தமிழ் மக்களை கொச்சைப் படுத்துவதை அரச தரப்புக்கள் நிறுத்த வேண்டும் - அரசின் செயல்பாட்டைக் கண்டித்து குகதாஸ் அறிக்கை - Yarl Voice தமிழ் மக்களை கொச்சைப் படுத்துவதை அரச தரப்புக்கள் நிறுத்த வேண்டும் - அரசின் செயல்பாட்டைக் கண்டித்து குகதாஸ் அறிக்கை - Yarl Voice

தமிழ் மக்களை கொச்சைப் படுத்துவதை அரச தரப்புக்கள் நிறுத்த வேண்டும் - அரசின் செயல்பாட்டைக் கண்டித்து குகதாஸ் அறிக்கை
சோறா! சுதந்திரமா! என்றபோது சுதந்திரத்திற்கு வாக்களித்தவர்கள் தமிழர்கள்!. அப்படியான தமிழ் மக்களை கொச்சைப் படுத்துகின்ற செயற்பாடுகளை அரச தரப்பினர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

 தமிழர்களுக்கு மூன்று வேளை உணவே அவசியம் என தமிழர்களின் வேணவாக்களை கொச்சைப்படுத்திய ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பிரசன்ன றணதுங்கவின் கருத்தானது கண்டனத்திற்குரியது .

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது

தமிழர்களுக்கு மூன்று வேளை உணவுவே அவசியம் என தமிழர்களின் வேணவாக்களை கொச்சைப்படுத்தி ஆளும் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர்  பிரசன்ன றணதுங்க கருத்தினை முன்வைத்துள்ளார்.

 உண்மையில் வடகிழக்கு தமிழ் மக்கள் இலங்கை சுதந்திரம் அடைந்த 1948 ஆண்டு பின்னரில் இருந்து தங்களது மறுக்கப்படும் இறைமையை வலியுறுத்தியே தொடர்ந்து போராடி வருகின்றனர்.

 ஆரம்பத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி தேர்தல் விஞ்ஞாபனங்களில் மக்களிடம் உங்களுக்கு சோறா? சுதந்திரமா? வேண்டும் சுதந்திரம் வேண்டும் என்றால் எங்களுக்கு வாக்களியுங்கள் என கேட்டபோது மக்கள் சுதந்திரம் வேண்டியே வாக்களித்தனர்.

1952 இல் இருந்து இன்று வரை வடகிழக்கில் 90% மக்கள் தங்களின் அரசியல் உரிமைக்காகவே தேர்தல்களில் வாக்களித்து வருகின்றனர். 

இவ்வாறு ஐனநாயக ரீதியாக மக்கள் வெளிப்படுத்தும் அபிலாசைகளை இழிவு படுத்துதல் அடிப்படை மனித உரிமை மீறலாகும்.

 இறுதியாக நடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலிலும் தமிழர்கள் பெரும்பான்மைப் பலத்தை தங்கள் உரிமைசார்ந்த கொள்கைகளை முன் வைத்த தமிழ்த் தேசிய கட்சிகளுக்கே வழங்கியுள்ளனர் அவ்வாறு பெரும்பாண்மை ஆதரவைப் பெற்ற தமிழ்த் தேசியக் கட்சிகள் யாரும் மக்களுக்கு உணவு தருவதாக கோரிக்கை முன்வைக்கவில்லை.

 தமிழ் மக்களை பொறுத்தவரை உரிமைப் போராட்டங்கள் ஆரம்பிக்கும் போதே பொருளாதார ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் இந்த நாட்டில் முன்மாதிரியாக வாழ்ந்தனர் என்பது வரலாறு இன்று கூட வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில் 50% மானோர் பெரும் முதலீட்டாளர்களாகத்தான் வாழ்கின்றனர். 

அன்றைய அரசாங்கமானது கொடிய யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் கோடிக்கணக்கான தமிழர்களின் சொத்துக்களை அழித்ததுடன் சூறையும் ஆடினார்கள். 

பின்னர் மக்கள் மீள் குடியேறிய பின்னர் அரசாங்க உதவிகள் இன்றி புலம்பெயர் மக்களின் உதவியுடன் தங்களின் வாழ்வை ஓரளவு மீளக் கட்டயெழுப்பி உள்ளனர் . 

இவ்வாறான வரலாற்றை கொண்ட இனத்தின் அபிலாசைகளை கொச்சைப்படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post