சுமந்திரன் மீதான அவதூறுகள் உரிமைப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் - அஸ்மின் சுட்டிக்காட்டு - Yarl Voice சுமந்திரன் மீதான அவதூறுகள் உரிமைப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் - அஸ்மின் சுட்டிக்காட்டு - Yarl Voice

சுமந்திரன் மீதான அவதூறுகள் உரிமைப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் - அஸ்மின் சுட்டிக்காட்டு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் மீதான அவதூறுகள் தமிழ்பேசும் மக்களின் வன்மையான கண்டனங்களைப் பெற்றுள்ளன என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அ.அஸ்மின் தெரிவித்துள்ளார்.

 இது குறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது..

நான் வன்முறைக்கு எதிரானவன் என்று அண்மையில் சுமந்திரன் (பா.உ) அவர்கள் சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலே குறிப்பிட்டிருந்தார்; இதனை அடிப்படையாக தமிழ் மக்களின் அரசியல் பரப்பிலே ஒரு சர்ச்சை தோற்றுவிக்கப்பட்டிருந்தது.

முன்னாள் தமிழ் ஆயுதக்குழுக்களின் தலைவர்கள் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஒரு சில ஊடகங்கள் பொறுப்பற்றவிதமாக பல்வேறு அறிக்கைகளை முண்டியடித்துக்கொண்டு வெளியிட்டனர்.

 தேசிய சர்வதேசிய அளவில் இயங்குகின்ற சமூகவலைத்தள செயற்பாட்டாளர்கள தமிழ் நாட்டிலே கூலிக்கு மாரடிக்கின்ற ஈழத்தமிழ் அபிமானிகள் எனப்பலரும் சுமந்திரனுக்கு எதிரான காழ்ப்புணர்வுகளைக் கொட்டித்தீர்க்கின்ற சந்தர்ப்பமாக இதனைப் பயன்படுத்திக்கொண்டார்கள்.

இலங்கை அரசியலில் திக்கற்றவர்களாக இருக்கின்ற முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர்   சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்  கஜேந்திரகுமார் பொண்ணம்பலம் அவர்கள் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்  செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் உதயன் பத்திரிகை உரிமையாளர்  ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்கள் இன்னும் பல காளான் கட்சிகளின் தலைவர்கள் பலரும் சுமந்திரன் அவர்களுக்கு எதிராக கண்டன அறிக்கைகளை வெளியிட்டிருந்தார்கள்.

அந்த அறிக்கைகள் அனைத்துமே 'சுமந்திரன் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளைக் கொச்சைப்படுத்திவிட்டார்' என்பதாகவே அமைந்திருந்தன ஆனால் சிங்களமொழிமூலத்தில் வழங்கப்பட்ட அந்த செவ்வியில் அவ்வாறான ஒரு கொச்சைப்படுத்தல் கூற்று இடம்பெற்றிருப்பதாக பலதடவைகள் மீட்டி மீட்டி குறித்த செவ்வியைப் பார்த்தபோதும் எனக்குத் தென்படவில்லை.

சுமந்திரன் அவர்கள் நான் ஆயுதப் போராட்டத்திற்கும் வன்முறைக்கும் எதிரானவன் என்று குறிப்பிட்ட வாசகத்தை தற்போதைய அரசாங்கத்தின் அடிவருடி ஊடகமொன்று 'சுமந்திரன் தான் புலிகளுக்கு எதிரானவர்' என்று கருத்து வெளியிட்டதாக ஒரு இட்டுக்கட்டப்பட்ட செய்தியை வெளியிட்டிருந்தது இதனை அடிப்படையாக வைத்தே பலரும் அறிக்கைப்போரில் குதித்தனர்.

இந்த இடத்தில் விடயத்தை முழுமையாக அறிந்துகொள்ளாமல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் அண்ணன் மாவை சேனாதிராசா அவர்களும் அறிக்கை விட்டமை மக்களின் மிகுந்த கண்டனங்களையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

தந்தை செல்வா முதல் தலைவர் சம்பந்தன் வரையில் அலங்கரித்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைமைப் பீடத்தை அலங்கரிக்கின்ற ஒரு தலைவரிடமிருந்து மக்கள் இத்தகைய ஒரு கருத்தை எதிர்பார்த்திருக்கவில்லை.

தமிழ் மக்கள் மத்தியில் தமது அரசியல் முகவரிகளை இழந்திருக்கின்ற தலைவர்கள் வரிசையில் இப்போது அண்ணன் மாவை அவர்களும் ஓடிப்போய் நின்றுவிட்டாரா என்ற கேள்வி மக்கள் முன்னால் எழுகின்றது.

தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டமானது தமிழ்பேசும் மக்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்கின்றதாக இருக்கவேண்டுமேயன்றி அது தன்னுடைய சமூகத்துக்குள்ளேயே பிரிவினைகளை உருவாக்கி ஒருவரையொருவர் தூற்றுகின்ற பலிதீர்க்கின்ற போக்கினைக் கொண்டதாக இருக்கக் கூடாது.

இப்போது  சுமந்திரன் அவர்கள் மீது முன்வைக்கப்படுகின்ற அவதூறுகள் அனைத்துமே தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தும் ஈனச்செயலாக அமைந்திருக்கின்றதேயன்றி அது தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மைகளையும் எந்தவிதத்திலும் பெற்றுத்தராது என்பதை அனைவரும் மனதில் இருத்திக்கொள்தல் அவசியமே.


0/Post a Comment/Comments

Previous Post Next Post