யாழ். வலிகாமம் வடக்கு காங்கேசன்துறை நடேஸ்வரா கனிஷ்ட வித்தியாலத்தின் சார்பில் மீள்குடியேற்றத்தின் பின்னர் தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற முதலாவது மாணவன் என்ற சாதனையை மயிலிட்டியைச் சேர்ந்த சா.மதுஷாந்த் நிகழ்த்தியுள்ளார்.
வலிகாமம் வடக்கு பகுதி மீது மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக 1990/06/15 அன்று ஏற்பட்ட இடப்பெயர்வுடன் நடேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் நடேஸ்வரா கல்லூரியிலும் கற்றல் செயற்பாடுகள் முற்றிலுமாக தடைப்பட்டிருந்தது.
காங்கேசன்துறை பகுதி 2016 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டதன் பின்னர் நடேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் நடேஸ்வரா கல்லூரியிலும் கற்றல் செயற்பாடுகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சை-2020 இல் 18 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் திருப்பூர் ஒன்றியம், மயிலிட்டியை சேர்ந்த சாந்தகுமார் மதுஷாந்த் என்ற மாணவம் 170 மதிப்பெண்களை பெற்று சித்தியடைந்துள்ளார்.
அந்தவகையில் மீள்குடியேற்றத்தின் பின்னர் நடேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் முதலாவது சித்தியடைவாக இது அமைந்துள்ளதாக பாடசாலை சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.
சித்தியடைந்த மாணவன் மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தினால், மயிலிட்டியில் இலவசமாக முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வி நிலையத்தின் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.
மயிலிட்டி பகுதியும் 1990/06/15 அன்று இடப்பெயர்வை சந்தித்து 27 ஆண்டுகளின் பின்னர் 2017 முதல் மீள்குடியேறி வரும் பிரதேசம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment