கொரோனோ ஆபத்தை உணர்ந்து பொறுப்புணர்வுடன் செயற்படுங்கள் - மருத்துவ சங்கம் கோரிக்கை - Yarl Voice கொரோனோ ஆபத்தை உணர்ந்து பொறுப்புணர்வுடன் செயற்படுங்கள் - மருத்துவ சங்கம் கோரிக்கை - Yarl Voice

கொரோனோ ஆபத்தை உணர்ந்து பொறுப்புணர்வுடன் செயற்படுங்கள் - மருத்துவ சங்கம் கோரிக்கை

கொரோனோ ஆபத்தை உணர்ந்து பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு பொது மக்களிடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடக்கு மாகாண இணைப்பாளர் வைத்தியர் த.காண்டிபன் கேட்டுள்ளார். 

யாழ்ப்பாணத்தில் இன்று ஊரடங்கு சட்டம் அதிகாலை 5 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது.  மிக நீண்ட நாட்களுக்கு பிற்பாடு இந்த ஊரடங்கு தளர்வு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதைத்  தொடர்ந்து  அதிகளவிலான   மக்கள் நடமாட்டத்தை யாழ்ப்பாணத்தில் காணக்கூடியதாக உள்ளது .

இந்த ஊரடங்கு தளர்வின் போது பொது மக்கள் சுகாதார பிரிவினர் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்காதும் தங்களிற்கிடையே சமூக இடை வெளியினையும் பேணாமலும் அவர்கள் நடந்து கொள்வது கவலையளிகின்றது. 

இதேவேளை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இன்று தனிமைப்படுத்தப்பட்டவர்களில் 39பேருக்கு இன்று பரிசோதனைகள் செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.  

 வட மாகாணம் முழுவதும் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு உள்ளது. ஆனாலும் நாட்டில் கொரோனா தொற்றும் வாய்ப்புள்ள அசாதாரண நிலை நிலவுவதன் காரணமாக பொது மக்கள் சுகாதாரத்துறையினால் கூறப்படுகின்ற  விடயங்களை கடைப்பிடிக்காமை சுகாதாரத்துறையின் அர்ப்பணிப்பான சேவையினால் வட மாகாணத்தில் கொரோனா தாக்கத்தினை கட்டுப்படுத்தி தக்க வைப்பதை இல்லாதொழிக்கும் செயற்பாடுகள் என அஞ்சுகின்றோம்.

மக்கள் மதுபானக்கடைகளிற்கும் புடவை கடைகளிற்கும் நகைக் கடைகளிலும் வரிசையில் நிற்பது கவலையளிகின்றது.அத்தியாவசியமான பொருட் கொள்வனவு செய்வதிலும மக்கள் முண்டியடிக்கிறார்கள்.
 இதனை வட மாகாண ஆளுநர் அரச அதிபர் கவனத்தில் கொள்ள வேண்டும்.  

இதனால் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் சமூக மட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கான பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சூழ்நிலையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தாலும் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே வருபவர்கள்  கட்டாயமாக சமூக இடைவெளியினை பேண வேண்டும். அலுவலகங்கள் அல்லது  நிறுவனங்களில்  மக்கள் பலர் கூடக்கூடிய இடங்களில் பொருத்தமான  தனிநபர்களுக்கிடையிலான சமூக இடைவெளியை பேணுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் நாட்டில் கொரோனா அபாயம் முற்றாக நீங்கும் வரை வயோதிபர்கள் வீட்டுக்குள்ளயே இருத்தல் நன்று. மக்கள்  போக்குவரத்துச் சேவைகளை பயன்படுத்தும் போது வாகனங்களிலும் பஸ்களிலும்  கட்டாயமாக ஒரு மீற்றர் சமூக இடைவெளியைப் பேணவும். சில வாகனங்களில் மக்கள் அருகருகில் நின்று பயணம் செய்வதை காணக்கூடியதாக உள்ளது.
மக்கள் வெளிச்செல்லும் போது ஏதாவது ஒரு முகக்கவசத்தை உபயோகிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

வீட்டில் உள்ள போதும் அடிக்கடி கைகளை உரிய முறையில் சவர்க்காரம் இட்டு கழுவுங்கள்.வீட்டுக்கு வெளியில் சென்றுஇ திரும்பும்போது நன்றாக  ஆகக்குறைந்தது கைகளையாவது சரியான முறையில் ஓடும் நீரில் 20 செக்கன் சவர்க்காரம் கொண்டு கழுவுங்கள். மேலும் கண் மூக்கு வாய் முகம் போன்றவற்றை கைகளால் தொடுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

கொரோனா நோயானது 80 வீதம் தொற்றுள்ளவர்களில் குறைந்த அறிகுறிகளுடன் மட்டுமே வெளிப்படுத்தப்படும் என்பதாலும் 70 வீதம் மட்டுமே  பரிசோதனைகளில் வெளிப்படுத்தப்படும் என்பதாலும் சமூகத்தில் நீங்கள் பழகுபவர்களில் இருந்து தொற்று ஏற்படலாம் என்பதை ஞாபகத்தில் வைத்திருக்கவும்.

உங்களுக்கு கொரோனா தொற்றுக்குரிய அறிகுறிகளாகிய தொண்டை நோ வறட்டு இருமல் காய்ச்சல் தலையிடி போன்ற அறிகுறிகள் ஏதும் ஏற்பட்டால் சுகாதார வைத்திய அதிகாரி அல்லது  உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலையை அணுகுங்கள்.

மக்கள் கொரோனாவை கட்டுப்படுத்த இதுவரை காலம் அளித்த ஒத்துழைப்பை இந்த ஊரடங்கு நீக்கிய காலத்தில் அளிக்க வேண்டும் என்று தயவாய் கேட்டு கொள்கிறோம். 

0/Post a Comment/Comments

Previous Post Next Post