ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது - Yarl Voice ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது - Yarl Voice

ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருதுஇந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனை செய்தவர்களுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசால் 'தாதா சாகேப் பால்கே' விருது வழங்கப்படுகிறது.

இந்த விருது இந்திய திரைப்படத்துறையின் தந்தை என்று கருதப்படும் தாதா சாகேப் பால்கே பெயரால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1969ஆம் ஆண்டு அவரது பிறந்த நாள் நூற்றாண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்திய திரைத்துறையில் சாதனை செய்தவர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் மிக உயரிய விருதாக இந்த விருது கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டு இறுதியில் தேசிய விருதுகள் வழங்கப்படும் போது இந்த விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருது தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்த பல்வேறு திரைப் பிரபலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குனர் சிகரம் என்று அழைக்கப்பட்ட இயக்குனர் பாலச்சந்தர் ஆகிய 2 பேர் மட்டுமே இந்த விருதைப் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் 2020ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதை நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்குவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
ரஜினிகாந்துக்கு 2020ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய சினிமாவில் மிகச்சிறந்த நடிகர்களில் ரஜினியும் ஒருவர். நடிகராகவும், தயாரிப்பாளராகவும், திரை எழுத்தாளராகவும் அவரது பங்களிப்பை பாராட்டி இந்த விருது வழங்கப்படுகிறது.

இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தமிழகத்தில் இருந்து இந்த உயரிய விருதைப் பெறும் 2ஆவது நடிகர் என்ற பெருமையை ரஜினிகாந்த் பெற்றுள்ளார்.

திரைத்துறையில் இந்திய அளவில் சாதனை புரிந்த நபர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் ஆங்கில மொழி படங்களில் நடித்துள்ளார். வங்க மொழி படத்திலும் ரஜினிகாந்த் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post