பெலாரஸ் நாட்டின் மீது ஐரோப்பிய ஒன்றியம் உடனடி தடைவிதிப்பு..! - Yarl Voice பெலாரஸ் நாட்டின் மீது ஐரோப்பிய ஒன்றியம் உடனடி தடைவிதிப்பு..! - Yarl Voice

பெலாரஸ் நாட்டின் மீது ஐரோப்பிய ஒன்றியம் உடனடி தடைவிதிப்பு..!
கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸ் நகரில் பெலாராஸ் எதிர்க்கட்சி தலைவருடன் இணைந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று திரும்பிய  பத்திரிகையாளர் ரோமன் புரோட்டசெவிச் 
 லிதுவேனியா தலைநகர் வில்னியசுக்கு திரும்புவதற்காக ரியான்ஏர் நிறுவன விமானத்தில் புறப்பட்டார். 

விமானம் பெலாரஸ் நாட்டு வான் மண்டலம் வழியாக சென்று கொண்டிருந்தபோது, திடீரென பெலாரஸ் விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானிக்கு ஒரு அழைப்பு வந்தது.

விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், எனவே, பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க் விமான நிலையத்தில் அவசரமாக விமானத்தை தரை இறக்குமாறும் அதில் பேசிய அதிகாரி கூறினார்.

அதே சமயத்தில், பெலாரஸ் நாட்டு போர் விமானம் ஒன்று, அந்த பயணிகள் விமானத்தை வழிமறித்து அரவணைத்து கூட்டிச் சென்றது. இதனால், வேறு வழியின்றி மின்ஸ்க் விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது.

அதில் இருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டனர். பத்திரிகையாளர் ரோமன் புரோட்டசெவிச்சை பெலாரஸ் பொலீசார் கைது செய்தனர். 

அவருடன் வந்த பெண்ணும் கைது செய்யப்பட்டார். அப்போது, தனக்கு மரண தண்டனை விதித்து விடுவார்கள் என்று புரோட்டசெவிச் கூச்சலிட்டார். 
அதிபர் அலெக்சாண்டர் லுகாசெங்கோ நேரடி உத்தரவின்பேரில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பெலாரஸ் அரசாங்க ஊடகம் தெரிவித்தது.

இந்த செயலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது ஒரு அதிர்ச்சிகரமான நடவடிக்கை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வோன்டெர் லியன், இந்த சட்டவிரோத செயலுக்கு பெலாரஸ் பலத்த பின்விளைவுகளை சந்திக்கும் என கூறினார். 

இத்தாலி, சைப்ரஸ், லாட்வியா ஆகிய நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், பத்திரிகையாளர் கைது செய்யப்பட்ட விவகாரம் பற்றி ஐரோப்பிய யூனியன் ஒன்று கூடி ஆலோசனை கூட்டம் மேற்கொண்டது. இதில் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பல்வேறு தலைவர்களும் பங்கேற்றனர்.

இதன் முடிவில், பத்திரிகையாளர் கைது விவகாரம் மற்றும் விமானம் வழிமறிக்கப்பட்டு, தரையிறங்கச் செய்தது ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 

இந்த விவகாரத்தில் பெலாரஸ் நாடு மீது புதிய தடைகளை விதிக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்து உள்ளது. இதேபோல் ஐரோப்பிய யூனியன் வான்வழியே பெலாரஸ் நாட்டு விமானங்கள் பறப்பதற்கும் தடை விதித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post