அடங்காத கொரோனா: 2-வது அலையில் இந்தியாவில் 420 மருத்துவர்கள் மரணம் - Yarl Voice அடங்காத கொரோனா: 2-வது அலையில் இந்தியாவில் 420 மருத்துவர்கள் மரணம் - Yarl Voice

அடங்காத கொரோனா: 2-வது அலையில் இந்தியாவில் 420 மருத்துவர்கள் மரணம்
கொரோனா வைரஸ் 2-வது அலையில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் இதுவரை 420 மருத்துவர்கள் மரணமடைந்துள்ளதாக இந்திய மருத்துவக் கூட்டமைப்பு (ஐஎம்ஏ) தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் 2-வது அலையில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலான மருத்துவர்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். முதல் அலையைவிட, கொரோனா 2-வது அலை மிகவும் மோசமாக இருந்து வருகிறது'' என ஐஎம்ஏ தலைவர் மருத்துவர் ஜெயலால் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து ஐஎம்ஏ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

''கொரோனா வைரஸ் 2-வது அலையில் சிக்கி இதுவரை நாடு முழுவதும் 420 மருத்துவர்கள் உயிரிழந்தனர். இதில் ஐஎம்ஏ முன்னாள் தலைவரும், பிரபல மருத்துவருமான கே.கே.அகர்வால், டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் பணியாற்றிய 25 வயது இளம் மருத்துவர் அனாஸ் முஜாகித் உள்ளிட்ட பலர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.

அதிகபட்சமாக டெல்லியில் இதுவரை 100 மருத்துவர்களும், அடுத்ததாக பிஹார் மாநிலத்தில் 96 மருத்துவர்களும் இதுவரை கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் 41 மருத்துவர்கள், ஆந்திராவில் 22 மருத்துவர்கள் உயிரிழந்தனர். குஜராத்தில் 31 மருத்துவர்கள், தெலங்கானாவில் 20 மருத்துவர்கள், மேற்கு வங்கம், ஒடிசாவில் தலா 16 மருத்துவர்கள், மகாராஷ்டிராவில் 15 மருத்துவர்கள் உயிரிழந்தனர்.

கொரோனா முதல் அலையில் 748 மருத்துவர்கள் உயிரிழந்த நிலையில் 2-வது அலை முடிவதற்குள் 420 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்''.

இவ்வாறு ஐஎம்ஏ தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தின் உச்சத்துக்குப் பிறகு டெல்லியில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. இதற்கு முன்னதாக 270 மருத்துவர்கள் கொரோனாவுக்குப் பலியானதாக ஐ.எம்.ஏ. தெரிவித்திருந்தது. முன்னாள் ஐ.எம்.ஏ தலைவர் டாக்டர் கேகே அகர்வால், கொரோனாவுடன் நீண்ட நாளைய போராட்டத்திற்குப் பிறகு இறந்தார், அவருக்கு வயது 65.

இவர் இரண்டு டோஸ்கள் வாக்சினையும் எடுத்துக் கொண்டார். ஆனாலும் பலனளிக்காமல் திங்களன்று காலை 11.30 மணிக்கு இறந்தார்.

ஐஎம்ஏ பதிவுகளின் படி முதல் அலையில் 748 மருத்துவர்கள் பலியாகினர்.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2,57,299 பேருக்கு புதிதாகக் கொரோனா தொற்றியுள்ளது, ஒரே நாளில் 4,194 பேர் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post