பட்டதாரிகளுக்கு தென்னிலங்கை அலுவலகங்களில் நியமனம் - தேர்தல் காலத்தில் ஒப்பமிட முடியுமா? அறிவுறுத்தல் வழங்க கோரிக்கை - Yarl Voice பட்டதாரிகளுக்கு தென்னிலங்கை அலுவலகங்களில் நியமனம் - தேர்தல் காலத்தில் ஒப்பமிட முடியுமா? அறிவுறுத்தல் வழங்க கோரிக்கை - Yarl Voice

பட்டதாரிகளுக்கு தென்னிலங்கை அலுவலகங்களில் நியமனம் - தேர்தல் காலத்தில் ஒப்பமிட முடியுமா? அறிவுறுத்தல் வழங்க கோரிக்கை


வடமாகாணத்திலுள்ள திணைக்களங்களில் ஒரு வருடம் பயிற்சி பெற்ற பட்டதாரி பயிலுநர்களுக்கு தென்னிலங்கையில் உள்ள அமைச்சு மற்றும் திணைக்களங்களில் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறித்து அவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு பயிற்சி வழங்கல் என்ற பெயரில் 2018 ஆகஸ்ட் 20 ஆம் திகதி ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரி பயிலுநர்களின் ஒரு வருட பயிற்சி காலம் நிறைவடைந்து 06  மாதங்களும் பூர்த்தியாகியுள்ள நிலையில், தற்போது அவர்களுக்கு 2020.02.27 ஆம் திகதியிடப்பட்டு நிரந்தர நியமன கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இதில், வடக்கு மாகாணத்தை குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த பெரும்பாலானவர்கள்  தென்னிலங்கையில்; உள்ள அமைச்சு மற்றும் திணைக்களங்களுக்கு இணைப்புச் செய்யப்பட்டுள்ளனர். அங்கு சென்று பணியாற்றுவதில் தாங்கள் பல்வேறு ரீதியான சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும், தமது பயிற்சி காலம் கடந்த 2019 ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைந்தமையால் அந்த மாதத்தில் இருந்தே நிரந்தர நிமனம் வழங்கப்பட வேண்டும் எனவும், மாறாக 2020.01.01 ஆம் திகதியில் இருந்தே நிரந்தர நியமனம் வழங்கப்படுகின்றது என தமது நியமன கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வேலையற்ற பட்டதாரிகளுக்கு பயிற்சி வழங்கல் என்ற பெயரில் நாடு முழுவதும் 45  ஆயிரம் வரையான பட்டதாரிகளுக்கு அரசு கடந்த வாரம் பயிலுநர் நியமனம் வழங்கி திணைக்களங்களுக்கு அனுப்பியிருந்தது. ஆனால், தேர்தல் ஆணையாளரின் அறிவுறுத்தலின் பேரில் அவர்கள் அனைவரும் தற்போது வீட்டுக்கு அனுப்பட்டிருக்கின்றனர்.

தேர்தல் காலத்தில் இவ்வாறான நியமங்களை வழங்குவது தேர்தல் விதி மீறல் என்ற அடிப்படையில் அவர்களை திணைக்களங்களுக்கு இணைப்புச் செய்ய முடியாது என தேர்தல்கள் செயலகம் அறிவித்திருந்தது. இதை அடுத்து அவர்கள் திருப்பி அனுப்பட்டனர்.

இந்நிலையில், ஏற்கனவே பயிற்சிக் காலத்தை நிறைவுசெய்த பட்டதாரிகளுக்கு நேற்று (06) தொடக்கம்  நிரந்தர நியமன கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. கடிதம் கிடைத்தவுடன் உரிய அமைச்சு அல்லது திணைக்களத்தில் ஒப்பமிடுமாறு கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (10) தென்னிலங்கையில் உள்ள அமைச்சு மற்றும் திணைக்களங்களுக்கு செல்லும்போது – தேர்தல் காலம் என்பதால் - அங்கு ஒப்பமிட முடியாது என தாங்கள் திருப்பி அனுப்பப்படும் வாய்ப்பு உள்ளதாக அவர்கள் கருதுகின்றனர்.

எனவே, உரிய அதிகாரிகள் இது விடயத்தில் தங்களுக்கு அறிவுறுத்தலை வழங்கி வீண்  அலைச்சலை தவிர்த்துக்கொள்ள உதவுமாறு மேற்படி பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post