
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதமராக முயற்சிப்பதாக ஒருசாராரும், எதிர்க்கட்சித் தலைவராக முயற்சிக்கின்றார் என பிறிதொரு சாராரும் கூறி வந்தனர். எனினும், மஹிந்தவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே மஹிந்த தரப்பின் திட்டமென மஹிந்த தரப்பின் முக்கிய செயற்பாட்டாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக, எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கும், இறக்கும் வரை மஹிந்தவே பதவியில் இருப்பதற்கும் ஏதுவான வகையில் அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதும் அவர்களது நோக்கமென குறித்த செயற்பாட்டாளர் தெரிவித்தார்.
அதன் பிரகாரம் முதலில் நாடாளுமன்ற தேர்தலை கோரியுள்ள மஹிந்த தரப்பு, அதில் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டு அடுத்ததாக ஜனாதிபதி தேர்தலுக்குச் செல்ல எதிர்பார்த்துள்ளது.
மஹிந்தவை தவிர வேறு யாரையும் ஜனாதிபதி பதவியில் அமர்த்துவதற்கு மஹிந்த தரப்பு கற்பனை செய்யவும் இல்லையென மஹிந்த அணியின் முக்கிய செயற்பாட்டாளர் மேலும் தெரிவித்தார்.
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பாரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் மஹிந்த தரப்பு பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றியது. தற்போதைய ஆட்சியாளர்களுக்கு இது பேரிடியாக அமைந்துள்ளதோடு, மஹிந்த மீண்டும் அதிகாரத்திற்கு வந்துவிடக் கூடாதென்று உறுதியாக உள்ளனர். எனினும், சுதந்திரக் கட்சி ஆட்சியை அமைக்குமாறும், தாம் அதற்கு ஆதரவு வழங்குவதாகவும் மஹிந்த கூறி வருகிறார்.
எனினும், பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளுக்கு அமைவாக கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் நேற்றைய தினம் தேசிய அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதாக நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதியும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment