யாழ் எரிபொருள் நிலையங்களில் மோசடி!! முறைப்பாடு கிடைத்துள்ளதாக அங்கஜன் குற்றச்சாட்டு - Yarl Voice யாழ் எரிபொருள் நிலையங்களில் மோசடி!! முறைப்பாடு கிடைத்துள்ளதாக அங்கஜன் குற்றச்சாட்டு - Yarl Voice

யாழ் எரிபொருள் நிலையங்களில் மோசடி!! முறைப்பாடு கிடைத்துள்ளதாக அங்கஜன் குற்றச்சாட்டுயாழ் மாவட்டத்தில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களின் விநியோகம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு மாறாக சில அதிகாரிகளும், எரிபொருள் நிரப்பு நிலையத்தினரும் நடந்துகொள்வதாக மக்கள் என்னிடம் முறைப்பாடுகளை தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ஐஓசி எரிபொருள் நிலையத்தில் பொதுமக்களின் 1250 மோட்டார் சைக்கிள்களுக்கு 1000 ரூபா வீதமும், 500 கார்  ஆட்டோக்களுக்கு 2000 ரூபாய் வீதமும் எரிபொருள் வழங்கப்படுமெனவும், அத்தியாவசிய ஊழியர்களின் 600 மோட்டார் சைக்கிள்களுக்கு 1000 ரூபா வீதமும், 50 கார்களுக்கு 3000 ரூபாய் வீதமும் எரிபொருள் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது கடந்த 04.07.2022 அன்று தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த எண்ணிக்கையில் ரோக்கன் வழங்காமலும், வேண்டப்பட்ட சிலருக்கு எரிபொருளை குறித்த விலையில் வழங்காமலும் மிகைப்படுத்தப்பட்ட எரிபொருள் நிரப்புவதற்கு அதிகாரிகளும், எரிபொருள் நிரப்பு நிலையத்தினரும் உடந்தையாக செயற்பட்டுள்ளார்கள் என்ற முறைப்பாடுகள் நேற்றைய தினமே கிடைக்கப்பெற்றது.

அவ் முறைப்பாடுகள் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்டோரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தேன். இருப்பினும் இரவு 10 மணியுடன் விநியோக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்ட நிலையில் தமக்கான எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் எனது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர். 

இவ்வாறு பொறுப்பற்று செயற்படும் அதிகாரிகளுக்கும், எரிபொருள் நிரப்பு நிலையத்தினருக்கும் கடுமையான கண்டனங்களை தெரிவிப்பதோடு, எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய செயற்படும்போதே எரிபொருள் விநியோகத்தில் சீரான நிலையை உருவாக்க முடியும் என்பதையும் வலியுறுத்துகிறேன். 

அத்துடன் இத்தகைய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது ஏற்படும் தவறுகள் தொடர்பில் உரிய கரிசனையை கொண்டுள்ளதோடு, பொதுமக்களும் இதுதொடர்பில் கரிசனை செலுத்தி, தவறுகள் இடம்பெற்றால் முறைப்பாடுகளை பதிவு செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post