யாழ் மாநகர முதல்வர் தெரிவு ஒத்திவைப்பு!! அடுத்த தெரிவு குறித்தும் ஆணையாளர் அறிவிப்பு - Yarl Voice யாழ் மாநகர முதல்வர் தெரிவு ஒத்திவைப்பு!! அடுத்த தெரிவு குறித்தும் ஆணையாளர் அறிவிப்பு - Yarl Voice

யாழ் மாநகர முதல்வர் தெரிவு ஒத்திவைப்பு!! அடுத்த தெரிவு குறித்தும் ஆணையாளர் அறிவிப்புயாழ்ப்பாணம் மாநகர சபையின் இடைக்கால முதல்வர் தெரிவுக் கூட்டம், கோரமின்மை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தெரிவுக்கான புதிய திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்ட வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ. பிரணவநாதன் கூட்டத்தை ஒத்திவைத்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் எஞ்சியுள்ள பதவிக் காலத்துக்குப் புதிய இடைக்கால முதல்வரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று காலை 10:00 மணிக்கு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ. பிரணவநாதன் தலைமையில் ஆரம்பமாகியது. எனினும் கூட்டத்ததுக்குத் தேவையான நிறைவெண் இல்லாத காரணத்தால் கூட்டம் 10:30 மணிக்கு ஆரம்பமாகும் என்று உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்தார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணன் தரப்பு உறுப்பினர்கள் சிலர் சபா மண்டபத்தினுள் வராமல், பார்வையாளர் பகுதியில் அமரந்திருந்தனர். ஈ. பி. டி. பி உறுப்பினர்கள் சபா மண்டபத்துக்கு வெளியே உறுப்பினர் அறையில் அமர்ந்திருந்தனர்.

உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்தபடி மீண்டும் 10:30 மணிக்குக் கூட்டம் ஆரம்பமாகிய நேரத்தில் 19 உறுப்பினர்கள் மட்டுமே சபா மண்டபத்தினுள் பிரசன்னமாகியிருந்தனர். இந்நிலையில், கூட்டத்துக்கான நிறைவெண் இல்லாத காரணத்தால் இன்றைய கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாகவும், தெரிவுக்கான புதிய திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்ட வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ. பிரணவநாதன் கூட்டத்தை ஒத்திவைத்தார்.

முன்னாள் முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட், கடந்த 28 ஆம் திகதி சமர்ப்பித்த 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பிலும் அது பெரும்பான்மை இல்லாமல் தோற்கடிக்கப்பட்டதன் காரணமாகப் பதவி இழந்திருந்தார். அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் இன்று 10 ஆம் திகதி வெள்ளிக் கிழமை கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ். மாநகர சபையில் ஒரு உறுப்பினர் உயிரோடு இல்லாத காரணத்தினால், மீதமுள்ள 44 உறுப்பினர்களில் 22 பேர் கூட்டத்துக்கு வந்தால் மட்டுமே கூட்டத்தை நடாத்தி, புதிய முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்ய முடியும்.

புதிய முதல்வர் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மாநகர சபை உறுப்பினருமான சொலமன் சூ. சிறிலை நியமிப்பதற்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பிரேரிக்கவுள்ளதாகக் கடந்த வாரம் கட்சி முடிவு செய்திருப்பதாக அதன் தலைவர் மாவை. சோ. சேனாதிராஜா அறிவித்திருந்தார்.

இன்றைய கூட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்கள் 9 பேரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் 3 பேரும், ஐக்கிய தேசியக் கடசியின் உறுப்பினர்கள் 2 பேரும், ரெலோ, புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றில் ஒவ்வொரு உறுப்பினர்களுமாக 19 பேர் கலந்து கொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post