நெருக்கடிமிக்க சூழலில் பொறுமையோடும் விவேகத்தோடும் செயற்பட வேண்டும் - சிறிகாந்தா வலியுறுத்து - Yarl Voice நெருக்கடிமிக்க சூழலில் பொறுமையோடும் விவேகத்தோடும் செயற்பட வேண்டும் - சிறிகாந்தா வலியுறுத்து - Yarl Voice

நெருக்கடிமிக்க சூழலில் பொறுமையோடும் விவேகத்தோடும் செயற்பட வேண்டும் - சிறிகாந்தா வலியுறுத்து


தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரன் அவர்களுக்கு கூட்டணியின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான தமிழ்த் தேசியக் கட்சியினால் யாழ் நகரில் நேற்று சனிக்கிழமை மாலை அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில் அக்கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ந.ஶ்ரீகாந்தா ஆற்றிய உரையிலிருந்து....

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் புதிய அரசாங்கம் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் ஆட்சி பீடத்தில் அமர்த்தப்பட்டிருக்கின்றது.  பௌத்த சிங்கள வாக்குகளே தங்களை ஆட்சியில் அமர்த்தியதாக  அரசாங்கத் தலைவர்கள் கூறி வருவதை  அனைவரும்  அறிவர்.

சுதந்திர இலங்கைத்தீவின் வரலாற்றில கடந்த காலத்தில் சில சந்தர்ப்பங்களில் பாரிய ஆதரவுடன் அரசாங்கங்கள் பதவிக்கு வந்திருக்கின்றன.

1956ல் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாவிட்டாலும் பண்டார நாயக்கா தலைமையில் போதுமான அறுதிப் பெரும்பான்மையோடும் இருபத்து நான்கு மணி நேரத்தில் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி ஆக்கப்படும் என்ற இனவெறிக் கோஷத்தோடும் ஒரு அரசாங்கம் சிங்கள மக்களால் ஆட்சியில் அமர்த்தப்பட்டது. 

அடுத்த இரண்டாண்டு காலத்தில்இஅதுவரை இலங்கையின் வரலாறு காணாத இனவெறித் தாக்குதல்களை தமிழ் மக்கள் சந்தித்தார்கள்.

பின்னர் 1970ல்  பண்டார நாயக்கா அவர்களின் விதவை மனைவி சிறிமா பண்டார நாயக்கா தலைமையில் இடதுசாரிக்கட்சிகளையும் உள்ளடக்கிய ஒர் கூட்டு அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பதவியில் அமர்த்தப்பட்டது.

அந்த அரசாங்கம் ஒர் புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கி இலங்கையை குடியரசாகப் பிரகடனப்படுத்தியது. சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்பதும் பவுத்தமே அரசாங்க மதம் என்பதும் அரசியல் சாசனத்தினூடாக உறுதிப்படுத்தப்பட்டது. 

இதன் விளைவாக  தமிழினத்தின் அரசியல் விடுதலைக்காக தீவிரவாத அரசியல் சிந்தனை கொண்ட இளைஞர்களால் ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அங்கும் இங்குமாக நிகழ்ந்த சில வன்முறைச் சம்பவங்களோடு மட்டுமே அந்த ஆயுதப் போராட்டம் அமைந்திருந்தது. 

இந்த நிலையில் 1977ல் நிகழ்ந்த பொதுத் தேர்தலில் ஜனநாயகத்தின் பாதுகாவலன் என்ற தோற்றப்பாட்டோடு அன்றைய ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ஜெ ஆர் ஜெயவர்த்தானா பாராளுமன்றத்தில் ஆறில் ஐந்து பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்தார்.

அவரின் அரசாங்கம்இ பதவிக்கு வந்து ஒரு வருடத்திற்குள் ஒர் புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கியது. அதற்கு முந்திய அரசியல் சாசனத்தை அடியொற்றி வந்த இந்தப் புதிய அரசியல் சாசனமும் சிங்கள பவுத்த மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தும் விதத்திலேயே அமைந்திருந்தது. 

இந்த அரசியல் சூழ்நிலையில் தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் வலுப்பெற ஆரம்பித்த போதுஇ அதை அடக்கி அழிப்பதற்காக 1979ல் பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது.

