நாட்டின் 73வது சுதந்திர தினமான இன்று வடக்கு - கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகேட்டும், தமிழ் மக்களின் ஏனைய பிரச்சினைகளை வலியுறுத்தியும் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
அந்தவகையில், யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கறுப்புப்பட்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடன் தமிழ் அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்பினர் மற்றும் பொதுமக்களும் கலந்துகொடிருந்தனர்.
இன்று முற்பகல் 10 மணிக்கு போராட்டம் திட்டமிடப்பட்ட நிலையில் போராட்ட இடத்துக்கு வருகை தந்த யாழ்ப்பாணம் பொலிஸார் நீதிமன்றத் தடை உத்தரவை வாசித்துக் காண்பித்தனர்.
எனினும் நீதிமன்றக் கட்டளையில் பெயர் குறிப்பிடப்பட்ட எவரும் ஆர்ப்பாட்டத்தில் இல்லாமையால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரின் அறிவுறுத்தலை ஏற்க மறுத்தனர்.
அதனால் போராட்டத்தைத் தடுக்க பொலிஸார் கடும் முயற்சிகளை மேற்கொண்டபோதும்,போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்திருந்தனர்.
போரூந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பித்த குறித்த போராட்டம் முனீஸ்வரர் வீதி ஊடாக பேரணியாக சென்று முனீஸ்வரர் ஆலயம் முன்பாக நிறைவு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment