இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா தனது அணிக்கு வெற்றி மேல் வெற்றியாக பெற்றுத் தந்து வருகிறார். அதை பார்த்து இந்திய ரசிகர்கள் ஏங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்ட அதே நேரத்தில் தான் சனத் ஜெயசூர்யா இலங்கை அணியின் தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் இலங்கை அணியின் தொடர் வெற்றிகளால் சனத் ஜெயசூர்யா நிரந்தர பயிற்சியாளராக மாற்றப்பட்டார். அவர் பயிற்சியாளராக பதவியேற்றதில் இருந்து இலங்கை அணி தொடர்ந்து வெற்றி மேல் வெற்றியாக குவித்து வருகிறது. கடந்த மூன்று மாதங்களில் ஐந்து தொடர்களை வென்று இருக்கிறது இலங்கை அணி.
சனத் ஜெயசூர்யா பயிற்சியாளராக வந்த பின் மேலும் இங்கிலாந்து மண்ணில் வரலாற்று சிறப்புமிக்க வகையில் ஒரு டெஸ்ட் போட்டி வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் இலங்கை அணி 3 - 0 என வெற்றி பெற்று இருந்தது. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இடம் பெற்று இருந்த இந்திய அணியை இலங்கை வீழ்த்தியது கிரிக்கெட் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
அதன் பின் சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றியது. அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டி20 தொடர் மற்றும் ஒரு நாள் தொடரை கைப்பற்றியது. அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை 1 - 1 என டிரா செய்தது. அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2 - 0 என வென்று இருக்கிறது.
இதன் மூலம் சனத் ஜெயசூர்யா தற்போது இருக்கும் பயிற்சியாளர்களிலேயே மிகவும் வெற்றிகரமான பயிற்சியாளராக உருமாறி இருக்கிறார். ஆனால், இந்திய அணியோ கவுதம் கம்பீர் தலைமையில் இரண்டு மோசமான தோல்விகளை சந்தித்து உள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும், நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரிலும் "ஒயிட் வாஷ்" (Whitewash) தோல்வியை சந்தித்து இருக்கிறது. இந்த இரண்டு தொடர்களிலும் இந்திய அணி ஒரு வெற்றியை கூட பெறவில்லை. இத்தனைக்கும் அதிக அனுபவம் கொண்ட வீரர்கள் அணியில் இடம் பெற்று இருந்தும் இந்திய அணி மோசமான தோல்விகளை சந்தித்தது.
ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த போது எப்போதும் இந்திய அணி இது போன்ற மோசமான தோல்விகளை சந்திக்கவில்லை. எனவே, பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பாட்டின் மீது அதிருப்தி ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் சனத் ஜெயசூர்யாவின் செயல்பாடு இந்திய ரசிகர்களை ஏங்க வைத்துள்ளது.
இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்கு முன் நடந்த நான்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களிலும் இந்திய அணியே தொடரை கைப்பற்றி இருந்தது. ஐந்தாவது முறையாக இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
Post a Comment