சுகாதாரத் துறையினாலேயே கொரோனாவை வெல்ல முடியும் - அதிகாரத்தாலோ ஆயுதத்தாலோ அல்ல என்கிறார் சுரேந்திரன் - Yarl Voice சுகாதாரத் துறையினாலேயே கொரோனாவை வெல்ல முடியும் - அதிகாரத்தாலோ ஆயுதத்தாலோ அல்ல என்கிறார் சுரேந்திரன் - Yarl Voice

சுகாதாரத் துறையினாலேயே கொரோனாவை வெல்ல முடியும் - அதிகாரத்தாலோ ஆயுதத்தாலோ அல்ல என்கிறார் சுரேந்திரன்

சுகாதாரத்துறையின் வழிநடத்தல் மூலமே கொரோனாவை வெல்ல முடியும். அதிகாரத்தினாலோ ஆயுதத்தாலோ அல்ல  என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளருமான குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள் அனைத்தையும் உலுக்கிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் எமது நாடும் பாதிப்படைந்துள்ளது. இந்த நேரத்தில் எமது நாட்டிலிருந்து கொரோனாவை விரைவில் ஒழித்துவிடாலாம் என எமக்கிருந்த நம்பிக்கை மெல்ல மெல்ல அருகிவருகின்றது.

ஏற்கனவே உலக நாடுகளில் கொரோனா பரவ ஆரம்பித்த போதே விமான நிலையங்களில்  சுகாதாரத்துறையின் கண்காணிப்பின் மூலம் எமது நாட்டிற்குள் கொரோனா வைரஸை வரவிடாமல்  தடுப்பதற்கான வாய்ப்புக்கள் இருந்தும் கூட அதை தவறவிட்டாலும்  பாடசாலைகளுக்கு விடுமுறையை அறிவித்து ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி பாதுகாப்புத் துறையின் முன்னெடுப்பில் வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்தி வந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கொரோனா உச்சத் தொடங்கியுள்ளது.

சில அரசியல் இலாபத்திற்காக சுகாதாரத் துறையினரின் பரிந்துரைகளை அரசாங்கம் உதாசீனம் செய்து வருவது இந்த நாட்டை மிகவும் ஆபத்தான கட்டத்திற்கு இட்டுச்செல்லப்  போகின்றது என்ற அச்சம் எழுந்துள்ளது.

கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்துவதும்  தொற்று ஏற்பட்டவர்களுக்கு மருத்துவம் செய்யும் பொறுப்பும் கடமையும் சுகாதார துறையினரையே சாரும். அவர்களே தொற்றுநோய்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நிபுணத்துவத்தையும் அறிவையும் பெற்றுள்ளார்கள்.

எனவே அவர்கள் கூறுவதை இந்த அரசாங்கம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் . அதைவிடுத்து நிறைவேற்று அதிகாரத்தையோ இராணுவ பலத்தையோ பயன்படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்திவிடலாம் என அரசாங்கம் செயற்படுவதுபோல் தோன்றுகின்றது.

கொரோனா சந்தேக நபர்களை இடம்மாற்றுதல் தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் ஊரடங்கு தளர்வுகள் என்பன சுகாதாரத்துறையின் பங்களிப்பு இன்றி அல்லது அவர்களின் ஆலோசனைகளை மீறி இடம்பெறுவதனால் சில தவறுகள் ஏற்படுவதுடன் அவை மூடி மறைக்கப்படுகின்றது.

குறிப்பாக வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளருக்கு தெரியாமலே ஆயிரக்கணக்கான கொரோனா சந்தேக நபர்களை யாழ்ப்பாணத்திற்கு இராணுவம் கொண்டு சென்றுள்ளது.  பெரும்பாலான தனிமைப்படுத்தல் முகாம்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இயங்கியும் வருகின்றன.

தற்பொழுது தனிமைப்படுத்தல் முகாம்களிலிருந்தே அதிக நோயாளிகள் இனம்காணப்படுகின்றனர். படையினர் உயிரை வெறுத்து பணியாற்றினாலும் கூட அது சரியான சுகாதார முறைமையிலான தனிப்படுத்தல் நடவடிக்கையா இல்லையா என்பதனை சுகாதார துறையினர் மேற்பார்வை செய்ய வேண்டும். அவ்வாறு மேற்பார்வையில் ஈடுபடும் சுகாதார துறையினரின் பரிந்துரைகளை இராணுவம் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.

அதைவிடுத்து அரசாங்கம் தங்களது சார்பாக உள்ள சில மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பிரிவினரை பக்கத்தில் வைத்துக்கொண்டு நடுநிலையான அரசியல் சார்பற்ற பலரை ஓரங்கட்டி வருவதுடன் தாம் நினைப்பதையே சுகாதார துறையினர் நடைமுறைப்படுத்த வேண்டுமென கருதுவதும் தமது அரசியல் நகர்வுகளிக்கு சாதகமாக சுகாதாரத்துறை செயற்பட வேண்டுமென நினைப்பதும் அபத்தமனது.  சுகாதார அமைச்சரின்  முன்னுக்கு பின் முரணான அறிக்கைகள் சிறந்த உதாரணமாகும்.

ஏற்பட்டிருக்கும் சாதாரண நிலை மிகவும் மோசமானது. இதில் யாரும் வீரம் பேச முடியாது என்பது தற்போது வெலிசர கடற்படை முகாமில்  30 கடற்படையினருக்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ளதன் மூலம் நிருபணமாகியுள்ளது.

எனவே ஆட்சி அதிகாரத்தை கொண்டு நோய்க்கிருமிகளை அழித்துவிட முடியாது என்பதனை புரிந்துகொண்டு அரசியல் நிகழ்ச்சிநிரலை விடுத்து எவ்வாறு தேர்தல்கள் காலத்தில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு சில முடிவுகளை எடுக்கும்  அதிகாரங்கள் வழங்கப்படுகின்றதோ அதே போன்று இந்த நோய் அனர்த்த காலத்தில் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் சுகாதாரத் துறையினருக்கு வழங்கப்பட்டு அவர்களிற்கு பக்கபலமாக பாதுகாப்பு உட்பட மற்ற துறைகளும் செயல்படுவதன் மூலம் எமது நாட்டையும் மக்களையும் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post