கொரோனா விதிகளை மீறி, மதுரையில் வானில் திருமணம்: விமான ஊழியர்கள் மீது நடவடிக்கை - Yarl Voice கொரோனா விதிகளை மீறி, மதுரையில் வானில் திருமணம்: விமான ஊழியர்கள் மீது நடவடிக்கை - Yarl Voice

கொரோனா விதிகளை மீறி, மதுரையில் வானில் திருமணம்: விமான ஊழியர்கள் மீது நடவடிக்கைமீனாட்சியம்மன் கோவில் மேல் விமானம் பறந்தபோது நடு வானிலேயே மணமகன் மணமகளுக்கு தாலியை கட்டினார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது

மதுரையைச் சேர்ந்த தம்பதி வானில் விமானத்தில் பறந்தபடி திருமணம் செய்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,  இது தொடர்பான விசாரணைக்கு மத்திய விமான போக்குவரத்து துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை கோரிப்பாளையத்தை சேர்ந்த தம்பதியினர் ராகேஷ் மற்றும் தீக்க்ஷு. இவர்கள் இருவரும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். 

ஊரடங்கு காலம் என்பதனால் வீட்டில் எளிய முறையில் திருமணம் செய்து கொண்ட இவர்கள், நேற்று சில தளர்வுகள் அரசு அறிவித்திருந்த நிலையில் மீண்டும் புதுமையாக திருமண நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய திட்டமிட்டனர்.

அதன்படி, இரு குடும்பத்தினர் திட்டமிட்டு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்து பறக்கும் விமானத்தில் திருமணம் செய்ய முடிவு செய்தனர். 

இதன் தொடர்ச்சியாக இரு குடும்பத்தை சேர்ந்த 130 நபர்கள் கொரோனா பரிசோதனை செய்து 'நெகட்டிவ்' சான்றிதழ் பெற்று மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்வதற்காக  ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் சிறப்பு விமானம் ஒன்றை பதிவு செய்தனர்.

நேற்று காலை சிறப்பு விமானத்தில் பயணம் செய்த புதுமண தம்பிதியினர்கள் மதுரை மினாட்சியம்மன் கோவில் மேல் விமானம் பறக்கும்போது,   உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையானது.

திருமணத்தில் பங்கேற்க அதிகபட்சம் 50 உறவினர்களுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், அதற்கும் மேலான எண்ணிக்கையில் உறவினர்கள் முன்னிலையில் திருமணத்தை நடத்தி அரசின் கொரோனா தடுப்பு விதிகளை மீறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.  விமானத்தில் பயணம் செய்த பலரும் முககவசம் அணியவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த நிகழ்வு  மத்திய விமான போக்குவரத்து துறை இயக்குநரகத்தின் கவனத்துக்கு வந்தது. இதையடுத்து, திருமணம் நடந்த விமானத்தின் ஊழியர்கள் அனைவரும் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளித்துள்ள ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்,  திருமணத்திற்கு பிந்தைய  உல்லாச பயணத்திற்காக மதுரையைச் சேர்ந்த ஏஜெண்ட் ஒருவர் விமானத்தை பதிவு செய்ததாகவும், அரசின் தடுப்பு விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என அவரிடம் அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளது. 

  எனினும் பயணிகள் அதனை பின்பற்றவில்லை என்பதால் விதிகளுக்கு உட்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post