாதிகளை விட வித்தியாசமாக செயல்படுவீர்கள் என நான் நினைத்திருந்தேன், ஆனால் - நீங்கள் அதற்கு மாறாகவே இருக்கின்றீர்கள்' என நான் அவரிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்திருந்தேன். எனவே - அவரையும் ஆதரிக்க முடியாது என்ற நிலைப்பாட்டிற்கு நாங்கள் ஏகமனதாக வந்திருக்கின்றோம்.
மேலும்- ஜே.வி.பி.யினுடைய அனுரகுமார திசாநாயக்கவிற்கு வாக்களிப்பது தொடர்பாக ஆராயப்பட்ட போது,
நாங்கள் சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹரணி அமரசூரிய, ஹர்ஷன நாணயக்கார தமிழ் மக்களுடைய இனப் பிரச்சனை சம்பந்தமாக தங்களுடைய தனிப்பட்ட நிலைப்பாட்டை தெரிவித்திருந்தனர்.
தேசிய மக்கள் சக்தியினுடைய சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடைய நிலைப்பாட்டிற்கும் ஜே. வி. பி.யினுடைய நிலைப்பாட்டிற்கும் இடையில் பாரிய வேறுபாடு இருக்கின்றது. கட்சிக்கு உள்ளேயே தேசிய இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வு சம்பந்தப்பட்ட விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது எனவும், அதனால்  புதன்கிழமை வரவிருக்கின்ற ஜனாதிபதி தெரிவிக்கு முன்னர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற நிலைப்பாட்டிற்கு தங்களால் இப்போதைக்கு வர முடியாதுள்ளதாக அவர்கள் எங்களுக்கு தெளிவாக கூறியிருந்தார்கள்.
ஆகவே- இந்த விடயங்களை நாங்கள் ஆராய்ந்து,
எங்களுக்கு ஒரு தெளிவான- உறுதியான தமிழ் தேசிய இனப்பிரச்சினை சம்பந்தமாகவும் - தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகள் சம்பந்தமாகவும் உத்தரவாதங்கள் இல்லாமல், எங்களுடைய ஆதரவினை வழங்க முடியாது என்ற நிலைப்பாட்டிற்கு வந்திருக்கின்றோம்.
ஆகவே- ஒட்டுமொத்தமாக பார்க்கின்ற பொழுது, எதிர்வரும் புதன்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதி தெரிவில், தமிழ் மக்களுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் தெரிவு இல்லை என்பதனடிப்படையில், நாங்கள் இந்த வாக்கெடுப்பில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவாக வாக்களிக்காது தவிர்த்துக் கொள்வதென முடிவெடுத்து இருக்கின்றோம்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post