முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்" - பாராளுமன்றில் ரிஷாட் பதியுதீன் - Yarl Voice முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்" - பாராளுமன்றில் ரிஷாட் பதியுதீன் - Yarl Voice

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்" - பாராளுமன்றில் ரிஷாட் பதியுதீன்




அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு அமைய, ஜனாதிபதிக்குக் கிடைத்துள்ள அதிகாரத்தின் துணிவிலாவது, கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இறந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்.

இன்று  பாராளுமன்றில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

எந்தவொரு குற்றமும் செய்யாமல் சிறையில் அடைக்கப்பட்டு, அங்கிருந்து வந்து பேசிக் கொண்டிருக்கின்றேன். வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு வாக்களிக்க வசதி செய்து கொடுத்த காரணத்தை வைத்தே, என்னை சிறையில் அடைத்துள்ளார்கள்.

1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட இந்த மக்கள், கடந்த 30 வருடங்களாக தமது சொந்த இடங்களுக்குச் சென்று வாக்களித்து வந்துள்ள நிலையில், இந்த முறை மாத்திரம் அவர்கள் அங்கு சென்று வாக்களித்த விடயத்தை பெரிதுபடுத்தி, அதற்குப் பொறுப்பான அமைச்சராக முன்னர் இருந்த காரணத்தினால், என்னை இன்று சிறையில் அடைத்துள்ளனர். நாட்டில் நீதி, நியாயம் இருந்தால் விடுதலை செய்யப்படுவேன் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளது.

அது மாத்திரமின்றி, எனக்கு இழைக்கப்பட்ட அநியாயத்தை படைத்த அல்லாஹ்விடம் ஒப்படைத்தவனாக, என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அப்பட்டமான பொய்யென இந்த உயர் சபையில் தெரிவிக்கின்றேன்.

வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, புத்தளத்தில் வாழ்ந்து வரும் மக்கள், தாம் சொந்த மண்ணில் வாக்களிக்க வேண்டுமென, அவர்களின் பிரதிநிதியான எனக்கு விடுத்த வேண்டுகோளை ஏற்று, அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எழுத்து மூலம், அவரது ஆலோசனையைக் கேட்டு கடிதம் ஒன்றை எழுதியிருந்தேன். இந்த விடயம் எனது அமைச்சின் கீழே வருவதனால், இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு, எனது அமைச்சின் கீழிருந்த விடயத்துக்குப் பொறுப்பான பணிப்பாளருக்கு, பிரதமர் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

 அதன் பின்னர், அப்போதைய நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு, இது சம்பந்தமான நிதியை பயன்படுத்த அதிகாரிகளுக்கு அனுமதி வழங்குமாறு நான் கோரியிருந்தேன். அதன் பிறகு நிதி அமைச்சர், அதனை முன்னெடுத்துச் செல்லுமாறு அனுமதியும் வழங்கியிருந்தார். அவை இரண்டும்தான் இந்த விடயம் தொடர்பில் நான் எழுதிய கடிதங்கள்.

இதைத் தவிர வேறு எதுவும் நான் செய்யவில்லை. ஆனால், பொய்யான குற்றச்சாட்டுகளை என்மீது சுமத்தி, அநியாயமாக சிறையில் அடைத்துள்ளனர். 15 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் நான், இன்னும் நீதி எனக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றேன். நான் எந்தவிதமான குற்றமும் இழைக்காததால் விடுதலை கிடைக்குமெனவும் நம்புகின்றேன்.

இன்றைய விவாதத்தில் நாட்டை தற்போது அச்சறுத்தி வரும் கொவிட் 19 தொடர்பில் பலர் உரையாற்றினர். இந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் அத்தியாயம் 3 இறைமையானது, மக்களிடத்தில் இருக்கின்றது எனக் கூறுகின்றது. அதேபோன்று, அத்தியாயம் 4 (d) யில் அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மக்களின் அடிப்படை உரிமைகள் மதிக்கப்பட வேண்டுமென சொல்லுகின்றது. ஒவ்வொரு பிரஜைக்கும் கருத்துச் சுதந்திரம், மதச் சுதந்திரம் அத்தியாயம் 10 இன் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மனிதனின் சாதி, சமயம், மொழி, இனம், பால், அரசியல் நிலைப்பாடு போன்ற காரணங்களினால் உரிமை பறிக்கப்படக் கூடாது என அத்தியாயம் 12 (2) கூறுகின்றது.

இந்த நிலையில், 2020 மார்ச் மாதம் வெளியிடப்பட்ட கொவிட் 19 தொடர்பான அறிக்கை ஒன்றில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 'இறந்த உடலின் மூலம் எந்தவொரு கொவிட் 19 தொற்றும் இந்த நாட்டில் ஏற்படவில்லை' என அந்த அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தொடர்ந்தும் எரிக்கப்படுவதை உடன் நிறுத்தி, அடக்கம் செய்வதற்கான அனுமதியை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு வழங்குமாறு வேண்டுகின்றேன். இது தொடர்பில் சுகாதாரத் துறையில் நிபுணத்துவ குழுவொன்றை நியமித்து, பரிசீலனை செய்யுமாறும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

நான் இக்கட்டான நிலையில் இருந்துகொண்டுதான் இந்தக் கோரிக்கையை உயர்சபையில் விடுக்கின்றேன். நான் மரணித்தாலும் எரிக்கப்படுவேன். முஸ்லிம் அமைச்சர்கள் மரணித்தாலும் இதே நிலைதான்.

எமது மக்கள் கொவிட் 19 க்கு பயப்படவில்லை. வைத்தியசாலைக்கு செல்லவே பயப்படுகின்றனர். ஏனெனில், அவர்கள் மரணித்தால், தங்களுடைய மையத்தையும் எரித்துவிடுவார்கள் என்ற காரணத்துக்காகவே அச்சப்படுகின்றனர்.

20 ஆவது திருத்தத்தின் பின்னர் கூடிய அதிகாரத்தை பெற்றுள்ள ஜனாதிபதி, இந்த விடயத்தில் தலையிட்டு நியாயமான நடவடிக்கை எடுப்பார் என எதிர்ப்பார்க்கின்றேன்" என்று கூறினார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post