மூத்த பிரஜைகளுக்கு சத்துணவு வழங்கும் செயற்திட்டம் வலி தென்மேற்கு பிரதேச சபையால் ஆரம்பம் - Yarl Voice மூத்த பிரஜைகளுக்கு சத்துணவு வழங்கும் செயற்திட்டம் வலி தென்மேற்கு பிரதேச சபையால் ஆரம்பம் - Yarl Voice

மூத்த பிரஜைகளுக்கு சத்துணவு வழங்கும் செயற்திட்டம் வலி தென்மேற்கு பிரதேச சபையால் ஆரம்பம்

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையினரால் சபை நிதி 10 இலட்சம் ரூபாவில் முதற்கட்டமாக 1250 மூத்த பிரஜைகளுக்கு சத்துணவுப் பொதிகள் வழங்கும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையினால் மூத்த பிரஜைகளுக்கு சத்துணவு வழங்கும்  செயற்றிட்டம் நேற்றுமுதல் (08.04.2020) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் அமுல்ப் படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச்சட்டத்தினால் மக்கள் பெரிதும் தமது இயல்பு நிலையினை இழந்துள்ளனர். இவர்களுக்கான உதவிகளை வழங்கும் பணிகள் பலவளிகளிலும் எம்மால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

 மேலும் முதியவர்கள் நலிவுற்றோர்களுக்கே இத் தொற்றின் பாதிப்பு உயர்வாக இருப்பதனால் முதியவர்களுக்கு விசேடமாக உதவித்திட்டங்கள் வழங்கப்படவேண்டும் என்று 29.03.2020 ஆம் திகதிய சபைக்கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளினால் மேற்கொள்ளப்பட்ட  தீர்மானத்திற்கு அமைவாக முதியோரிற்கான இவ் விசேட திட்டம் ஒன்று எம்மால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதாவது வருமுன் காப்போம் செயற்றிட்டத்தின் கீழ் முதியவர்களுக்கு சத்துணவு வழங்கும் நடைமுறை நேற்றுமுதல் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையினரால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

சுகாதார வைத்திய அதியாரியின் ஆலோசனைக்கமைவாக முதியோர்களின் நலன்கருதி அவர்களது உடல்நலனிற்கு உகந்தவகையில் அரிசிமா மற்றும் சத்துமா என்பன வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய  பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களிடம் இருந்து பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன என்பதுடன் சுகாதார பரிசோதகர்களின் மேற்பர்வையின்கீழ் பொதியிடும் செயற்பாடுகள்  முன்னெடுக்கப்ட்டன.

இதுவரை உதவிகள் எதுவும்  வழங்கப்படாத மூத்த பிரஜைகள் என பிரதேச செயலகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கு கிராம சேவையாளர் பிரிவு ரீதியாக செயலாளர் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்களினால்   கிராமசேவையாளரின் உறுதிப்படுத்தலுடன் இச் சந்துணவுப்பொதிகள் வழங்கப்பட்டுவருகின்றது.

முதற்கட்டமாக பிரதேச செயலகத்தால் உறுதிப்படுத்தப்பட்ட 1250 மூத்தபிரஜைகளுக்கு சத்துணவு வழங்கப்பட்டுவருகின்றது. தொடர்ந்து கட்டம் கட்டமாக இச்செயற்றிட்டம் எம்மால் முன்னெடுக்கப்படும் என்பதுடன் ஏனைய பாதிக்கப்ட்டவர்களுக்கு உதவி வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எம்மால் முன்னெடுக்கப்படும் என வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் தெரிவித்தார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post