காணிச் சீர் திருத்த ஆணைக்குழுவின் ஆவணங்கள் அ,புரத்திற்கு எடுத்துச் சென்றமைக்கு கூட்டமைப்பு கண்டனம். - Yarl Voice காணிச் சீர் திருத்த ஆணைக்குழுவின் ஆவணங்கள் அ,புரத்திற்கு எடுத்துச் சென்றமைக்கு கூட்டமைப்பு கண்டனம். - Yarl Voice

காணிச் சீர் திருத்த ஆணைக்குழுவின் ஆவணங்கள் அ,புரத்திற்கு எடுத்துச் சென்றமைக்கு கூட்டமைப்பு கண்டனம்.
வடக்கு மாகாண காணிச் சீர் திருத்த ஆணைக் குழுவின் யாழ்ப்பாண அலுவல ஆவணங்கள்  அனைத்தும் இரகசியமான முறையில்  அநுராதபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டமை அந்த மக்களின் கருத்திற்கு மதிப்பளிக்காத செயல்மட்டுமன்றி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களையும் புறம் ஒதுக்கும் செயலாகவே பார்ப்பதோடு எமது கடுமையான கண்டனத்தையும் பதிவு செய்கின்றோம்  என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண காணிச் சீர் திருத்த ஆணைக் குழுவின் அலுவலகம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக வளாகத்தில் இயங்கிய நிலையில் இதன் ஆவணங்களை அநுராதபுரம் அனுப்புமாறு அறிவிக்கப்பட்ட நிலையில் பெரும் எதிர்ப்புக்களை தெரிவித்தோம்.  அதாவது  யாழ்ப்பாணம் மாவட்டம் மற்றும் கிளிநொச்சியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் இந்த அலுவலக ஆவணங்களை எடுத்துச் செல்லக்கூடாது எனவும் தீர்மானமாக கோரப்பட்டது. 

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றிய பின்பும் கடந்த 4ம் திகதி இந்த ஆவணங்களை யாழில் இருந்து எடுத்துச்  செல்லப்படவிருந்த சமயம்  யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தை மறித்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதன் பின்பும் இரகசியமான முறையில் 
 நேற்று முன்தினம் மாலை  ஆவணங்கள் அனைத்தும் ஆணைக்குழுவின் வாகனத்தில் அநுராதபுரம் எடுத்துச் செல்லப்பட்டது பெரும் சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றது. அவ்வாறு அவசரமாகவும் இரகசியமாகவும் எடுத்துச் செல்லப்பட்டதன் பின்னணியில் உள்ள விடயங்கள் தொடர்பிலும் பெரும் சந்தேகம் உள்ளது.

மாவட்டச் செயலகத்தில் எப்போது அல்லது எந்த நேரம் இவை ஏற்றப்பட்டன என்பது மாவட்டச் செயலக அதிகாரிகளிற்கும் தெரியாது எனில் என்னதான் நடக்கின்றது. இதனால் மக்களின் விருப்பத்திற்கு மாறாக இடம்பெற்ற இச் செயல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடுமையான கண்டனத்தை பதிவு செய்வதோடு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் நோக்கம் தொடர்பிலும் கேள்வி எழுகின்றது . என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post