பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தில் கட்சி பேதமின்றி அணிதிரள்வோம் சிவசக்தி ஆனந்தன் அழைப்பு - Yarl Voice பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தில் கட்சி பேதமின்றி அணிதிரள்வோம் சிவசக்தி ஆனந்தன் அழைப்பு - Yarl Voice

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தில் கட்சி பேதமின்றி அணிதிரள்வோம் சிவசக்தி ஆனந்தன் அழைப்புபொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தின் இரண்டாவது நாளில் பேரணியானது 05.02.2021 முல்லைத்தீவு,வவுனியா,மன்னாரை வந்தடையவுள்ள நிலையில் கட்சி பேதங்களை மறந்து அனைவரும் அணிதிரண்டு வந்து ஆதரவு நல்குமாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளர் சிவசக்தி ஆனந்தன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை மீது கொண்டுவரப்படவுள்ள புதிய பிரேரணை வலுவானதாக இருக்கும் அதேநேரம், பொறுப்புக்கூறல் விடயத்தினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பதற்கான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள், அரசியல் கைதிகளின் உறவுகள் தமது அன்புக்குரியவர்களுக்காக போராட முடியாதவொரு சூழல் தற்போது எழுந்திருக்கின்றது. ஜனநாயக மறுதலிப்புக்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
படைத்தரப்பு இரும்புக்கரம் கொண்டு தமிழ் மக்களின் செயற்பாடுகளை ஒட்டுமொத்தமாக அடக்குவதற்கே முனைப்புக் காட்டுக்கின்றன.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டம் நேற்று ஆரம்பமானபோது இந்த செயற்பாடுகள் அப்பட்டமாக முழு உலகிற்குமே வெளிப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி போராட்டங்களில் பொதுமக்கள் இணைந்து கொள்வதற்கு கொரோனா சட்டங்களை வைத்து பொலிஸார் தடைகளை விதிக்கின்றனர்.

அரசியல், சிவில் பிரதிநிதிகளுக்கு நீதிமன்றங்கள் ஊடாக தடைகளை ஏற்படுத்தி முடக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். ஊடகவியலாளர்களை கண்காணிக்கும் செயற்பாடுகளும் வெகுவாக முன்னெடுக்கப்படுகின்றது.

ஒட்டுமொத்தமாக இரண்டாந்தரப் பிரஜைகளாக இருக்கும் தமிழ் சமூகத்தினை முழுமையாக இந்த நாட்டிலிருந்து துடைத்தெறிந்து விட வேண்டும் என்று கங்கணங்கட்டி அரசாங்கம் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

பொறுப்புக்கூறலை, ஜனநாயக விழுமியங்களை, தனிமனித உரிமைகளை மறுதலிக்கும் கடும்போக்கு சிங்கள, பௌத்த தேசியவாத அரசாங்கத்தின் செயற்பாடுகளை அம்பலப்படுத்துவதற்காக அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்.

அடக்குமுறைகளையும், திட்டமிட்ட தடைகளையும் உடைத்தெறிந்து அனைவரும் போராட்டப் பேரணியில் கலந்துகொண்டு சர்வதேசத்திற்கு தமிழினத்தின் நியாயத்தினை மீண்டும் ஒருதடவை பலமாகச் சொல்ல வேண்டும். அதற்காக இந்த சந்தர்ப்பத்தில் பொதுமக்கள் சிவில்அமைப்புக்கள் மதத்தலைவர்கள் தமிழ் தேசியப்பரப்பில் உள்ள அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைவரும் பேதங்களை மறந்து கலந்துகொள்ள வேண்டும் என்று பகிரங்க அழைப்பு விடுகின்றேன் என்றுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post