கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியினரைப் பிடுங்கி எடுப்பது தமிழரசின் பண்பியல்பு - சுரேஸ் குற்றச்சாட்டு - Yarl Voice கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியினரைப் பிடுங்கி எடுப்பது தமிழரசின் பண்பியல்பு - சுரேஸ் குற்றச்சாட்டு - Yarl Voice

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியினரைப் பிடுங்கி எடுப்பது தமிழரசின் பண்பியல்பு - சுரேஸ் குற்றச்சாட்டு

இலங்கை தமிழரசு கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் சந்திசிரிக்கும் அளவிற்கு சென்றுவிட்டதாக ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

கட்டப்பிராயில் உள்ள அவருடைய வீட்டில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

இலங்கை தமிழரசு கட்சி இன்று நேற்று இல்லாமல் ஆரம்ப காலத்தில் இருந்தே தமது பங்காளி கட்சிகளில் உள்ள பாராளுமன்றம் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களை தமது கட்சிகளுடன் இணைத்துக் கொள்வது வழமையாக உள்ளது.

இது தவறான செயற்பாடு. ஒரு கட்சியில் தேர்தலில் களமிறங்கி அந்த கட்சியை தமக்கான ஏணியாக பயன்படுத்தி அரசியல் செய்து பின்னர் தமிழரசு கட்சியுடன் இணைவது என்பதும் அந்த செயற்பாட்டை தமிழரசு கட்சி ஊக்குவிப்பது என்பதும் பிழையான முன்னுதாரமாகும்.

ஆரம்பத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியில் தேர்தலில் களமிறங்கியவர்தான் சிறிதரன்இ ரவிகரன் போன்றவர்கள். இவர்கள் வெற்றி பெற்ற பின்னர் தமது கட்சிக்கு சேர்த்து கொண்டவர்கள்தான் தமிழரசு கட்சியினர்.

இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு பல தடவை சொல்லியும் அவர்கள் தங்களை திருத்திக் கொள்வதாக இல்லை.

தற்போதும் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த கோடிஸ்வரனையும் தமிழரசு கட்சி தம்பக்கம் இழுத்துள்ளது. இப்போது அவரை பாராளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சி சார்பில் களமிறக்க முனைகின்றார்கள்.

கட்சி தாவுபவர்களை தமிழரசு கட்சி கைவிடுமாக இருந்தால் அரசாங்கத்துடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுபவர்களாகவே கட்சி தாவுபவர்களை நாங்கள் பார்க்கின்றோம்.

இது ஒரு புறம் இருக்க தமிழரசு கட்சிக்குள்ளே இப்போது பிரச்சினைகள் தொன்றியுள்ளது. குறிப்பாக சரவணபவன் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்க கூடாது என்று சுமந்திரனும் அதை சொல்லும் அதிகாரம் சுமந்திரனுக்கு இல்லை என்றும் சரவணபவனும் கூறும் நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.

மேலும் பெண் பிரதிநிதித்துவம் தொடர்பிலும் தமிழரசு கட்சிக்கு இடையில் முறுகல் நிலை காணப்படுகின்றது. இதனால் தமிழரசு கட்சியில் உள்ள பெண்கள் இப்போது கட்சியின் அழிவுக்கு சுமந்திரன்தான் காரணம் என்று கூக்குரல் எழும்பும் நிலைக்கு மோதல் வலுவடைந்துள்ளது.

தமிழ் மக்களுடைய அரசியல் கோரிக்கைக்காக போராடக்கூடியவர்கள் சந்தி சிரிக்க கூடிய நிலையில் உள்ளார்கள் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post