வெளி இடத்து கடலுணவுகள் விற்பனைக்கு பொன்னாலை கடற்றொழிலாளர்கள் எதிர்ப்பு! -தமது அன்றாட வருமானம் பாதிப்பு என கவலை- - Yarl Voice வெளி இடத்து கடலுணவுகள் விற்பனைக்கு பொன்னாலை கடற்றொழிலாளர்கள் எதிர்ப்பு! -தமது அன்றாட வருமானம் பாதிப்பு என கவலை- - Yarl Voice

வெளி இடத்து கடலுணவுகள் விற்பனைக்கு பொன்னாலை கடற்றொழிலாளர்கள் எதிர்ப்பு! -தமது அன்றாட வருமானம் பாதிப்பு என கவலை-



பொன்னாலை சந்தியில், கடற்றொழிலாளர்களின் இறங்குதுறையில் வெளி இடங்களில் இருந்து கொண்டுவரப்படும் கடல் உணவுகளை விற்பதற்கு கடற்றொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

பொன்னாலை ஸ்ரீகண்ணன் மற்றும் மூளாய் நாராயணன் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் அங்கத்தவர்களான கடற்றொழிலாளர்கள் இன்று (27) காலை குறித்த இடத்தில் ஒன்றுகூடி, இனிமேல் வெளி இடங்களில் இருந்து கொண்டுவரப்படும் கடலுணவுகளை இந்த இடத்தில்வைத்து விற்கவேண்டாம் என வியாபாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.

வேறு இடங்களில் இருந்து கொண்டுவரப்படும் கடல் உணவுகள் தமது இறங்குதுறையில் வைத்து விற்கப்படுவதால், பொன்னாலைக் கடலில் தாங்கள் பிடித்துவரும் கடலுணவுகளை விற்பனை செய்வதில் பெரும் இடர்பாடுகள் எதிர்நோக்கப்படுகின்றது எனவும், இதனால் தமது குடும்பங்கள் பட்டினியில் வாடவேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளது எனவும் கடற்றொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.  

பொன்னாலைச் சந்திக்கு அருகில் உள்ள மேற்படி இறங்குதுறையில் வடக்கு மாகாண சபை நிதி ஒதுக்கீட்டில், வலி.மேற்கு பிரதேச சபையினால் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மீன் சந்தைக்கான கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. எனினும், குறித்த சந்தை அமைப்பது தொடர்பாக தமக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும் அது பொதுவான கட்டிடம் என்றே தாம் கருதினர் எனவும் கடற்றொழிலாளர்கள் கூறுகின்றனர்.

தற்போது குறித்த சந்தை பிரதேச சபையால் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது. சந்தையை சூழ பற்றைகள் வளர்ந்துள்ளமையால் அதை பயன்படுத்த முடியாத நிலையில் வியாபாரிகள் வெளியே வைத்து விற்பனையை மேற்கொள்கின்றனர்.

மன்னார் மாவட்டம் மற்றும் யாழ். மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களில் கொள்வனவு செய்யப்படும் கடலுணவுகள் குறித்த பொன்னாலை இறங்குதுறைக்கு கொண்டுவரப்பட்டு  விற்பனை செய்யப்படுகின்றது.

மேற்படி விற்பனையானது தமது அன்றாட வருமானத்தை பாதிக்கும் என கடற்றொழிலாளர்கள் கூறுகின்றனர். எந்தவொரு இடத்திலும் வெளி இடங்களில் இருந்து கொண்டுவரப்படும் கடலுணவுகள் இறங்குதுறையில் வைத்து விற்பனை செய்யப்படுவதில்லை என்பதையும் கடற்றொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால் இங்குவைத்து விற்பனையை  மேற்கொள்ள வேண்டாம் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் இன்று (27) காலை அங்கு இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக பொன்னாலை வட்டார உறுப்பினர் ந.பொன்ராசாவுக்கு தொழிலாளர்களால் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற அவர் நிலமைகளை கேட்டறிந்தார். பின்னர் இவ்விடயத்தை  தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையையும் அவர் தவிசாளருக்கு சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். 

0/Post a Comment/Comments

Previous Post Next Post