வைத்தியர் நந்தகுமார் தாக்கப்பட்டமைக்கு வடமாகாண சுகாதார பணிமனை கண்டனம் - Yarl Voice வைத்தியர் நந்தகுமார் தாக்கப்பட்டமைக்கு வடமாகாண சுகாதார பணிமனை கண்டனம் - Yarl Voice

வைத்தியர் நந்தகுமார் தாக்கப்பட்டமைக்கு வடமாகாண சுகாதார பணிமனை கண்டனம்

கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்ட ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி பரா.நந்தகுமார் தாக்கப்பட்டமையை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கண்டித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொடர்பாக கடந்த திங்கட்கிழமை (16) விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி பரா.நந்தகுமார்இ யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் த.சிவரூபன் ஆகியோர் றியோ ஐஸ்கிறீம் பணியாளர்களால் தாக்கப்பட்டனர். இது பல தரப்பினர் மத்தியிலும் பெரும் அதிருப்தியை தோற்றுவித்துள்ளது.

இந்நிலையிலேயே இச்சம்பவத்திற்கு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் இன்று (18) கண்டனம் வெளியிட்டுள்ளார். அவரது கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

நேற்று முன்தினம் ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி பரா. நந்தகுமார் அவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக எமது கண்டனத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

நாட்டில் இன்று நிலவி வருகின்ற அசாதாரண சூழ்நிலையில் கூட அர்ப்பணிப்புடனும் கடமையுணர்வுடனும் பணியாற்றும் சுகாதாரத் துறை உத்தியோகத்தர்களுக்கு பொதுமக்கள் அனைவரும் அனுசரணையாக செயற்பட வேண்டிய நிலையில் இவ்வாறு நடந்தது மனம் வருந்தத்தக்கது.

இவ்வாறான அடாவடிகள் எமது இயங்கு திறனைக் குறைத்து நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைப் பலவீனமாக்கலாம்.

இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு பொலிஸ் திணைக்களத்தைக் கோரியுள்ளதுடன் நெருக்கமாக அவதானித்தும் வருகின்றோம்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். – என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post