இலங்கைத் தமிழர்களுக்கு ஒன்றென்றால் ஏன் என்று கேட்பதற்கு 20 கிலோமீற்றர் தூரத்திலேயே எங்கள் அண்ணன் இருக்கின்றார்! தமிழ்நாட்டு அயலக தின நிகழ்வில் சுமந்திரன் எம்.பி. பெருமிதம் - Yarl Voice இலங்கைத் தமிழர்களுக்கு ஒன்றென்றால் ஏன் என்று கேட்பதற்கு 20 கிலோமீற்றர் தூரத்திலேயே எங்கள் அண்ணன் இருக்கின்றார்! தமிழ்நாட்டு அயலக தின நிகழ்வில் சுமந்திரன் எம்.பி. பெருமிதம் - Yarl Voice

இலங்கைத் தமிழர்களுக்கு ஒன்றென்றால் ஏன் என்று கேட்பதற்கு 20 கிலோமீற்றர் தூரத்திலேயே எங்கள் அண்ணன் இருக்கின்றார்! தமிழ்நாட்டு அயலக தின நிகழ்வில் சுமந்திரன் எம்.பி. பெருமிதம்



தமிழ் அயலக தினம் என்பது உலகெங்கும் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு புத்துணர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. நிச்சயமாக நலிந்து, மெலிந்து கிடக்கின்ற இலங்கைவாழ் தமிழர்களுக்கு இது ஓர் எழுச்சியைக் கொடுத்திருக்கின்றது. எங்களுக்கு மிகவும் பலமான உறவுகள் தமிழகத்திலே இருக்கின்றார்கள். தமிழர்களுக்கு ஒன்றென்றால் ஏன் என்று கேட்பதற்கு அண்மித்த நாட்டிலேயே - 20 கிலோ மீற்றர் தூரத்திலேயே எங்கள் அண்ணன் இருக்கின்றார் என்ற பெருமிதத்தோடும் நம்பிக்கையோடும் இன்றைக்கு நாங்கள் இலங்கையிலே வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம்.

இவ்வாறு பெருமையோடு தழிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட அயலகத் தமிழர் தின நிகழ்வில் சென்னையில் வைத்து முழங்கினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் தெரிவித்தவை வருமாறு -

இலங்கையிலே தமிழர்கள் அல்லற்பட்ட சமயத்திலெல்லாம் இங்கே குரல்கொடுத்தவர் தலைவர் கலைஞர் கருணாநிதி என்பதை என்றென்றும் நாங்கள் மறக்கமாட்டோம். அதுபோலவே அண்மித்த காலத்திலே பஞ்சம் ஏற்பட்டபோது - பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டபோது - தமிழ் உறவுகளுக்குக் கொடுங்கள் என்று சொல்லி மிகப்பெரிய உதவியை மூன்று கப்பலில் பொருள்களை நிரப்பி எங்களுக்கு உதவிகளை அனுப்பிவைத்தமையை நாங்கள் என்றைக்கும் மறக்கமாட்டோம். அதனால்தான் இன்றைக்கு நான் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு ஒரு யாழ். ஒன்றைப் பரிசாகக் கொடுத்தபோது ''மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு'' என்ற குறளிலிருந்து ஒரு பகுதியை எழுதிக் கொடுத்திருந்தோம். மாசற்ற உள்ளத்தோடு எங்களுக்கு நீங்கள் செய்த அந்த உதவிக்கு - அந்த நட்புக்கு - நாங்கள் என்றென்றும் நன்றி மறவாதிருப்போம்.

அண்மித்த காலத்திலே இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்கள் எங்களுடைய அரசியல் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக - தமிழனாகத் தலைநிமிர்ந்து நிற்பதற்காக - ஆயுதம்கூட எடுத்துப் போராடினோம். அதெல்லாம் எப்படியாக முடிந்ததென்றாலும்கூட எங்களுடைய தனித்துவத்தை நாங்கள் ஒருபோதும் விட்டுக்கொடுப்பதில்லை. அதை நாங்கள் பேசி தொடர்ந்து உரிமைக்காகக் குரல் கொடுப்பதற்காகப் பலவிதமான சாத்தியப் போராட்டங்களின் ஊடாகக்கூட நாங்கள் நிலைநாட்டுவோம் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.

அதற்குத் தமிழகம் - விசேடமாகத் தலைவர் கலைஞர் அவர்களுடைய காலத்திலிருந்து மிகவும் உறுதுணையாக இருந்திருக்கின்றது. இன்றைக்கு நீங்கள் செய்திருக்கின்ற இந்த மாபெரும்  மாநாடென்பது தமிழகம் மட்டுமல்ல, உங்கள் தலைமையிலே உலகெங்கிலும் வாழ்கின்ற தமிழர்களின் ஆதரவும் எங்களுக்கு உண்டென்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கின்றது. அதைச் செய்தமைக்கும் நான் உங்களுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

இலங்கை அரசாங்கத்தோடு - புதிய ஜனாதிபதியோடு - ஒரு பேச்சை அண்மையில் ஆரம்பித்திருக்கின்றோம். அரசியல் தீர்வுக்காக - தமிழ் மக்களின் அரசியல் விடிவுக்காக - எங்களை நாங்களே ஆளக்கூடிய ஒரு பொறிமுறையை வடக்கு, கிழக்கில் ஏற்படுத்துவதற்காக அந்தப் பேச்சிலே சில தவறுதல்கள், நான் இங்கு வருவதற்கு முதல்நாள்கூட ஒரு சுற்றுப் பேச்சு நடந்தது. அரசு சொல்பவற்றைச் செய்வதில்லை என்கின்ற ஏக்கத்தோடுதான் நான் விமானம் ஏறி இங்கே வந்துள்ளேன். நாங்களாகச் சொல்லியிருக்கின்றோம் அடுத்த சுற்றுப் பேச்சுக்கு நாம் வரமாட்டோம் என்றும் ஒரு வாரகால அவகாசம் தருகிறோம். அதற்குள்ளே சொன்னதைச் செய்யுங்கள் என்று சொல்லியிருக்கின்றோம். இப்படியான இக்கட்டான பேச்சு நடைபெறும் சமயத்திலே உலகெங்கும் வாழ்கின்ற உறவுகள் அனைவரையும் ஒன்றாகச் சந்திப்பதிலே மட்டற்ற மகிழ்ச்சி. உங்கள் அனைவருடைய ஆதரவோடும் நாங்கள் எங்களுடைய அரசியல் இலக்கை அடையக்கூடியதாக இருக்கும் என்ற ஒரு நம்பிக்கை வருகின்றது.

நான் இந்த வேளையிலே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணனுக்கும் விசேடமாக இந்தத் நிகழ்விலே வந்திருக்கின்ற அனைத்து தமிழ் அரசியல் தலைவர்களிடத்திலும் நான் கேட்பது என்னவெனில், எங்களுடைய இந்த அரசியல் போராட்டத்துக்கு நீங்கள் வலுச்சேர்க்கவேண்டும். இந்த வருடத்திலே எப்படியாவது 75 வருட காலமான அரசியல் போராட்டத்தை முடிவான - நிறைவான - புள்ளிக்குக் கொண்டுவரவேண்டும். அதற்கு உங்களுடைய குரல்களைத் தமிழ் குரலாக சேர்த்து ஒலிக்கவேண்டும் என நான் இந்த மேடையிலே அனைவருக்கும் முன்வைக்கிறேன்.உங்களுடைய ஆதரவோடு நாங்கள் எமது அரசியல் இலங்கை அடையலாம் என்ற புது நம்பிக்கை வருகின்றது. - என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post