காரைநகரில் இரண்டாம் மொழிக்கற்கை நிறைவுவிழா - Yarl Voice காரைநகரில் இரண்டாம் மொழிக்கற்கை நிறைவுவிழா - Yarl Voice

காரைநகரில் இரண்டாம் மொழிக்கற்கை நிறைவுவிழா




அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி பயிற்சி செயற்றிட்டத்தின் கீழ் காரைநகர் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை ஆகியவற்றில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கான சிங்கள பயிற்சி வகுப்பின் நிறைவுநாள் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்றது. 

மும்மொழிக் கற்கைகள் நிறுவகத்தின் ஏற்பாட்டில் காரைநகர் கலாசார மத்திய நிலையத்தில் ஒரு மாதமாக இப்பயிற்சி இடம்பெற்றுவந்தது. முதலாவது அணியில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 28 பேர், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் 6 பேர் அடங்கலாக 34 பேர் பயிற்சி பெற்றனர். 

இப்பயிற்சியின் நிறைவு நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு குறித்த மத்திய நிலையத்தில் எளிமையாக நடைபெற்றது. நிகழ்விற்கு வருகைதந்த விருந்தினர்களை பயிற்சி நெறியில் பங்குபற்றிய உத்தியோகத்தர்கள் மங்கல இசையுடன் வரவேற்றனர். 

இந்நிகழ்வில் கலந்துகொண்ட யாழ். அரசாங்க அதிபர் கே.மகேசன் சிங்கள பாட வளவாளர்களான சச்சிதானந்தன் நந்தன் மற்றும் திருமதி துஷ்யந்தினி அருள்பரன் ஆகியோரை கௌரவித்தார். 

இந்த நிகழ்வில் யாழ். மேலதிக அரச அதிபர் ம.பிரதீபன், காரைநகர் பிரதேச செயலாளர் ம.ஜெகூ, மும்மொழிக் கற்கைகள் நிறுவக இணைப்பாளர் ந.உமாநாத், உதவிப் பிரதேச செயலாளர் செல்வி கு.கஜனி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் செல்வி பா.றேவதி, கணக்காளர் கணக்காளர் ஆர்.றமணன், நிர்வாக உத்தியோகத்தர் அன்ரன் யேசுதாசன், காரைநகர் பிரதேச சபை பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் மா.ஜெகராசா, காரைநகர் கடற்படை அதிகாரி  மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

இதேவேளை, இரண்டாவது அணி உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிகள் விரைவில் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post