தமிழர்களைத் தொடர்ந்து ஏமாற்றாமல் இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும்! - ரணில் அரசிடம் சம்பந்தன் வலியுறுத்து - Yarl Voice தமிழர்களைத் தொடர்ந்து ஏமாற்றாமல் இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும்! - ரணில் அரசிடம் சம்பந்தன் வலியுறுத்து - Yarl Voice

தமிழர்களைத் தொடர்ந்து ஏமாற்றாமல் இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும்! - ரணில் அரசிடம் சம்பந்தன் வலியுறுத்து


 
'நாங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கப் போகின்றோம்; அதற்கான பேச்சை விரைவில் ஆரம்பிக்கப் போகின்றோம்' என்று கூறி தொடர்ச்சியாகத் தமிழ் மக்களை ஏமாற்றாமல், பேச்சுக்களை இதயசுத்தியுடன் இலங்கை அரசு நடத்த வேண்டும்.

- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தேசிய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் தமிழ் மக்களுடன் அரசு விரைவில் பேச்சை ஆரம்பிக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஆகியோர் உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனிடம் வினவியபோதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"தமிழ் மக்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இதில் முதன்மையானது தேசிய இனப்பிரச்சினை.

1949ஆம் ஆண்டு தொடக்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப் பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

தீர்வு விடயம் சம்பந்தமாகத் தமிழ்த் தரப்பினர் திறந்த மனதுடன் இலங்கை அரசுகளுடன் பேச்சை நடத்தியுள்ளனர்; ஒப்பந்தங்களையும் செய்துள்ளனர்.

கொழும்பிலும், சென்னையிலும், டில்லியிலும் மற்றும் வெளிநாடுகளிலும் நடைபெற்ற பேச்சுக்களின்போது நியாயமான கோரிக்கைகளை இலங்கை அரசுகளிடம் தமிழ்த் தரப்பினர் முன்வைத்திருந்தனர்.

ஆனால், அந்தக் கோரிக்கைகள் இலங்கை அரசுகளால் நிராகரிக்கப்பட்டிருந்தன. தமிழ்த் தலைவர்களுடன் செய்துகொள்ளப்பட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்கள் இலங்கை அரசுகளால் கிழித்தெறியப்பட்டும் உள்ளன.

இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசுடன் தீர்வு விடயம் தொடர்பில் 17 சுற்றுப் பேச்சுக்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடத்தியிருந்தனர்.

18 ஆவது சுற்றுப் பேச்சுக்குச் சென்ற நாம், காத்திருந்து ஏமாந்து வந்தோம். அந்தப் பேச்சு மேசைக்கு மஹிந்த அரசு வரவில்லை.

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசில் தீர்வுக்கான பேச்சை முன்னெடுக்கப் பலவிதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அரசியல் சதியால் அவையும் தோல்வியும் முடிவடைந்தன.

ஆனபடியால், 'நாங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கப் போகின்றோம்; அதற்கான பேச்சை விரைவில் ஆரம்பிக்கப் போகின்றோம்' என்று இலங்கை அரசு தொடர்ந்து கூறி மேலும் எங்களைக் காத்திருக்க வைக்காமல், ஏமாற்றாமல் ஒரு முறையான ஒழுங்கின் பிரகாரம் பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும்; பிரச்சினைகளுக்கு விரைந்து நியாயமான தீர்வைக் காண வேண்டும்.

பிரச்சினைகளை அரசு விரைவாகத் தீர்க்காவிட்டால் உள்ளக சுயநிர்ணய உரிமை எமக்கு மறுக்கப்படுகின்றது என்றே அர்த்தம். அதன் நிமித்தம் வெளியக சுயநிர்ணய உரிமையை நாங்கள் நாட வேண்டி வரும்" - என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post