ஈழத் தமிழர்களின் விடிவிற்காகக் குரல்கொடுத்த தா.பாவின் இழப்பு எமக்கு பேரிழப்பு - சுரேஷ் பிறேமச்சந்திரன் - Yarl Voice ஈழத் தமிழர்களின் விடிவிற்காகக் குரல்கொடுத்த தா.பாவின் இழப்பு எமக்கு பேரிழப்பு - சுரேஷ் பிறேமச்சந்திரன் - Yarl Voice

ஈழத் தமிழர்களின் விடிவிற்காகக் குரல்கொடுத்த தா.பாவின் இழப்பு எமக்கு பேரிழப்பு - சுரேஷ் பிறேமச்சந்திரன்




ஈழ மக்களின் விடிவிற்காகவும் உலகில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் பாட்டாளிவர்க்கத்தின் விடுதலைக்காகவும் உலகம் முழுவதும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நிலைநாட்டப்படவேண்டும் என்பதற்காகவும் இறுதிவரை போராடிய ஒரு உன்னத போராளியை உலகம் இழந்து தவிக்கிறது. அவரது இழப்பு சர்வதேச உழைக்கும் வர்க்கத்திற்கே பேரிழப்பு என்ற போதிலும் ஈழ மக்களாகிய எமக்கு ஈடு செய்ய முடியாதது என்று தெரிவித்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ். க.பிறேமச்சந்திரன் அவரது மறைவையொட்டி ஊடக அறிக்கை ஒன்றினையும் விடுத்துள்ளார்.

அவரது அறிக்கையின் முழுவடிவம் வருமாறு:

தோழர் தா.பா என்று எம் அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் கிளையில் நீண்டகாலம் செயலாளராகவும் கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த தோழர் தா.பாண்டியன் அவர்கள் காலமானார் என்ற செய்தி எம்மை அதிர்ச்சியிலும் மீளாத்துயரிலும் ஆழ்த்தியுள்ளது

ஈழத் தமிழர்களுக்காக தமிழகம் எங்கும் தனது கட்சிக்குள்ளும் டெல்லியிலும் நாடாளுமன்றத்திலும் சர்வதேச அரங்குகளிலும் குரல்கொடுத்த ஒரு தோழர். அடக்குமுறைகளுக்கு எதிராக அஞ்சாது தனது இறுதி மூச்சுவரை போராடிய ஒருவர். மானுடத்தைப் பற்றியும் இனங்களுக்கிடையில் சக வாழ்வைப் பற்றியும் சமத்துவத்தைப் பற்றியும் எங்களது கட்சிக்குள் எமது தோழர்களுக்கு பல கருத்துரைகளை வழங்கிய ஓர் அன்புத் தோழர்.

காலம்சென்ற தோழர் நாபாவுடனும் என்னுடனும் ஏனைய முன்னணித் தோழர்களுடனும் வாஞ்சையுடனும் நட்புடனும் வயதுவித்தியாசமின்றியும் பழகிவந்த ஓர் உன்னதத் தோழர். இந்திய தொழிலாள வர்க்கத்திற்கு மாத்திரமல்லாமல் ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதிலும் சிங்கள பெருந்தேசியவாதிகளின் அடக்குமுறைகளிலிருந்து அவர்கள் விடுதலை பெறவேண்டும் என்பதிலும் மிக ஆர்வத்துடன் தொழிற்பட்ட ஒரு தோழர். இரவோ பகலோ, வெயிலோ, மழையோ நாங்கள் அழைத்தபோதெல்லாம் எமக்கு ஆலோசனை கூறி எமக்குக் கைகொடுத்த ஒருவர்.

நெடுநாள் சுகவீனத்தில் அவர் இருந்தபொழுதிலும் தனது அரசியல் நடவடிக்கைகளை அவர் நிறுத்தியது கிடையாது. தனது பயணங்களை அவர் நிறுத்தியது கிடையாது. தோழர்களுடனான சந்திப்புகளை நிறுத்தியது கிடையாது. இலக்கிய சொற்பொழிவுகளை நிறுத்தியது கிடையாது. எழுத்தை நிறுத்தியது கிடையாது. இறுதித் தருணத்தில்கூட திருச்சியில் ஒரு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியவர்.
எண்பதுகளின் ஆரம்பத்தில் சென்னை கிறித்தவக் கல்லூரியில் நான் படித்துக்கொண்டிருந்த காலத்தில் நானும் எனது நண்பர்கள் சிலரும் கல்லூரியில் நடந்த பாரதியார் விழாவிற்கு அவரை அழைத்தபோது எவ்வித மறுப்புமின்றி அவர் கலந்துகொண்டு ஆற்றிய சொற்பொழிவை நன்றியுடனும் பெருமையுடனும் நினைவுகூர்கின்றேன். அன்றிலிருந்து அவரது இறுதி மூச்சு நிற்கும்வரை எமக்குள் இருந்த அன்னியோன்யம் வார்த்தைகளில் விவரிக்க முடியாதது. அதுமாத்திரமல்லாமல் எமது கட்சிக்கும் அவருக்கும் இருந்த நட்பும் எமது கட்சிக்கும் கம்யூன்ஸ்ட் கட்சிக்கும் இருந்த நெருக்கத்திற்கும் அடிநாதமாகத் திகழ்ந்தவர் தோழர் தா.பா.வே.

சென்னையில் எமது கட்சியின் செயலாளர் நாயகத்துடன் பன்னிருவர் கொல்லப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்துவதே ஒரு போராட்டமாக இருந்த நேரத்தில் எமக்காகக் குரல் கொடுத்து எம்முடன் ஒத்துழைத்து இறுதி நிகழ்வுகளை முன்னின்று நடத்திய எம்மால் மறக்க முடியாத ஒரு இனிய தோழர். ஈழத் தமிழர்களுக்காக அவர் நடத்திய போராட்டங்கள், அவரது கருத்துகள், அவரது செயற்பாடுகள் அவரது சொற்பொழிவுகள், அவரது நகைச்சுவை உணர்வு, இலக்கிய ஆளுமை ஆகியவை என்றும் எம் நெஞ்சைவிட்டு அகலாது. அவரது பேச்சாற்றலால் தமிழகத் தமிழர்களை மட்டுமன்றி ஈழத்தமிழர்களையும் கட்டிப்போட்டார்.

தோழருக்கு எமது செவ்வணக்கங்கள்.

தோழரின் பிரிவால் கவலையுற்றிருக்கும் கட்சித் தோழர்களுக்கும், குடும்ப அங்கத்தவர்களுக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் ஈழத் தமிழர்களின் சார்பாகவும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சார்பாகவும் எனது ஆழ்ந்த அஞ்சலிகள்.

சுரேஷ். க. பிறேமச்சந்திரன்
தலைவர்
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

0/Post a Comment/Comments

Previous Post Next Post