மூன்று வருடங்களுக்கு மாத்திரமே அந்தச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என்ற காலக் கட்டுப்பாட்டு ஏற்பாட்டை முன்வைத்த ஜனாதிபதி ஜெயவர்த்தன அதனூடாக 18 எம் பிக் களோடு அப்போதைய பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் இயங்கிய அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணி இந்த சட்டம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது சபையில் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்தியிருந்தார். 

எட்டு எம் பிக் களோடு பாராளுமன்றத்தில் இருந்த ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிளவடைந்திருந்த நிலையில்இமைத்திரிபால சேனநாயக்கா தலைமையில் செயற்பட்டஇஅதன் ஒரு பிரிவைச் சேர்ந்த சில எம் பிக் கள் மாத்திரமே பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக வாக்களித்தார்கள்.

பயங்கரவாத சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த மூன்று வருட காலம் முடிவடையும் தறுவாயில் ஜனாதிபதி ஜெயவர்த்தன சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டுவந்துஇஅந்தக் கால எல்லையை நீக்கி பயங்கரவாதத் தடைச்சட்டம் சட்டப்புத்தகத்தில் நிரந்தரமாக இடம்பெறுவதை உறுதிப்படுத்தினார்.

இந்த அரசியல் பின்னணியில் ஆயுதப் போராட்டம் மேலும் தீவிரமடைந்த நிலையில்   1983 ஆடி மாதத்தில் தமிழ் இனத்திற்கு  எதிரான வன்முறை அரசாங்கத்தின் ஆதரவுடன்   பாரிய அளவில்  நிகழ்த்தப்பட்டது.

இந்த வெறியாட்டத்தில் வெலிக்கடைச் சிறையில் 53 தமிழ் அரசியல் கைதிகள்  படுகொலை செய்யப்பட்டார்கள். அப்போது சின்னஞ்சிறிய இலங்கைத் தீவை வெளி உலகம் திரும்பிப் பார்த்தது.  அண்டை நாடான இந்தியாவின் தலையீடு இலங்கைத் தமிழர் பிரச்சனையில் நேரடியாகவே மேற்கொள்ளப்பட்டது. 

இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலை போராட்ட இயக்கங்களுக்கு மிடையில் பெரும் போர் மூண்டது.  சிற்சில இடைவேளைகளோடும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் குறுக்கீட்டிற்கு நடுவிலும் இந்தப்போர் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான நேரடி மோதலாக மாறிஇதொடர்ந்து நீடித்து 2009 வைகாசி மாதத்தில் முற்றுப் பெற்றது. 

யுத்தம் முடிவுக்கு வந்து பதினொரு வருடங்கள் பறந்தோடி விட்ட நிலையிலும் இலங்கைத் தீவின் இனப்பிரச்சனைக்கு இன்னமும் தீர்வில்லை.
 இந்த நிலையில் தான் மகிந்த ராஜபக்சவின் புதிய அரசாங்கம் பதவி ஏற்றிருக்கின்றது. 

225 பேர் கொண்ட பாராளுமன்றத்தில் எதிர்த்தரப்பில் 75 எம் பிக்கள். இவர்களில் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்தவர்கள் 54 பேர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புஇதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என தமிழ் தேசியம் சார்ந்த மூன்று வெவ்வேறு அரசியல் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் மொத்தம் 13 பேர். மூன்று பேர் ஜே வி பி உறுப்பினர்கள். 

எஞ்சியுள்ள மூவரில் ஒருவர் முஸ்லிம் காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர்.  இன்னொருவர் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு ஒன்றின் சார்பில்  புத்தளம் மாவட்டத்திலிருந்து வெற்றியீட்டியவர்.மற்றவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ரிசாத் பதியுதீன்.

தேசியப் பட்டியல் மூலம் இன்னமும் நிரப்பப்படாமலிருக்கும் இரண்டு ஆசனங்களில் ஒன்று ஐக்கிய தேசிய கட்சிக்குரியது.மற்றது சிங்கள பௌத்த தீவிரவாதக் கட்சி ஒன்றுக்கு உரியது.

அரசாங்கத் தரப்பை பொறுத்தமட்டில் அதன் 150 உறுப்பினர்களில் சபாநாயகரைத் தவிர்த்து விட்டுப்பார்த்தால் 149எம் பி க்கள் இருக்கின்றார்கள். இவர்களில் ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியிலிருந்து இருவர் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தனையும் சேர்த்து மூவர்.  இவர்களைவிட மட்டக்களப்பிலிருந்து வெற்றியீட்டிய பொது ஜனப் பெரமுன உறுப்பினர் வியாழேந்திரனும் அவரைப்போலவே யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருக்கும் அங்கஜனும் உள்ளனர். 

 இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூவர் மலையகத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள்  இந்த மொத்தம் 8 தமிழ் எம் பிக் கள் அனைவரையும்  சேர்த்துத்தான் அரசாங்கக் கட்சியிடம் 149 எம் பிக் கள் உள்ளார்கள். 

இந்த நிலையில் புதிய அரசியல் சாசனத்தை நிறைவேற்றுவதற்கு தேவைப்படும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையான 150 எம் பி க்கள் என்ற எண்ணிக்கையைப் பொறுத்தமட்டில் அரசாங்கத்துக்கு ஆதரவான இந்த எட்டுத் தமிழ் எம் பி க்களின் எண்ணிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை எவரும் மறுக்கமுடியாது.
 
இதேவேளையில் எதிர்த்தரப்பான ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணியில் ஆறு தமிழ் எம் பிக் கள் உள்ளனர் என்பதும் அதேபோல முக்கியமானது.

ஒரு புதிய அரசியல் சாசனம் வரையப்படவுள்ள வரலாற்று முக்கியத்துவம் மிக்க காலகட்டத்தில் எமது நீண்ட கால அரசியல் நிலைப்பாடுகளை வலியுறுத்தும் அதே நேரத்தில் யதார்த்தங்களை மனதில் நிறுத்தி ஆக்க பூர்வமான ஓர்  அணுகுமுறையை வகுத்து அரசியல் மற்றும் இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்க இசாத்தியமான சகல நடவடிக்கைகளையும் நாம் எடுத்தாக வேண்டும்.

இதன் முதற்கட்டமாகவும் முதற் படியாகவும்இமூன்று அணிகளாகப் பிரிந்து நிற்கும் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளை ஒரு பொது நிலைப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு நாம் விரைவாகவும் வேகமாகவும் முயற்சிக்க வேண்டும். 

பொறுமையோடும் விவேகத்தோடும் முயன்றால் அது சாத்தியமாகும் என்றே நாம் நம்புகிறோம்.  அடுத்தாக இந்தப் பொது நிலைப்பாட்டுக்கு பாராளுமன்றத்தில் எதிர்த் தரப்பிலும் ஆளுங்கட்சி வரிசைகளிலும் அமர்ந்திருக்கும் தமிழ் உறுப்பினர்களின் ஆதரவை பெறுவதற்கு  நாம் முயற்சிக்க வேண்டும். 

இது ஒன்றும் சுலபமானது அல்ல. குறிப்பாகஇ ஆளுங்கட்சி வரிசைகளில் அமர்ந்திருக்கும் தமிழ் உறுப்பினர்களின் ஆதரவை பெறுவதில் யதார்த்த ரீதியாக பல்வேறு கஷ்டங்களும் நடைமுறைச் சிக்கல்களும் உள்ளன. அவர்களில் பலர் வெவ்வேறு பதவிப் பொறுப்புகளில் அமர்த்தப்பட்டுள்ளார்கள் என்பதை நாம் ஒரு போதும் மறந்து விட முடியாது. அதற்காக நாம் மனம் தளரவேண்டியதுமில்லை. 

எது எப்படி இருந்தாலும் புதிய அரசியல் சாசன விவகாரம் தொடர்பில் எம் இனத்தின் நீதியான கோரிக்கைகளை முன் வைத்து நாம் செயற்பட்டேயாக வேண்டும் இது கட்டாயமானது. தவிர்க்கப்படமுடியாதது.

புதிய அரசியல் சாசனத்தில் நீதி கிடைக்கவில்லையெனில் எமது பிரச்சனையை அடுத்த களத்திற்கு நகர்த்த வேண்டியிருக்கும். அது நிச்சயமாக சர்வதேச அரங்கமே! 

எமது பிரச்சனையில் சர்வதேச அரங்கில் பல நாடுகளின் ஆதரவு அல்லது அனுதாபம் எம் தரப்புக்கு தொடர்ந்து கிடைத்தவண்ணமே உள்ளது.
ஒரு கதவு அடைக்கப்படும் போது இன்னொரு கதவு திறந்து கொள்கிறது என்கிற பொன்மொழியினை நாம் நினைவில் கொள்வது நல்லது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post