இப்போதைக்கு தேர்தல் இல்லை - ஜனாதிபதி திட்டவட்டம் - Yarl Voice இப்போதைக்கு தேர்தல் இல்லை - ஜனாதிபதி திட்டவட்டம் - Yarl Voice

இப்போதைக்கு தேர்தல் இல்லை - ஜனாதிபதி திட்டவட்டம்



இரண்டு வருடங்களுக்கு எந்தத் தேர்தலையும் நடத்த முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

தேர்தலை நடத்துமாறு கோரி மக்கள் விடுதலை முன்னணியால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"எதிரணியில் உள்ள ஒரு சில கட்சிகள் கூறுவது போல் தேசிய ரீதியில் தேர்தல் ஒன்றை இப்போதைக்கு நடத்த முடியாது. இரண்டு வருடங்களுக்கு எந்தத் தேர்தலையும் நடத்த முடியாது. உள்ளூராட்சி சபைத் தேர்தலையாவது நடத்தும்படி சில கட்சிகள் பரிந்துரைத்துள்ளன. அது தொடர்பில் பரிசீலித்து வருகின்றோம்.

மக்களின் வயிற்றுப் பிரச்சினைக்கு முதலில் நிரந்தரத் தீர்வு காணவேண்டும். அதன்பின்னரே ஏனைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் தற்போதைய அரசிடம் உண்டு. நானும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்துடன்தான் ஜனாதிபதியாகத் தெரிவாகினேன். இந்நிலையில், தேர்தலை வைத்துப் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.

எந்தவொரு தேர்தலையும் மக்கள் இப்போது விரும்பவில்லை. எதிரணியிலுள்ள ஒரு சில  கட்சிகள்தான் தேர்தலை விரும்புகின்றன.

முதலில் பொருளாதார நெருக்கடிக்கு ஒன்றிணைந்து தீர்வு காண முன்வருமாறு தேர்தலை விரும்பும் கட்சிகளுக்கு மீண்டும் மீண்டும் அழைப்பு விடுக்கின்றேன்" - என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post