கைது வேட்டையை உடனே நிறுத்தவும்! ரணிலிடம் சஜித் வலியுறுத்து - Yarl Voice கைது வேட்டையை உடனே நிறுத்தவும்! ரணிலிடம் சஜித் வலியுறுத்து - Yarl Voice

கைது வேட்டையை உடனே நிறுத்தவும்! ரணிலிடம் சஜித் வலியுறுத்து



"அரசியல் உள்நோக்கத்துடன் அரங்கேற்றப்பட்டு வரும் கைது வேட்டையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடன் நிறுத்த வேண்டும்."

- இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.

பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலினைச் சந்திப்பதற்கு கொழும்பு, கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் இன்று சென்றிருந்தார். அவரைச் சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

"அமைதியாகவும், நாகரிகமாகவும் உழைக்கும் மக்களுக்காகவும், ஆசிரியர் சமூகத்துக்காகவும் போராடிய ஜோசப் ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டுள்ளபோது, அடக்குமுறையின் தந்தையான மஹிந்த ராஜபக்ச ஆரோக்கியமாகப்  பொழுதைக் கடத்திக்கொண்டிருக்கின்றார்.

மனிதநேயத்தின் பெயரால் நாடு குறித்து சிந்தித்து ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டிய தருணத்தில், எதேச்சதிகாரமாக அரசியல் பழிவாங்கள்களில் ஈடுபடுவதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். 

இந்த அரச பயங்கரவாதத்தை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

வெடிகுண்டுகள், வாள்கள், துப்பாக்கி ரவைகள் போன்ற ஆயுதங்களால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல், கலந்துரையாடல் மற்றும் இணக்கப்பாட்டின் மூலம் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். 

தற்போது வரை தொடரும் வன்முறைச் சுழற்சியை ஆரம்பித்தது முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவே.

எந்தவொரு குடிமகனும் தான் கருதும் கருத்தைக் கொண்டிருப்பதற்கும், அதற்காக முன் நிற்கவும், பேசவும், ஒன்று கூடவும், அமைதியான முறையில் போராட்டம் நடத்தவும் உரிமையுண்டு. 

வன்முறையற்ற அஹிம்சை வழியில் போராடும் உரிமையை யாராலும் மீற முடியாது.

ஜோசப் ஸ்டாலின் தனக்குள்ள உரிமைகளை நாட்டுக்காக ஜனநாயக முறையில் பயன்படுத்தினார். அந்த உரிமையை  எவராலும் எதிர்க்க முடியாது" - என்றார்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாவதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது ஜோசப் ஸ்டாலின் தொடர்பில் கூறியிருந்ததை நினைவுகூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அன்று அவர் கைது செய்யப்பட்டபோது ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இழக்க நேரிடும் என்று கூறியிருந்தால், இன்று அது அவ்வாறு இழக்கப்படாதா எனவும் கேள்வி எழுப்பினார்.
.

0/Post a Comment/Comments

Previous Post Next Post