அடுத்தடுத்து கிராண்ட்ஸ்லாம் தொடர்களை நடத்துவது தொடர்பாக நடால்- முர்ரே அதிருப்தி - Yarl Voice அடுத்தடுத்து கிராண்ட்ஸ்லாம் தொடர்களை நடத்துவது தொடர்பாக நடால்- முர்ரே அதிருப்தி - Yarl Voice

அடுத்தடுத்து கிராண்ட்ஸ்லாம் தொடர்களை நடத்துவது தொடர்பாக நடால்- முர்ரே அதிருப்தி

குறுகிய இடைவெளியில் அடுத்தடுத்து கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடர்களை நடத்துவது தொடர்பாக, நட்சத்திர வீரர்களான ரபேல் நடால் மற்றும் என்டி முர்ரே ஆகியோர் தங்களது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக ஸ்பெயினின் முன்னணி டென்னிஸ் வீரரான ரபேல் நடால் கூறுகையில், “இப்படி அடுத்தடுத்து கிராண்ட்ஸ்லாம் தொடர்களை நடத்துவது சரியல்ல. 

இதனால் வீரர்கள் உடல் மற்றும் மன ரீதியாக கடும் நெருக்கடிக்கு ஆளாவார்கள். குறிப்பாக, மூத்த வீரர்களுக்கு இது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அட்டவணை தயாரிப்பில் ஏடிபி இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும்” என கூறினார்.

இதனைத் தொடர்ந்து பிரித்தானியாவின் முன்னணி டென்னிஸ் வீரரான என்டி முர்ரே இதுகுறித்து கூறுகையில், “கடின மைதானங்களில் விளையாடிய உடனேயே களிமண் மைதானத்தில் விளையாட வேண்டிய கட்டாயம் என்பது மிகவும் சவாலானது. இதனால் வீரர்கள் காயம் அடைவதற்கான வாய்ப்பு மிக அதிகம். மேலும் குறைந்த அவகாசத்தில் அடுத்தடுத்து கிராண்ட்ஸ்லாம் போன்ற பெரிய தொடர்களில் விளையாடுவது மிகவும் சிரமம்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீண்ட நாட்களாக வீட்டில் முடங்கியிருக்கும் வீரர்கள் உடனடியாக முழுவீச்சில் களமிறங்குவது என்பதும் நடைமுறையில் சாத்தியமாக இருக்காது. அமெரிக்க பகிரங்க காலிறுதி, அரையிறுதி, இறுதிப்போட்டியில் விளையாடும் ஒரு வீரர், ஒரே வாரத்தில் பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரில் விளையாட வேண்டும் என்பது மிகக் கொடுமையான தண்டனை” என கூறியுள்ளார்.

ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர், ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதி முதல் செப்டம்பர் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்ட பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர், செப்டம்பர் 20ஆம் திகதி முதல் ஒக்டோபர் 4ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post