முல்லையில் அபிவிருத்மிக்காக 1,146 ஏக்கர் காடுகளை வழங்க இணக்கம் - Yarl Voice முல்லையில் அபிவிருத்மிக்காக 1,146 ஏக்கர் காடுகளை வழங்க இணக்கம் - Yarl Voice

முல்லையில் அபிவிருத்மிக்காக 1,146 ஏக்கர் காடுகளை வழங்க இணக்கம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச காடுகளை அபிவிருத்திக்காக பயன்படுத்தல் தொடர்பான கலந்தரையாடல்களில் இதுவரை ஆயிரத்து 146 ஏக்கர் காணி விடுவிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

வனவளஜீவராசிகள் , வனவள பரிபாலன அமைச்சின் சுற்று நிருபத்திற்கேற்ப ஒதுக்கப்பட்ட காடுகள் தவிர்ந்த ஏனைய அரச காடுகளை அபிவிருத்திக்காக பயன்படுத்தும் நோக்கில் பிரதேச செயலாளர்களிடம் கையளிப்பது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் தொடர்பான கலந்தரையாடலானது முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில்  நேற்று முன்தினம் (23) மு.ப 9.30மணிக்கு மாவட்ட செயலக  மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

சுற்றாடல், வன ஜீவராசிகள் வளங்கள் மற்றும் காடுகள் என்பவற்றிற்கு பங்கம் ஏற்படாத வகையில் பொருளாதார மற்றும் ஏனைய உற்பத்தி சாhந்த நடவடிக்கைகளுக்காக ஏனைய அரச காடுகளை பயன்படுத்துவதற்கு மாவட்ட செயலாளர்களுக்கும் பிரதேச செயலாளர்களுக்கும் முடியுமான வரை செயலாற்றுவதற்கு அனுமதியளிக்கும் குறித்த சுற்றறிக்கையின்படி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முகமாக கடந்த டிசம்பர் மாதம் 31ம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து அதன் முன்னேற்றங்கள் மற்றும் மேலும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் முகமாக குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

கடந்த கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்களுக்கு கையளிக்கப்படக் கூடிய காணிகள் தொடர்பில் பிரதேச செயலாளர்கள், வனஜீவராசிகள், வன வள, நில அளவை, நீர்ப்பாசன திணைக்கள மற்றும் காணிப் பயன்பாட்டு திட்டமிடல் பிரிவு சார்ந்த  அதிகாரிகள் இணைந்த குழுவின் கள விஜயம் ஊடாக விடுவிக்கப்படக் கூடிய காணிகளை ஆராய்ந்து பிரதேச காணிப்பயன்பாட்டுக் குழுவுக்கு அறிக்கை சமர்ப்பித்து பொருத்தமான தொடர் நடவடிக்கையினை முன்னெடுத்துச் செல்வதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அடையாளம் காணப்பட்ட இடங்கள்  மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

மேலும் காணி தொடர்பான சிறுபிரச்சினைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து உடனடியாக தீர்த்து வைக்கும்படி பிரதேச செயலாளர்களிடம் மாவட்ட அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மாகாண காணி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், வன ஜீவராசிகள் திணைக்கள உதவிப்பணிப்பாளர், மாவட்ட செயலக காணிப் பயன்பாட்டு திட்டமிடல் பிரிவின் உதவிப் பணிப்பாளர், மாவட்ட உதவி வன வள பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக காணிப்பிரிவு உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பட்டோர் கலந்து கொண்டனர்.

வனவளத் திணைக்களத்தினால் இதுவரை 1,146 ஏக்கர் நிலத்தை விடுவிக்க இணக்கம் காணப்பட்டுள்ளதோடு ஏனையவை தொடர்பில் ஆராயப்படுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post