பாடத் திட்டங்களை மாற்றும் அறிவிப்பை தமிழக அரசு மீளப்பெற வேண்டும்- வைகோ கோரிக்கை! - Yarl Voice பாடத் திட்டங்களை மாற்றும் அறிவிப்பை தமிழக அரசு மீளப்பெற வேண்டும்- வைகோ கோரிக்கை! - Yarl Voice

பாடத் திட்டங்களை மாற்றும் அறிவிப்பை தமிழக அரசு மீளப்பெற வேண்டும்- வைகோ கோரிக்கை!

தமிழக அரசு வெளியிட்ட, 11 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களை மாற்றும் அறிவிப்பை மீளப்பெற வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் இன்று (வியாழக்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “மத்திய பா.ஜ.க. அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து எதிர்ப்புகள் தொடர்ந்துவரும் நிலையில், அந்த கொள்கைக்கு ஏற்றவாறு மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ மாற்றங்களை நடைமுறைப்படுத்தும் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி அரசு சத்தமின்றி செய்துவருகிறது.
மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதாகக் கூறிக்கொண்டு கல்வி முறையில், அதன் திட்டங்களில் தமிழக அரசு மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ள விடயமானது, தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்கள் உயர் கல்வி பயிலுவதற்கான பெரும் வாய்ப்புகளையே தட்டிப் பறிக்கும் பாரதூரமான செயலாகவே அமைகின்றது.
இதேவேளை, மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு இடம் கிடைக்காத மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட முன்னணி பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்பில் சேர்ந்து பயில விரும்பினால், மாற்றப்பட்ட பாடப் பிரிவுகளின் கீழ் 12 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருந்தாலும் பொறியியல் படிப்புகளில் சேர முடியாது.
ஏனெனில், புதிய கல்வி முறையின் பிரிவு மூன்று மற்றும் பிரிவு நான்கில் சேரும் மாணவர்கள் மருத்துவப் படிப்பு மற்றும் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பம் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளும் வகையில் புதிய பாடப் பிரிவுகள் மூலம் சதி நடவடிக்கை இடம்பெறுகிறது.
இதேவேளை, மத்திய பா.ஜ.க. அரசு திணித்துள்ள நீட் நுழைவுத் தேர்வானது, தமிழக மாணவர்களின் மருத்துவப் படிப்புகளைக் கானல் நீராக்கியுள்ள நிலையில், தற்போது பொறியியல் கல்வி மாணவர்களின் கனவையும் தகர்க்கும் வகையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டே புதிய கல்வித் திட்டத்தை கொண்டுவருகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.
ஏனெனில், தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பொறியியல் கல்லூரிகளில் வடநாட்டு மாணவர்களைச் சேர்க்கும் பா.ஜ.க. அரசின் வஞ்சகப் போக்கிற்கு எடப்பாடி பழனிசாமி அரசு பலியாகி இருக்கிறது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இது வன்மையான கண்டனத்துக்கு உரியது.
எனவே, தமிழக அரசு 11 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களை மாற்றும் அறிவிப்பை மீளப்பெற வேண்டும்” என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post