அனுர அரசில் அமைச்சு பதவிகள் குறித்து சுமந்திரன் வெளியிட்ட அறிவிப்பு! - Yarl Voice அனுர அரசில் அமைச்சு பதவிகள் குறித்து சுமந்திரன் வெளியிட்ட அறிவிப்பு! - Yarl Voice

அனுர அரசில் அமைச்சு பதவிகள் குறித்து சுமந்திரன் வெளியிட்ட அறிவிப்பு!



அனுரகுமார தலைமையிலான புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் வந்தால் அதனைப் பரிசோதித்து பார்க்க வேண்டும்.

இவ்வாறு தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பொதுத் தேர்தல் வேட்பாளருமான ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போது அமைச்சுப் பதவிகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவித்ததாவது..

நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் பரப்புரை காலத்தில் அமைச்சுப் பதவிகள் சம்பந்தமாக பல விதமான கேள்விகள் எங்களிடத்தே கேட்கப்படுகிறது. குறிப்பாக நான் கலந்து கொண்ட பல கூட்டங்களில் மக்களின் எதிர்பார்ப்பும் அப்படியாகத் தான் இருந்தது. 

முன்னைய காலத்தில் நாங்கள் அமைச்சுப் பதவிகளை எடுக்க கூடாது. ஒரு நிலையான தீர்வு வருகிற வரைக்கும் மத்திய அரசாங்கத்தில் நாங்கள் பங்கு பெறக் கூடாது என்கின்ற கருத்துக்கள் நிலவியது. 

ஆனால் அது கட்சியினுடைய கொள்கை என்று சொல்ல முடியாது. ஏனென்றால் கட்சி அப்படியாக அமைச்சு பதவிகளை எடுத்து ஒரு காலகட்டமும் இருந்திருக்கிறது.

ஆகவே அப்படியான ஒரு சூழ் நிலை வருகிற போது நாங்கள் என்ன செய்ய வேண்டுமென அந்த நேரத்தில் தான் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும்.  

எனினும் என்னுடைய சொந்த நிலைப்பாடு செல்லையா குமார சூரியரைப் போலவோ அல்லது லக்ஸ்மன் கதிர்காமரைப் போலவோ அல்லது டக்ளஸ் தேவானந்தாவைப் போலவோ தனி ஒரு அமைச்சராக அமைச்சரவையில் போய் சேருவதென்பது மக்களுக்கு நன்மை பயக்காது. அதனால் எங்களுடைய அரசியல் தீர்வும் ஏற்படாத ஒரு விசயம். 

ஆனால் முருகேசு திருச்செல்வம் போல கட்சி சார்பாக கட்சியினுடைய தீர்மானமாக மக்களும் அதனை ஏற்றுக் கொண்டு அமைச்சரவையில் சேர்ந்தார். ஆனால் அமைச்சராக இருந்தும் நடைமுறைப்படுத்த முடியவில்லை என தெரிந்த உடனேயே கட்சியின் கட்டளைப்படி அரைவாசிக் காலத்திலேயே அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்து வெளியே வந்தார்.

அது வித்தியாசமான ஒரு விடயம். எங்களுடைய மக்களையும் கட்சியையும் பிரபலப்படுத்தி இரண்டோ மூன்று பேர் அமைச்சரவையில் சேர்ந்திருந்து செயற்பட்டு எங்களுக்கான தீர்வுகளை பெறுவதென்பதும் நாங்கள் கண்கொண்டும் பார்க்க மாட்டோம் அப்படியான தெரிவு எங்களுக்கு கிடையவே கிடையாது என்ற நிலைப்பாட்டில் இருக்க கூடாது. 

ஏனெனில் காலங்கள் மாறும். நிலைமைகள் மாறும். ஆகையினால் அதற்கான ஒரு சந்தர்ப்பம் இருந்தால் அதனையும் நாங்கள் பரிசோதித்து பார்க்க வேண்டும் என்பது தான் என்னுடைய நிலைப்பாடு ஆகும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post