தமிழ் மக்கள் சிறுபான்மை இனமல்ல தேசிய இனம்.. - Yarl Voice தமிழ் மக்கள் சிறுபான்மை இனமல்ல தேசிய இனம்.. - Yarl Voice

தமிழ் மக்கள் சிறுபான்மை இனமல்ல தேசிய இனம்..

தமிழ்மக்களை தமிழ் அரசியல்வாதிகளில் பலர் கூட சிறுபான்மை இனம் என்றே விழிக்கும் நிலை காணப்படுகின்றது. சம்பந்தன் ஐயா கூட பல இடங்களில் சிறுபான்மை இனம் என சொல்லிக் கொண்டு வந்தார். உண்மையிலே தமிழ் மக்களை ஒரு சிறுபான்மை இனமாக கொள்வதா அல்லது தேசிய இனமாக கொள்வதா என்கிற விவகாரம் 70 களிலேயே தீர்க்கப்பட்ட விவகாரம்.   என நிமிர்வுக்கு  கருத்து தெரிவித்தார் அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம். 

அவர் மேலும் முக்கியமாக தெரிவித்த விடயங்கள் வருமாறு, 

யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடந்த அரசியல் கூட்டமொன்றில் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ராஜதுரை அவர்கள்    பேசும் போது "தமிழ் மக்கள் ஒரு சிறுபான்மை இனம். அவர்கள் உரிமைக்காக போராடுகின்றார்கள்" என்று  குறிப்பிட்டார். 

அதற்கடுத்து பேசியவர் அன்றைக்கு தமிழ் இளைஞர் பேரவையின் முக்கியஸ்தராக இருந்த வரதராஜப் பெருமாள்.  அவர் பேசும் போது "அண்ணன் ராஜதுரை அவர்கள் கூறுவது தவறு. தமிழ் மக்கள் சிறுபான்மையினம் அல்ல. தமிழ்மக்கள் ஒரு தேசிய இனம்.  தமிழ் மக்கள் உரிமைக்காக போராடவில்லை. அவர்கள் தங்கள் விடுதலைக்காக போராடுகின்றார்கள்"  என்று குறிப்பிட்டார். 

அதற்குப் பிறகு அமிர்தலிங்கம் பேசினார். "தம்பி வரதன் சொல்வது தான் சரி. தமிழ்மக்கள் சிறுபான்மையினமல்ல. தேசியஇனம். அவர்கள் உரிமைக்காக போராடவில்லை. தங்கள் விடுதலைக்காக போராடுகின்றார்கள். " என்று குறிப்பிட்டிருந்தார். 

அதற்குப் பிறகு தமிழர் விடுதலைக் கூட்டணி என்றாலும் சரி, முக்கிய தலைவர்கள் என்றாலும் சரி, முக்கிய வெளியீடுகள் என்றாலும் சரி சிறுபான்மையினம் என்கிற விடயம் அகற்றப்பட்டு  தமிழ்மக்கள் ஒரு தேசிய இனம் என்கிற விடயம் தான் முன்னுக்கு கொண்டு வரப்பட்டது.  

அதுவும் தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையாக இருந்த சுதந்திரன் பத்திரிகையின் அடிப்பக்கத்தில் "தமிழ் சிறுபான்மையினத்தின் உரிமைக்குரல்" என்று தான் வந்தது. 

முற்றவெளிக் கூட்டத்துக்கு பிறகு "தமிழ் தேசிய இனத்தின் விடுதலைக் குரல்" என சுதந்திரன் பத்திரிகையின் அடி வரி மாற்றப்பட்டது. 

ஆகவே இது 70 களில் தீர்க்கப்பட்ட பிரச்சினை.   அன்று தீர்க்கப்பட்ட பிரச்சினையை சரியாக விளங்கிக் கொள்ளாமல் இப்போதும் சொல்லிக் கொண்டு வருகின்றார்கள் என்று சொன்னால் இவர்களை எப்படி திரும்பவும் தமிழ் அரசியல் தலைவர்கள் என்று ஏற்றுக் கொள்வது? என்கிற கேள்வி இங்கே வருகின்றது. 

சிறுபான்மையினம் என்று சொல்லும் போது எஙக்ளுக்கு பல நெருக்கடிகள் வருகின்றன. இலங்கையின் அரச அதிகாரக் கட்டமைப்பினை ஏற்றுக் கொள்கின்றோம் என்று வந்துவிடும்.  அப்படி வந்தால் சுயநிர்ணயமுடைய சுயாட்சி அதிகாரங்களை எங்களால் கோர முடியாது போய் விடும். இது மிகவும் முக்கியமான விவகாரம்.  

நாங்கள் சிறுபான்மையினமல்ல. தனியான ஒரு தேசம். நாங்கள் விடுதலைக்காக போராடுகின்றோம் என்கிற அந்தக் கருத்து நிலையை மக்கள் மத்தியில் பேசுபொருளாக்கி கொண்டு செல்லும் செயற்பாட்டை கட்டாயம் செய்ய வேண்டும்.   ஊடகங்களும் அதில் வலுவான கவனத்தை குவிக்க வேண்டும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post