வடக்கில் இனவாதத்திற்கு இடமில்லை எனவும் மக்களே அதனை நிராகரித்துள்ளதாகவும் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் திரு.ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
அமைச்சு பதவியேற்றதன் பின்னர் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் சில அரசியல் குழுக்கள் இனவாத பிரச்சினைகளை எழுப்ப முயற்சித்து வருவதாகவும், ஆனால் மக்கள் அதனை நிராகரித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
ஐந்து வருடங்கள் வாயை மூடிக்கொண்டு இருக்குமாறு மக்கள் சைகை காட்டியிருப்பதால், எதிர்காலத்தில் பிரச்சினைகளை உருவாக்க முயல்பவர்களுக்கு மக்களே பதில் அளிப்பார்கள் என்றார்.
இதேவேளை, இது மக்கள் அரசாங்கம் எனவும், இதனைப் பாதுகாத்து முன்னோக்கிச் செல்ல வேண்டிய பொறுப்பு மக்களுக்கு இருப்பதாகவும், அரசாங்கம் மந்திரவாதிகளோ, பல்லு கொண்டவர்களோ இல்லை எனவும், அனைவரும் ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்ல வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக கடற்றொழில் அமைச்சு மீனவர்களுக்கு சொந்தமான நிறுவனம் என்பதனால் கடந்த கால பிரச்சினைகளை ஒதுக்கி வைத்து மீனவர்களை முன்னேற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
காலங்காலமாக இருந்து வரும் அரசியல் தலையீடுகள் தொடராது எனவும், அதிகாரிகளுக்கு பணி செய்வதற்கு தேவையான சுதந்திரம் உள்ளதாகவும், ஆனால் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டைக் கட்டியெழுப்புவதே மக்களின் ஆணை என்பதால், நீண்டகாலமாக நிலவி வரும் மோசடிகள், ஊழல்கள், முறைகேடுகளை களைந்து, அரசாங்கம் முன்வைக்கும் கொள்கைத் திட்டத்தில் இணையுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment