தமிழர்களின் வரலாற்று தலங்களை ஆக்கிரமித்து பௌத்த மயமாக்கும் சதித் திட்டத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டிப்பதாக அக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் சிரேஸ்ர சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணண் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களின் கலை கலாச்சார பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களை ஆக்கிரமிப்பது மட்டுமல்லாது அதனை அழித்தொழிக்கின்ற திட்டமிட்ட வேலைகளையே தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது.
சிறிலங்கா அரசுகளின் இத்தகைய இனவாதச் செயற்பாடுகளுக்கு பௌத்த பேரினவாதிகள் தொடர்ந்தும் ஆதரவை வழங்கி வருகின்றனர். ஏனெனில் சிங்கள அரசுகளும் அதே பேரினவாதச் சிந்தனையுடன் தான் தொடர்ந்தும் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆகவே சிங்கள பேரினவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்பட்டும் வருகின்ற எமது தேசத்தைப் பாதுகாக்க வேண்டும். அதற்கு எமது தேசம் அங்கீகரிக்கப்பட்ட தீர்வொன்று எமக்கு கிடைக்க வேண்டும். அதற்காகவே தொடர்ந்தும் நாம் செயற்பட்டு வருகின்றோம்.
குறிப்பாக அண்மையில் கூட திருக்கோணேச்சரம் மற்றும் நல்லூர் ஆகிய தமிழ் மக்களின் வரலாற்று தலங்களை தமிழ் மக்களுக்குச் சொந்தமில்லை என்றும் அது சிங்கள மக்களுக்கே சொந்தமென்றும் புதுக்கதை விட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறாக தமிழ் மக்களின் வரலாற்று தளங்களை அழிப்பது மட்டுமல்லாது அதனை ஆக்கிரமிக்கும் கைங்கரியத்தை திட்டமிட்ட வகையில் பேரினவாதிகள் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களது இவ்வாறான கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
அதே நேரத்தில் வரலாறு தெரியாமல் உளறுகின்ற இந்தப் பேரினவாதிகள் தாம் நினைத்ததை எல்லாம் பேசலாம் என்று கருதுகின்றனர். அவர்களது இத்தகைய கருத்துக்களுக்கு ஆதரவான நிலைப்பாடுகளையே ஆட்சியாளர்களும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும் இலங்கைத் தீவை முழுமையாக பௌத்த மயமாக்கும் பேரினவாதிகளின் இத்தகைய சதித் திட்டத்திற்கமைய தமிழர்களின் வரலாற்று தலங்களை ஆக்கிரமிக்கும் கபட நோக்கத்தை நாங்கள் எதிர்க்கின்றோம். அத்தகைய செயற்பாடுகளுக்கு கண்டனங்களையும் தெரிவிக்கின்றோம்.
இத்தகைய செயற்பாடுகளை ஒரு கட்டமைப்பு சார் இனவழிப்பாகவே பார்க்கின்றோம். கட்டமைப்பு சார் இனவழிப்பு என்பது பண்பாடு கலை கலாச்சாரங்களையும் அழிப்பது தான். அதன் ஒரு வடிவம் தான் இது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment