தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அமைந்துள்ள புற்றுநோய் சிகிச்சை பிரிவிற்கு இன்று (வியாழக்கிழமை) ஒரு கோடியே 91 லட்சம் ரூபா பெறுமதியான வைத்திய உபகரண பொருள்களுடன் ஒருதொகுதி மருந்துகளும் சர்வதேச லயன்ஸ் கழகத்தின் லங்கா லயன்ஸ் பவுண்டேசனால் வழங்கி வைக்கப்பட்டது.
புற்றுநோயாளர்களது வைத்திய தேவைகளை முன்னிலைப்படுத்தி, விரைவான - பாதுகாப்பான - வைத்திய சேவைகளை வழங்குவதற்காகவும், சிகிச்சை விடுதிகளுக்கான ஒட்சிசன் தேவைகளை மேம்படுத்துவதற்காகவும் லயன்ஸ் கழகத்தினரால் இந்தப் பொருள்கள் அன்பளிப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
லயன்ஸ் கழகம் மாவட்டம் 306 பி1 இன் முன்னாள் ஆளுநர் லயன் ஆர்.எல்.ராஜ்குமார், தான் பிறந்த மண்ணுக்கு சுகாதாரத்துறைசார் உயரிய சேவையை மேற்கொள்ளவேண்டும் என்ற பெருநோக்கோடு கடந்த ஆண்டு புற்றுநோயாளர்களுக்கான ஒட்சிசன் தொகுதி வழங்குகின்ற செயற்பாட்டை ஆரம்பித்தார். அவரது அந்தச் செயற்றிட்டம் நாட்டின் கொவிட் மற்றும் பொருளாதார சூழ்நிலைகளால் இந்த ஆண்டே நிறைவுபெற்றது.
இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக, மாவட்ட ஆளுநர் வைத்தியர் லயன் அனோமா விஜிசிங்கவும்
சிறப்பு விருந்தினராக முன்னாள் சர்வதேச லயன்ஸ் கழக ஆளுநர் லயன் சுனில் வட்டவலவும் கலந்துகொண்டனர்.
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை சார்பில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.எம்.றெமான்ஸ், புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு வைத்திய நிபுணர் செல்வி கிருஷாந்தி இராஜசூரியர் ஆகியோர் இந்த உபகரணங்களைப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இவ்வாறான வைத்திய பொதுத்தேவைகளை முன்னிலைப்படுத்தி, தேவைப்படுகின்ற உதவிகளை நாடுபூராகவும் லயன்ஸ் கழகத்தினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment