ஜ.நா தீர்மானமானது பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றும் தீர்மானம் என கஜேந்திரகுமார் சாடல் - Yarl Voice ஜ.நா தீர்மானமானது பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றும் தீர்மானம் என கஜேந்திரகுமார் சாடல் - Yarl Voice

ஜ.நா தீர்மானமானது பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றும் தீர்மானம் என கஜேந்திரகுமார் சாடல்


24-03-2021 பாராளுமன்றில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை....
இனப்படுகொலை புரிந்த சிறிலங்கா அரசாங்கம் தான் செய்த குற்றங்களுக்காக, தன்னைத்தானே விசாரிக்க கோரும் ஐநா மனிதவுரிமை பேரவையின் 46/1 தீர்மானம் இயற்கை நீதிக்கு முரணானது. பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றும் தீர்மானமாகும்.
பாராளுமன்றில் தமிழர் தரப்பு குரலாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி சீற்றம்.
இந்த அரசினால் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட இனப்படுகொலை உட்பட அனைத்து குற்றங்களையும் முழுமையாக பக்கச்சார்பற்ற முறையில் விசாரிக்கக்கூடிய ஒரு சர்வதேச பொறிமுறையையே பாதிக்கப்பட்ட மக்களாகிய தமிழர்கள் கேட்டுநின்றார்கள்.
தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியான தமிழ் தேசிய மக்கள் முன்னணியை பொறுத்தவரையில்,
இனப்படுகொலை உட்பட பல்வேறு குற்றங்களை இழைத்த, குற்றங்களின் பங்காளியாக உள்ள இந்த அரசையே, தனது குற்றங்களை விசாரிக்க கோரும் ஐநா மனிதவுரிமை பேரவையின் 46/1 தீர்மானம் மிகவும் ஏமாற்றகரமானது. இயற்கை நீதிக்கு முரணானது. உண்மையில் இது சிறிலங்கா அரசை(state) காப்பாற்றி இருக்கிறது.
2015 இல் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில் ' சர்வதேச வழக்குதொடுநர்கள், சர்வதேச நீதிபதிகளை' விசாரணையில் இணைத்துக் கொள்வது பற்றி பெயரளவிலேனும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் இந்த 2021 இன் 46/1 தீர்மானத்தின் செய்ற்பாட்டுப் பந்தி (Operative paragraph) 9 இன் பிரகாரம், குற்றத்தின் பங்காளிகளான இந்த அரசையே, தான் இழைத்த குற்றங்களை விசாரிக்க கோரும் இயற்கை நீதிக்கு முரணான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
(Operative paragraph_9 - Calls upon the Government of Sri Lanka to ensure the prompt, thorough and impartial investigation and, if warranted, prosecution of all alleged crimes relating to human rights violations and serious violations of international humanitarian law, including for long- standing emblematic cases.)
இதனால் பாதிக்கப்பட்ட மக்களாகிய தமிழர்களை பொறுத்தவரையில், நீதிக்கான பொறுப்புக்கூறலை பொறுத்தவரையில் இந்த தீர்மானம் மிகவும் பலவீனமானது, வலுவற்றதாகும். குற்றவாளியான சிறிலங்கா அரசை மீண்டும் பாதுகாக்கும் நடவடிக்கையாகவே இது அமைந்துள்ளது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, குற்றங்களை இழைத்த சிறிலங்காவே, சிறிலங்காவின் குற்றங்களை விசாரிக்க வேண்டுமெனக் கோருகின்ற இந்த தீர்மானத்தை வரவேற்றமைக்காக திரு சுமந்திரன் ' நாட்டுக்கு துரோகம் இழைத்துவிட்டார் 'என அரச தரப்பு பராளுமன்ற உறுப்பினர்கள் கூச்சலிடுகின்றார்கள். நான் சுமந்திரனின் ஒரு ஆதரவாளன் அல்லன்.
ஆனால் சுமந்திரன் உண்மையில் சிறிலங்காவை காப்பாற்றியுள்ளார் என்பதே உண்மையாகும்.
அந்தவகையில் அவர், சிறிலங்கா அரசுக்கு அல்ல, மாறாக தன்னை வாக்களித்துத் தெரிவு செய்த, தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கே துரோகம் இழைத்துள்ளார்.
உண்மையில் இந்த ஐநா தீர்மானங்கள் தமிழ் மக்களுக்கு நீதி கோரும் நோக்கில் நிறைவேற்றப்படவில்லை. முற்றிலும் சீனாவை நோக்கி சாய்ந்திருக்கும் இந்த அரசாங்கத்திற்கு (government), தத்தமது புவிசார் அரசியல் நலன்களை காப்பாற்றிக்கொள்ள இந்திய மற்றும் மேற்குலக நாடுகள் கொடுக்கின்ற ஒரு அழுத்தமாகவே இதை நாம் பார்க்கின்றோம்.
அந்த நோக்கத்திற்காக அந்த வல்லரசுகள் தமிழர்களை ஒரு கருவியாக மட்டுமே பாவித்துள்ளார்கள்.
இந்திய மற்றும் மேற்குலக நாடுகளுக்கும் சீனாவுக்குமான இடையிலான இந்த புவிசார் அரசியல் போட்டியில் சீனாவின் பக்கம் சார்ந்துள்ள இந்த அரசாங்கத்தை தமது வழிக்குக் கொண்டுவருவதற்காக தமிழர்கள் வெறுமனே பகடைகளாக மட்டுமே பாவிக்கப்ப்டுகிறார்கள் என்பதே கவலைக்குரிய விடயமாகும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post