குருந்தூர் மலையில் இந்துமக்கள் வழிபடுவதற்கான முழு உரித்தையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம் - சுமந்திரன் எம்.பி தெரிவிப்பு - Yarl Voice குருந்தூர் மலையில் இந்துமக்கள் வழிபடுவதற்கான முழு உரித்தையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம் - சுமந்திரன் எம்.பி தெரிவிப்பு - Yarl Voice

குருந்தூர் மலையில் இந்துமக்கள் வழிபடுவதற்கான முழு உரித்தையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம் - சுமந்திரன் எம்.பி தெரிவிப்பு




முல்லைத்தீவு - தண்ணிமுறிப்புப் பகுதியில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீக வழிபாட்டுத்தலமான குருந்தூர்மலையில், இந்து மக்கள் வழிபடுவதற்கான முழு உரித்தையும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான மதிப்புறு எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார். 

குருந்தூர் மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் வழக்கொன்றினைத் தொடர்வது தொடர்பில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள், மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் கடந்த 30.01.2021 அன்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்களைச் சந்தித்து கலந்துரையாடியதுடன் அன்று வழக்குத் தொடர்வதற்கான ஆவணங்கள் சிலவற்றினைக் கையளித்திருந்தனர். 

இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக 16.04.2021 இன்று முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்களைச் சந்தித்து வழக்குத் தொடர்வது தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிலவற்றினை கையளித்திருந்தனர். 

இச் சந்திப்பினையடுத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

குருந்தூர்மலை சம்மந்தமாக சில வருடங்களுக்கு முன்பிருந்தே ஒரு பிணக்கு ஏற்பட்டது. அது தொடர்பாக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றிலே வழக்கொன்று தாக்கல்செய்யப்பட்டு அதிலே ஒரு இணக்கப்பாடு எய்தப்பட்டிருக்கின்றது. 

இதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொல்லியல் திணைக்களத்தினர், அமைச்சரோடு வந்து அங்கே இருந்த வழிபாட்டுச்சின்னத்தை அகற்றி ஒரு புத்தர் சிலையை வைத்து புதியதாக தொல்பொருள் ஆராட்சி என்று ஆரம்பித்துள்ளார்கள். 

ஆகையினாலே இது தொடர்பாக வழக்கு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதற்காக, கடந்த 2018ஆம் அண்டு தாக்கல்செய்யப்பட்ட AR/673/18 என்ற வழக்கின் ஆவணப் பிரதியை முழுமையாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் என்னிடம் கையளித்திருக்கின்றார். 

அந்தவகையில் இது தொடர்பான அடுத்தடுத்த நடவடிக்கைகள், அதாவது அந்த இடத்திலே இந்து மக்கள் சென்று வழிபடுவதற்கான முழு உரித்தையும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையினை நாங்கள் மேற்கொள்வோம் - என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post