தமிழர்கள் என்பதற்காகவா கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமிறக்கும் நடவடிக்கை? அரசு நிறுத்த வேண்டும் என கஜேந்திரகுமார் வலியுறுத்து - Yarl Voice தமிழர்கள் என்பதற்காகவா கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமிறக்கும் நடவடிக்கை? அரசு நிறுத்த வேண்டும் என கஜேந்திரகுமார் வலியுறுத்து - Yarl Voice

தமிழர்கள் என்பதற்காகவா கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமிறக்கும் நடவடிக்கை? அரசு நிறுத்த வேண்டும் என கஜேந்திரகுமார் வலியுறுத்து
கடந்த 28 ஆண்டுகளாக பிரதேச செயலகமாக இயங்கிவந்த கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் குறைத்து உப பிரதேச செயலகமாக செயற்படுமாறு பணிப்புரை விடுக்கும் 2021-04-08 ஆம் திகதிய அமைச்சின் அறிவுறுத்தலை மீளப்பெறுமாறு கஜேந்திரகுமார் எம்பி பாராளுமன்றில் வலியுறுத்தினார். 

தமிழர்கள் என்பதற்காகவா கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமிறக்கும் நடவடிக்கை?  அரசு நிறுத்த வேண்டும் என கஜேந்திரகுமார் வலியுறுத்து

உள்நாட்டு விவகார அமைச்சு  இம்மாதம் 8ம்திகதி அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதமூலம் ஒரு அறிவிப்பினைச் செய்துள்ளது. அதாவது கல்முனைவடக்கு பிரதேச செயலாளர் பணியகமத்தினை கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் பணியகத்தின் உப பணியகமாக கருதுமாறு அக்கடித்தில் கேட்கப்பட்டுள்ளது. இன்னொரு வகையில் கூறுவதானால் இது கல்முனைவடக்கு பிரதேச செயலாளர் பணியகத்தை தரமிறக்கும் நடவடிக்கையாக அமைந்துள்ளது.

1993ம் ஆண்டு தனியான பிரதேச செயலாளர் பணியகமாக உருவாக்கப்பட்டிருந்த இப்பணியகம் தற்போது கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் பணியகத்தின் உப பணியகமாக தரமிறக்கப்பட்டுள்ளது.

அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு 9 ஜுலை 1993 வெளியிட்ட ஆவணத்தின்படி, அமைச்சரவை பத்திரம்  93/600/034(1)   சமர்ப்பிக்கப்பட்டு  அமைச்சரவையின் உடன்பாடு பெறப்பட்டதன் அடிப்படையில் 28 ஜுலை 1993 இல் கல்முனை வடக்கு உதவி அரசாங்க அதிபர் செயலகம்  என அதுவரை அழைக்கப்பட்டுவந்த பணியகம் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பணியகம் என மாற்றப்பட்டது.

கடந்த 28 வருடங்களாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பணியகம் இயங்கிவருகிறது.  அன்றிலிருந்து  எட்டு பிரதேச செயலாளர்கள் நியமிக்கப்பட்டார்கள. பின்னர் கெடுவாய்ப்பாக அரசியல் தலையீடுகள் காரணமாக இப்பணியகத்திற்கு பிரதேச செயலாளர்களுக்குப் பதிலாக உதவி பிரதேச செயலாளர்களே நியமிக்கப்பட்டார்கள. 

இருந்த போதிலும் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பணியகம் அம்பாறை மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலாளர் பணியகங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது. உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு நாட்டிலுள்ள இதர பிரதேச செயலங்கங்கள்போன்று  அதனை முறைப்படி தனியான பிரதேச செயலாளர் பணியகமாக அங்கீகரித்திருந்தது.

கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பணியகத்தின்கீழ் 29 கிராமசேவையாளர் பிரிவுகள் உள்ளன. அப்பிரதேச பணியகத்தின் ஆட்புல எல்லைக்குள் ஏறத்தாள முப்பத்தொன்பதாயிரம் மக்கள் வாழ்கின்றனர்.  22, 605 மக்கள் வாக்களாராகப் பதிவு செய்துள்ளனர்.  இங்கு 39,300 தமிழர்கள், 3,000 முஸ்லீம்கள், 125 சிங்களவர்கள் வாழ்கின்றனர்.

வாக்காளர் பதிவேடுகளிலும்  கல்முனை வடக்கு தனியான பிரதேச சபை பணியாகமாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிறப்பு இறப்பு பதிவு திணைக்களமும் இப்பிரதேச செயலாளர் பணியகத்தை தனியான பணியகமாக ஏற்றுக்கொண்டுள்ளது. காணிகளைப் பதிவு செய்யும் பணியகமும் அவ்வாறே அடையாளப்படுத்துகிறது.

அச்செயலகத்தின் கீழ் 235 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள. எல்லா அமைச்சகங்களும் இதனை தனியான பிரதேச செயலாளர் பணியமாகவே கணிக்கின்றன. அபிவிருத்தி நிதி ஒதுக்கீடுகள் செய்யும்போதும் இது தனியான பிரிவாகவே கணிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மாவட்ட அபிவிருத்தி குழு (DDC) கூட்டங்களும் இதனை தனியான பிரிவாகக் கணித்து வேறாகவே கூட்டங்களை நடத்திவருகின்றன
நடைமுறையில் இவ்வாறிருந்தாலும் அரசியற் காரணங்களினால் கடந்த 28 வருடங்களாக இப்பணியகத்தின உருவாக்கம் பற்றிய வர்த்தமானி அறிவித்தல் மேற்கொள்ளப்படவில்லை. இ்ன்று அதனை காரணங்காட்டி இத்தரமிறக்கும் நடவடிக்கையை  நியாயப்படுத்த முனைகிறார்கள்.

இது முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட முடியாத நடவடிக்கை. இன்று இயங்கிவரும் பல பிரதேச செயலாளர் பணியகங்களின் உருவாக்கம் பற்றி வர்த்தமானி அறிவுறுத்தல்கள் மேற்கொள்ளப்படவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கோரளைப் பற்று மத்தி பிரதேச செயலாளர் பணியகம் 2002ம் ஆண்டிலிருந்து இயங்கி வந்தாலும் அதுதொடர்பான வர்த்தமானி அறிவிப்பு மேற்கொள்ளப்படவில்லை. வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் பணியகம் பற்றிய வர்த்தமானி அறிவித்தல் மேற்கொள்ளப்படவில்லை. அப்படியிருக்கு கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பணியகம் விடயத்தில் இப்பாகுபாடு காட்டப்படுவது ஏன்? இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த பிரதேச செயலாளர் பணியகத்தின் ஆட்புல எல்லைக்குள் வாழ்பவர்கள் பெரும்பாலும் முழுமையாகவே தமிழர்கள் என்பதனால் இப்பாகுபாடு காட்டப்படுகிறதா? இதுதான் காரணமா?

இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.  இவ் அவசரத்தை உணர்ந்து  உள்துறை செயலகத்தின இராஜங்க அமைச்சர் சாமல் இராஜபக்சவின் கவனத்திற்கு கொண்டுவந்து  ஏப்பிரல் 8 திகதி அனுப்பிய கடிதத்தை மீளப்பெற்று கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பணியத்தை முறைப்படி  வர்த்தமானி அறிவுறுத்தலைச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். அப்பிரதேச செயலாளர் பணியகத்திற்கு அதற்குரிய அங்கீகாரத்தை வழங்கி பிரதேச செயலாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இல்லாவிடில் அப்பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே கருதவேண்டியுள்ளது. ஆகவே இவ்விடயத்தில் அமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post